• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிமுக ஆட்சியால் இந்த ஆட்சி அவதிப்படுகிறது- துரைமுருகன்

|

Duraimurugan
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் எந்த மின் உற்பத்தி திட்டமும் செயல்படுத்தப்படாததே தற்போது தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு காரணம் என்றும்,

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மின் உற்பத்தி திட்டப் பணிகள் நிறைவடையும் போது 2011-12ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையே இருக்காது என்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்டசபையில் நடந்த மின்சாரத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சார்பில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும் பூதாகாரமாக பெரிதுபடுத்திப் பேசியும், எழுதியும் வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 11,000 மெகாவாட் ஆகும். ஆனால் தற்போது 8,000 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 3,000 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.

இதில் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வெளி மார்க்கெட்டிலிருந்து விலை கொடுத்து வாங்கப்படுகிறது. எஞ்சிய ஆயிரம் மெகா வாட் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 30 சதவீத மின்வெட்டு அமலில் உள்ளது. கிராமப் பகுதிகளில் விவசாயிகளுக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின் வெட்டு கிடையாது. மற்ற நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுழற்சி முறையில் 3 மணி நேரத்திற்கு மிகாமல் மின் வெட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தென் மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கும்போது காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் மின்சார வெட்டு இல்லை. இந்திய அளவில் பல மாநிலங்களில் மின்சார வெட்டு உள்ளது. ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் 2 மணி நேர மின்சார வெட்டு உள்ளது. பெங்களூரில் 2 மணி நேர மின் வெட்டு உள்ளது. ஆனால் சென்னையில் மின் வெட்டு கிடையாது.

தமிழ்நாட்டின் பிற நகரங்களில் 3 மணி நேர மின் வெட்டு உள்ளது. ஆனால் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் 4 மணி நேரமும் மகாராஷ்டிராவில் 10 மணி நேரமும், உத்திரப் பிரதேசத்தில் 4 மணி நேரமும், பஞ்சாபில் 5 மணி நேரமும், ஹரியானாவில் 4 மணி நேரமும் மின் வெட்டு அமலில் உள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் 3 மணி நேர மின் வெட்டு உள்ளது. ஆனால், ஆந்திராவில் 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையிலும், கர்நாடகாவில் 12 மணி நேரமும், உத்திரப் பிரதேசத்தில் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரையிலும், பஞ்சாபில் 5 மணி நேரமும், ஹரியானாவில் 12 மணி நேரமும் மின் வெட்டு உள்ளது.

மின் பற்றாக்குறைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 2005-06ம் ஆண்டில் தமிழகத்தின் மின் தேவை 8,209 மெகா வாட்டாக இருந்தது. இப்போது 11,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதே போல தனி நபர் மின்சார பயன்பாடு 2005-06ம் ஆண்டில் 860 யூனிட்டாக இருந்தது. இது 2009-10ல் 1,080 யூனிட்டாக உயர்ந்துள்ளது. அகில இந்திய சராசரியே 733 யூனிட்தான்.

2005-06ம் ஆண்டில் 53,148 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 2008-09ல் இது 64,713 மில்லியன் யூனிட்டாக அதிகரித்தது. இருந்தபோதிலும் மின் தேவை அதிகரித்து வருகிறது.

2005-06ம் ஆண்டில் 1.78 கோடியாக இருந்த மின் நுகர்வோர் எண்ணிக்கை 2008-09ல் 2.12 கோடியாக உயர்ந்தது. எனவே மின் உற்பத்தி அதிகரித்த போதிலும் மின்சார தேவை அதிகரித்து வருவதால் பற்றாக்குறை உள்ளது.

மேலும் கல்பாக்கம், நெய்வேலி ஆகிய இடங்களில் மின்சார உற்பத்தி குறைந்து விட்டது. கூடங்குளத்தில் மின் உற்பத்தி தாமதமாகி வருகிறது. பருவ மழை பொய்த்ததால் நீர் மின்சாரம் கிடைக்கவில்லை. இத்தகைய காரணங்களால்தான் தமிழ்நாட்டில் மின் வெட்டு உள்ளது. அதுவும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மின் வெட்டு குறைவாகவே உள்ளது.

