For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது தான் ஜெயலலிதாவின் தைரியமா?-துரைமுருகன்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: யாருடைய ஆட்சியில் அதிக குற்றங்கள் நடந்தன என்று அதிமுக, திமுக இரு தரப்பினரும் சட்டசபையில் மாறி, மாறி பட்டியலை வாசித்ததால் பெரும் மோதல் உருவானது.

காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாத விவரம்:

வைத்திலிங்கம் (அதிமுக): இந்த ஆட்சியில் காவல்துறை, நீதித்துறை, ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள், வக்கீல் போன்றவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்?. தமிழக காவல்துறையை சுயமாக செயல்பட அனுமதித்தால் இழந்த பெருமையை அது மீட்டெடுக்கும். காவல்துறைக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அதனால் குற்றங்கள் குறைந்துள்ளதா?.

காவல்துறையில் உயர்அதிகாரிகள் பேச்சை கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கேட்பதில்லை. காவல்துறை செயலற்றுப்போய் உள்ளது. காவல்துறை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அற்று போய்விட்டது.

தா.கிருஷ்ணன் கொலை வழக்கு...

தா.கிருஷ்ணன் கொலை வழக்கு போன்றவற்றில் மேல்முறையீடு செய்யாத அரசு, புரட்சித் தலைவி அம்மா மீதான வழக்கில் மட்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?.

சென்னையில் பகலில் கூட பெண்கள் தனியாக இருக்க முடியவில்லை. 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் சென்னையில் 30 கொலைகள் நடந்துள்ளன.

எம்எல்ஏவையே அடித்துக் கொன்றார்கள்...

அமைச்சர் துரைமுருகன்: நானும் உங்கள் ஆட்சியில் நடந்த கொலைகளை தொகுத்து சொல்ல முடியும். குற்றம் செய்வோர் செய்து கொண்டுதான் இருப்பார்கள். அதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியது அரசின் கடமை. பத்திரிகையில் வந்ததை பட்டியல் போட்டு இவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் நடந்தவற்றை சொன்னால், 2 நாள் தேவைப்படும். உங்கள் ஆட்சியில் கூடத்தான் எம்எல்ஏவையே அடித்துக் கொன்றார்கள். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கொலை செய்யப்பட்டார்.

(அதிமுகவினர் கூச்சல்)

செங்கோட்டையன் (அதிமுக): கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கொல்லப்பட்டது பற்றி அமைச்சர் பேசினார். அது எப்படி நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு வாரத்துக்குள்ளாக வட மாநிலத்தை சேர்ந்த கொலைகாரர்களை நாங்கள் கைது செய்தோம். சட்டசபையில் அமைச்சர் எதிருக்கு புதிராக பேசக்கூடாது.

துரைமுருகன்:- எம்எல்ஏக்களை அடித்துக் கொல்வது உங்கள் போலீஸ் தொழில்.

(அதிமுக உறுப்பினர்கள் கூச்சல்)

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): ஜனநாயக முறையில், பொறுப்பான இடத்தில் இருந்து எங்கள் கருத்துக்களை பேசுகிறோம். அது எதிர்க்கட்சியின் கடமை. அதற்கு பதில் சொல்லும் பொறுப்பு ஆட்சியில் உள்ளவர்களுக்கு உள்ளது.

துரைமுருகன்: அதிமுக உறுப்பினர் பட்டியல் போடுகிறார். நானும் உங்கள் ஆட்சியில் நடந்த குற்றப்பட்டியலை கையில் வைத்திருக்கிறேன். (தன் கையில் இருந்த பட்டியலை படிக்கத் தொடங்கினார்)

(அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கூச்சல்)

ரொம்பவே துள்ளுகிறார்....

சபாநாயகர்: அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் ரொம்பவே துள்ளுகிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்: அதிமுக உறுப்பினர் பட்டியல் போடுகிறார். 2002ல் 1,647 கொலைகள் நடந்தனவே. அதையும் பட்டியல் போட தயாரா?

வைத்திலிங்கம் (அதிமுக): திமுக பிரமுகரே கூட ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அம்மா மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். இன்னும் ஒரு வழக்கு மட்டுமே உள்ளது. ஆனால், நீங்கள் சர்க்காரியா கமிஷனை அமைச்சரவையில் வைத்து....

'அம்மா' மீது எத்தனை வழக்கு...

அமைச்சர் பரிதி இளம்வழுதி: 'அம்மா' மீது எத்தனை வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். கலைஞர் மீது வழக்கு போட்டீர்கள். ஆனால், குற்றப்பத்திரிகை கூட உங்களால் தாக்கல் செய்ய முடியவில்லை.

வைத்திலிங்கம்: அம்மா பல வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சபாநாயகர்: என்ன வழக்குகள் என்று சொல்லுங்கள். பொதுவாக பேசாதீர்கள்.

வைத்திலிங்கம்: என் மீது போடப்படும் வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வேன் என்று அம்மா சொன்னார்.

இதுதான் ஜெயலலிதாவின் தைரியமா?.....

துரைமுருகன்: பெங்களூர் கோர்ட்டில் நடக்கும் சொகுசு ஹோட்டல் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற கோர்ட்டுக்கு போய் இருக்கிறாரே? இதுதான் தைரியமா? (தொடர்ந்து அதிமுகபிரமுகர் போதை மது தயாரித்தது பற்றி துரைமுருகன் பேச ஆரம்பித்தார்)

(அதிமுகவினர் எழுந்து நின்று கூச்சல்)

செங்கோட்டையன் (அதிமுக): தா.கிருஷ்ணன் வழக்கில் மேல்முறையீடு செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வெளியில் இருக்கும் நபர் பற்றி சபையில் பேசக்கூடாது.

