For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார மண்டலத்துக்கு நிலம்: எந்த முறைகேடும் நடக்கவில்லை-ஸ்டாலின்

By Chakra
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: சென்னை தரமணியில் அமையும் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலத்துக்கு நிலம் வழங்கப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று சட்டசபையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சட்டசபையில் இன்று தரமணி தொழில்நுட்பப் பூங்கா தொடர்பாக அதிமுக சார்பில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானத்தில் மீது விவாதம் நடந்தது. அதன் விவரம்:

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): 28-4-2008 அன்று தரமணியில் தொழில் நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக டிட்கோ நிறுவனம், டாடா ரியாலிட்டி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. இதன்படி கூட்டாக ரூ. 3,000 கோடியில் ஒருங்கிணைந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து அதில் பன்னாட்டு மாநாட்டு கூடம், நட்சத்திர ஹோட்டல், அடுக்குமாடி கட்டிடம் ஆகியவை அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் சில ஐயப்பாடுகள் உள்ளன.

(அப்போது பன்னீர்செல்வம் சில குற்றச்சாட்டுகளை கூறினார். உடனே துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரத்தை சபாநாயகரிடம் கொடுக்காமல் சந்தேகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டை கூறக்கூடாது என்றார். இதையடுத்து பன்னீர்செல்வம் கூறிய குற்றச்சாட்டுகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன)

பன்னீர்செல்வம்: ஒப்பந்தம் தொடர்பான ஐயப்பாடுகளுக்கு விளக்கமும், வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும்.

முதல்வர் கருணாநிதி: உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளுக்கு ஆதாரம் இல்லாமல் இந்த அவையில் பேசக்கூடாது. ஒவ்வொருவரும் அதுபோல் பேசினால் எல்லாமே ஒரு புரியாத புதிராக ஆகிவிடும்.
(அதிமுகவினர் எழுந்து நின்று கூச்சல்)

சபாநாயகர்: ஆதாரம் இருந்தால் என்னிடம் கொடுத்து விட்டு பேசலாம்.

அமைச்சர் அன்பழகன்: உறுப்பினர்கள் ஒரு சந்தேகத்தை எழுப்புவதில் தவறு இல்லை. ஆனால் அது அவதூறாக இருந்தால் அவையில் எழுப்ப அனுமதி கிடையாது. குற்றச்சாட்டு தெரிவித்து பேசுபவர்கள் அதுபற்றிய ஆதாரங்களை சபாநாயகரிடம் கொடுத்துவிட்டு பேசலாம். இல்லையென்றால் அனுமதி இல்லை.

பன்னீர்செல்வம்: டிட்கோ தொழில்நுட்ப பூங்கா தொடர்பாக அரசு மானியமாக கொடுத்தது எவ்வளவு நிலம், என்ன சலுகைகள் அளிக்கப்பட்டன என்பதை அரசு விளக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின்: நேற்று 10.5.2010 காலை 9.10 மணி அளவில் தட்டச்சு கூடச் செய்யாமல், அவசர அவசரமாக ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தை கையாலேயே எழுதி- அதிலே அதிமுக உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு, கொடுத்து விட்டு- அந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை உடனடியாக அவையிலே விவாதிக்க வேண்டுமென்று கேட்டு பதிலளிக்க அரசு தயாராக நேரம் கொடுக்க வேண்டுமென்று பேரவைத்தலைவர் சொல்லியும் கேட்காமல் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததோடு பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடமும் நேற்று நமது முதல்வர் இங்கே கூறியதைப் போல இந்தச் செய்தியை பூதாகரமாகத் தெரிவித்திருக்கிறார்கள். சொல்வதற்கே நாக்கூசும் சொற்களைப் பயன்படுத்தி கோஷம் போட்டியிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் அவர்கள் எழுப்பிய பிரச்சனை திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் அல்ல. 2007ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றினை அமைப்பது பற்றிய பிரச்சனையாகும். தொழில் துறை மானியம் இந்த அவையிலே விவாதிக்கப்பட்டபோதே அது பற்றி விரிவாகப் பேசியிருந்தால், அப்போதே அதற்கான விளக்கம் அரசின் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும்.

இருந்தாலும் அவர்கள் செய்தியாளர்களிடம் சென்று இதுபற்றி பெரிதாகச் சொல்லியிருக்கின்ற காரணத்தால் மடியிலே கனம் இல்லாத இந்த அரசு, இதற்கான விளக்கத்தை இந்த அவையிலே தெரிவிக்க விரும்புகிறது.

2007-08ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில் தொழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, தரமணியில் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்கா (டைடல் பார்க்-3) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் குறித்து டிட்கோ நிறுவனம் அரசுக்கு ஒரு முன்மொழிவினை அனுப்பியது. அதன் அடிப்படையில் தரமணியில் கானகம் மற்றும் திருவான்மியூர் கிராமங்களில் உள்ள 25.27 ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கவும், இத்திட்டம் டிட்கோ நிறுவனம் மற்றும் தனியார் முதலீட்டாளர்களின் கூட்டு முற்சியாகச் செயல்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்தது.