கடந்த ஆட்சியில் எந்த மின் உற்பத்தி திட்டத்தையும் செயல்படுத்தாததே தற்போதைய நிலைக்கு காரணமாகும். 3 திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால் அதனை செயல்படுத்தவில்லை. இந்த ஆட்சியில் அந்த மூன்று திட்டங்களையும் ஆரம்பித்து, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டங்கள் மூலம் 2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மின்சார உற்பத்தி தொடங்கும்.

மேலும் முந்தைய திமுக ஆட்சியில் 11 மின் திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாகவே கடந்த அதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லாமல் இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் எந்த மின் திட்டத்தையும் செயல்படுத்தாததால்தான் இந்த ஆட்சி அவதிப்பட்டு வருகிறது.

11 திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது 2011-12ம் ஆண்டில் நமக்கு மின்சாரம் மிகையாக இருக்கும். அப்போது மின் வெட்டே இருக்காது. அப்போதும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே தொடரும். இதே முதல்வர்தான் ஆட்சியில் இருப்பார் என்றார் துரைமுருகன்.

முன்னதாக மின்துறை கொள்கை விளக்க குறிப்பை துரைமுருகன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் கையிருப்பில் உள்ள மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 15,800 மெகாவாட்டாகும். சென்ற ஆண்டைவிட 700 மெ.வா. கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது.

மே மாதம் மின்சார நிலைமையின் கண்ணோட்டம்:- சராசரி மின் தேவை 11,200 மெ.வா. சராசரி கையிருப்பு 8100 மெ.வா. மின் கட்டுப்பாடு மூலம் நிவாரணம் 1000 மெ.வா. கொள்முதல் 1912 மெ.வா. பற்றாக்குறை 188 மெ.வா.

2010 ஜுன் மாதம் முதல் 2011 மே மாதம் வரை உச்சகட்ட நேரத்தில் (மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) மின் நிலைமை பற்றி ஒரு கண்ணோட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மின் பற்றாக்குறை ஜுன் மாதம் 1690 மெ.வா., ஜுலை 1730, ஆகஸ்டு 1460, செப்டம்பர் 2150, அக்டோபர் 3050, நவம்பர் 2600, டிசம்பர் 2620, 2011-ம் ஆண்டு ஜனவரி 3430, பிப்ரவரி 2010, மார்ச் 2530, ஏப்ரல் 2360, மே 1570 மெகாவாட் அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதே காலகட்டத்தில் பகல் நேரத்திலும் மின் பற்றாக்குறை 1700 முதல் 3600 மெ.வா. வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்பாக்கம், கைகா அனல் மின் நிலையங்கள் மற்றும் நெய்வேலி விரிவாக்கத்திட்டம் ஆகியவற்றின் மின் உற்பத்தி குறைவு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயலாக்கத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் ஆகியவை 2009-10ம் ஆண்டில் மின் பற்றாக்குறைக்கான முக்கிய காரணங்களாகும்.

மின் பற்றாக்குறையையும் கையிருப்பையும் சமன் செய்ய சில மின் கட்டுப்பாட்டு முறைகளை கொண்டுவரவேண்டிய கட்டாயத்திற்கு மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள சுமார் 2000 முதல் 2500 மெ.வா. வரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

2010-11ம் ஆண்டு 12,860 மெ.வா., 11-12ம் ஆண்டு 14,224 மெ.வா., 12-13-ம் ஆண்டு 15517 மெ.வா. மின்சாரம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலாக்கத்தில் உள்ள திட்டங்களில் இருந்து 2010-11ம் ஆண்டில் 1400 மெ.வா., 11-12ம் ஆண்டில் 3316 மெ.வா., 12-13-ம் ஆண்டில் 1222 மெ.வா., 13-14ம் ஆண்டில் 1860 மெ.வா. மின்சாரமும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X