அமைச்சர் பொன்முடி: ஜெயலலிதா சட்டசபை உறுப்பினர் தான். இதனால் இங்கு அவரைப் பற்றி பேசலாம்.

நீங்கள் எல்லாம் உத்தமர்தானா....?

வைத்திலிங்கம் (அதிமுக): நான் கேட்கிறேன். (திமுகவினரை நோக்கி விரலை நீட்டி) நீங்கள் எல்லாம் உத்தமர்தானா சொல்லுங்கள்

மு.க.ஸ்டாலின்: நீங்கள் ஒரு விரலை நீட்டினால். 4 விரல்கள் உங்களை நோக்கி இருப்பதை மறந்துவிட வேண்டாம்.

செங்குட்டுவன் (திமுக): போலீசார் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருப்பதாக கூறினார்கள். இது உண்மையல்ல, பென்னாகரம் இடைத்தேர்தலின் போது முதல்வரின் வாகனத்தையே போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி நடந்ததுண்டா?

செங்கோட்டையன் (அதிமுக): பென்னாகரம் தேர்தலைப்பற்றி கூறினார். இதேபோல திருச்செந்தூர், வந்தவாசி, திருமங்கலத்திலும் நடந்ததா?

பிரசாரத்திற்கு வராமலேயே வெற்றி....

ஸ்டாலின்: தேர்தல் கமிஷனின் உத்தரவின் அடிப்படையில் போலீசார் தன்னிச்சையாக செயல்பட்டது என்பதைத்தான் அவர் குறிப்பிட்டார். வந்தவாசியிலும், திருச்செந்தூரிலும் முதல்வர் பிரசாரத்திற்கு வராமலேயே வெற்றி பெற்றிருக்கிறோம்.

பன்னீர்செல்வம் (அதிமுக): திருச்செந்தூர் தொகுதியில் நாங்கள் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது போலீசார் அத்துமீறி நுழைந்து பரிசோதனை செய்த வரலாறும் நடந்தது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள்...

அமைச்சர் துரைமுருகன்: காஞ்சீபுரத்தில் தேர்தல் நடந்தபோது பெண் போலீசாரை கொண்டு என்னையும், பொன்முடியையும் சோதனை என்ற பெயரில் வெளியே தள்ளினார்கள். இதை நீங்கள் சொல்லலாமா?

பன்னீர்செல்வம்: யார் உத்தரவிட்டார்கள் என்று கேட்டதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு வழங்கியது என்றார்கள். நான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கேட்டபோது நான் ஆணை வழங்கவில்லை என்றார். அவர் இந்திய தேர்தல் ஆணையரிடம் கேட்டு அவரும் வழங்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

பொன்னையன் என்று கூறினார்கள்....

அமைச்சர் துரைமுருகன்: எங்களை சோதனை செய்தபோது, யார் உத்தரவிட்டார்கள் என்று கேட்டதற்கு அமைச்சர் பொன்னையன் என்று கூறினார்கள்.

பீட்டர்அல்போன்ஸ் (காங்கிரஸ்): சாத்தான்குளம் தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது எங்கள் கட்சியின் தேர்தல் அலுவலகங்களை எல்லாம் தீ வைத்து எரித்துவிட்டார்கள். இதை அதிமுக நண்பர்கள் மறந்துவிடக் கூடாது.

செங்கோட்டையன் (அதிமுக): தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி தொகுதிக்கு சம்மந்தம் இல்லாமல் ஒரு மாவட்ட கட்சி அலுவலகத்தில் சோதனை செய்ததும் உங்கள் ஆட்சியில் தான் நடந்தது.

லுங்கியை கூட அணியவிடாமல் கைது...

செங்குட்டுவன் (திமுக): எங்கள் தலைவரை நடுராத்திரியில் தட்டி எழுப்பி, லுங்கியை கூட அணியவிடாமல் கைது செய்தீர்களே? ஏன் கைது செய்தீர்கள் என்று கூறமுடியுமா? அந்த வழக்கை நடத்த உங்களுக்கு தெம்பு உண்டா?

பன்னீர்செல்வம் (அதிமுக): பிரச்சனையில் இருந்து விலகி முதல்வரை கைது செய்தது பற்றி கூறியிருக்கிறார். எங்கள் தலைவரை கைது செய்த சம்பவமும் நடந்திருக்கிறது. சென்னை மாநகராட்சி தேர்தலின்போது 99 வட்டங்களில் நடந்த தேர்தலை செல்லாது என்று ஹைகோர்ட் கூறிய வரலாறு வேறு எந்த ஆட்சியிலாவது உண்டா?

மு.க.ஸ்டாலின்: முதல்வரை கைது செய்தபோது நடந்து கொண்ட விதம் பற்றி தான் அவர் கூறினார். உங்கள் தலைவரை கைது செய்தபோது எவ்வளவு மரியாதையோடு, கண்ணியத்தோடு கைது செய்யப்பட்டார் என்பது நாட்டுக்கு தெரியும். சென்னை மாநகராட்சி தேர்தலின் போது ஹைகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டு மறுதேர்தலுக்கு உத்தரவிட்டவர் தலைவர் கருணாநிதி.

இவ்வாறு விவாதம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X