For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரீஸ்... ஒரு தேசம் திவாலான கதை!

By Chakra
Google Oneindia Tamil News

Greece
ஏதென்ஸ்: ஐரோப்பாவின் மிகப் பெருமைக்குரிய சேதம் கிரீஸ் எனும் கிரேக்கம். உலக நாகரிகத்தின் பிறப்பிடமாகப் பார்க்கப்பட்ட நாடு.

பொருளாதார வளர்ச்சியிலும், அரசியல் ஆளுமையிலும் உலகின் பெரிய வல்லரசுகளுக்குச் சமமான அந்தஸ்து பெற்ற கிரீஸ் இன்று மொத்தமாக திவால்!.

முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அந்த நாடு. வர்ணிக்க முடியாத அளவு மோசமான பணவீக்கம், மைனஸ் 3 ஆக பயமுறுத்தும் ஜிடிபி வீழ்ச்சி, மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன், எங்கும் வேலையின்மை ஓலம்... இனி மீள முடியுமா என்ற பயத்திலும் சோகத்திலும் மக்கள். நிலைமை கைமீறிப் போனதில் உள்நாட்டுக் கலகம் மூள ஆரம்பித்திருக்கிறது. நாடு தழுவிய புரட்சி வெடிக்குமோ என்ற கேள்வி எங்கும் தொக்கி நிற்கிறது.

என்ன ஆனது இந்த நாட்டுக்கு... எப்படி இந்த நிலைமை வந்தது?

எல்லாவற்றுக்கும் மூல காரணம் அரசின் தவறான நிதிக் கொள்கைதான். ஐரோப்பிய யூனியனில் முக்கிய அங்கமான கிரீஸ், 2001ம் ஆண்டிலிருந்து யூரோ நாணயத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவழிக்கிறோம் என்று கூறி, பல ஆயிரம் கோடி யூரோக்களை கடன் வாங்கிக் குவித்துள்ளது கிரீஸ். இன்றைய தேதிக்கு கிரீஸின் கடன் அளவு 300 பில்லியன் யூரோக்கள் (ஒரு யூரோவி்ன் மதிப்பு ரூ. 58). நாட்டின் மொத்த உற்பத்தியை விடச 125 சதவீதம் அதிகம் இந்தக் கடன்!.

கடன்களுக்கான தவணை மற்றும் வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பல லட்சம் கோடி யூரோக்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆனால் கஜானாவில் பணமில்லை. காரணம் உள்நாட்டில் நடக்கும் பெருமளவு வரி ஏய்ப்பு. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு வருமானத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள், வரி செலுத்தவே மறுக்கின்றனர்.

உற்பத்தியிலும் பெரும் வீழ்ச்சி. கடன்களை மட்டுமே நம்பியிருந்த நாட்டுக்கு, அந்தக் கடன்வரத்து முற்றிலும் நின்றுபோக, விழி பிதுங்கியது. நாட்டின் மொத்த உற்பத்தியோ பூஜ்யமாகி, மைனஸுக்கும் போய்விட்டது.

இதையெல்லாம் குறிப்பிட்ட காலம் வரை சாமர்த்தியமாக மறைத்து வந்த கிரீஸ், சமாளிக்க முடியாத நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் உண்மையைச் சொன்னது. அதுவரை கிரீஸ் மீதிருந்த நம்பிக்கையில் கடன் கொடுத்து வந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இப்போது கடனை திருப்பிக் கேட்கத் துவங்கின.

கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயத்தில் தங்கள் டெபாஸிட்டுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்துள்ளனர்.

இப்படி கிரீஸில் ஆரம்பித்த பொருளாதார நச்சுச் சுழல் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனையே பாதிக்க, இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

கிரீஸுக்கு இந்த ஆண்டு 25 பில்லியன் யூரோ அளவுக்கு குறைந்த வட்டிக்கு கடன் அளித்து நிலைமையைச் சமாளிக்க வைக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனமும் உதவ முன் வந்துள்ளது.

ஆனால், கிரீஸ் வாங்கிய பழைய கடன்களுக்கான ஆண்டு தவணையே 55 பில்லியன் யூரோ எனும்போது, இந்த 25 பில்லியன் யூரோவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, உள்நாட்டில் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துப் பொருள்கள், பணிகளின் வரிகளை தாறுமாறாக உயர்த்திவிட்டது கிரீஸ் அரசு. உபயம்- சில தனியார் நிறுவன முதலாளிகள். இதனால் கடுப்பான மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் போராட.

கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் மூண்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆக்ரோஷமான போராட்டமாக அமைந்துவிட்டது. ஏதென்ஸில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கலவரங்கள் மூண்டன. இந்தக் கலவரங்களில் 3 பேர் பலியாகியதும் நேற்று நடந்தது.

'பிரான்ஸ் புரட்சிக்கு முன்பு வெர்சைல்ஸ் நகரில் குவிந்த மக்களின் ஆக்ரோஷத்தைப் படித்திருக்கிறோம். அதை நேற்று கிரீஸில் நேரில் பார்த்தோம்', என்கிறார் ஒரு செய்தியாளர்.

கிரீஸின் இந்த நிலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. அமெரிக்காவின் வீழ்ச்சி எப்படி உலகம் முழுக்க கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதுபோல, கிரீஸின் வீழ்ச்சி ஐரோப்பா மட்டுமின்றி, ஆசிய நாடுகளையும் பாதிக்கும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.

கிரீஸின் இந்த வீழ்ச்சியால், யூரோ நாணயத்தின் மதிப்பே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் 1.45 டாலராக இருந்த யூரோ மதிப்பு, இன்று 1.27 டாலராக குறைந்துவிட்டது.

நிலைமை இப்படியே போனால் டாலரை விட யூரோ மதிப்பு குறைந்துவிடும். இதனை ஐரோப்பிய யூனியன் நிச்சயம் விரும்பாது... அத்தகைய சூழலில் கிரீஸை ஐரோப்பிய யூனியனை விட்டேகூட விலக்க வேண்டிய நிலை வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

சர்வதேச பங்கு வர்த்தகத்திலும் கிரீஸ் வீழ்ச்சியின் தாக்கம் தெரியத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இன்று கூடிப் பேசவிருக்கின்றனர். அதில்தான் கிரீஸின் தலை எழுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது!.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X