தனியார் முதலீட்டாளர் என்றதும் தன்னிச்சையாக இந்த அரசு டாட்டா நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விடவில்லை. தனியார் முதலீட்டாளரை டிட்கோ நிறுவனம் ஒளிவு மறைவற்ற திறந்த முறையிலான டெண்டர் அடிப்படையில்தான் தேர்ந்தெடுத்தது. 14-5-2007 அன்று முக்கிய நாளேடுகளில் டெண்டர் கோரி விளம்பரம் செய்யப்பட்டது.

முதல் கட்டமான தகுதியை நிரூபிக்கும் அழைப்பில் 17 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றில் 15 நிறுவனங்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன. அவைகளில் 7 நிறுவனங்கள் தகுதி வாய்ந்தவைகளாகக் கண்டறியப்பட்டன.

நிலத்தின் விலை வழி காட்டி மதிப்பீடு அல்லது சந்தை மதிப்பீடு இவற்றில் எது அதிகமோ அதனை குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் விலைப்புள்ளிகள் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வழி காட்டி மதிப்பிலான சதுர அடி ரூ.12,000 என்பது அப்போதைய சந்தை மதிப்பான சதுர அடி ரூ.3,520 ரூபாய் என்பதை விட அதிகமாக இருந்ததால், சதுர அடிக்கு ரூ.12,000 என்பதை குறைந்த பட்ச விலையாக நிர்ணயித்து முதல் கட்டத்தில் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 7 நிறுவனங்களிடம் விலைப் புள்ளிகள் கோரப்பட்டன.

அந்த 7 நிறுவனங்களில் டாடா ரியாலிட்டி அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் மட்டுமே சதுர அடிக்கு ரூ.12,050 ரூபாய் என விலைப் புள்ளியினை சமர்ப்பித்து இருந்தது. இது அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையினை விட அதிகமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, டாடா ரியாலிட்டி இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையின் கீழ் அமைந்த குழுமம் இத் திட்டத்தின் கூட்டு முயற்சி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஏதோ ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்த அரசு டாட்டா நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டதைப் போலவும், அதிலே தவறுகள் நடைபெற்று விட்டதைப் போலவும் இங்கே ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது 2008ம் ஆண்டு.

இது குறித்து கூட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் டிட்கோ நிறுவனம், முதல்வர் முன்னிலையில் 26-4-2008 அன்று கையெழுத்திட்டது. இந்த நிறுவனத்திடமிருந்து ரூ.1,412 கோடி குத்தகைத் தொகையாக அரசால் பெறப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு மேற்கண்ட நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2,410 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் முடிவடைகின்ற நேரத்தில் 20,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு பெறக்கூடிய நிலை உருவாகும்.

முதல் கட்டமாக 12 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி அளவில் கட்டடிடங்கள் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுத் திட்டமும், 2012ம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப் போலவே சென்னை தரமணி பகுதியில் 26.64 ஏக்கர் பரப்பளவில் மற்றொரு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக திறந்த மற்றும் வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி முறையில் டி.எம்.எப். நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தினர் சுமார் ரூ.700 கோடி அளவிற்கு இந்த நிலத்திற்காக அரசுக்குச் செலுத்திய போதிலும், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆவதால், அந்த இடத்தை திரும்பக் கொடுத்து விட்டு அரசுக்குச் செலுத்திய தொகையைத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலே ஏதோ தவறு நடந்துவிட்டது, இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தவர்களின் ஆட்சியிலே நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

26-5-2005 நாளிடப்பட்ட அரசாணைப்படி 80 ஏக்கர் நிலம் விப்ரோ நிறுவனத்திற்கும், 50 ஏக்கர் நிலம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கும், 20-7-2005 நாளிடப்பட்ட அரசாணைப்படி 50 ஏக்கர் நிலம் எச்.சி.எல். நிறுவனத்திற்கும் எந்த விதமான டெண்டரும் இல்லாமல், வெறும் அரசாணையின் மூலமாக வழங்கப்பட்டது.

அதைப் போலவே 1-3-2006 நாளிடப்பட்ட அரசாணைப்படி (சட்டப்சபை தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்) காக்னிசான்ட் டெக்னாலஜிஸ் நிறுவத்திற்கு 20 ஏக்கர் நிலமும், மெகாசாப்ட் நிறுவனத்திற்கு 25 ஏக்கர் நிலமும், பெஞ்ச்மார்க் சாப்ட் நிறுவனத்திற்கு 25 ஏக்கர் நிலமும், புரோட்டான் வெப் நிறுவனத்திற்கு 3 ஏக்கர் நிலமும், அட்வான்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு 50 ஏக்கர் நிலமும் என மொத்தம் 123 ஏக்கர் நிலம் எந்தவிதமாக டெண்டரும் இல்லாமல் அரசாணை மூலமாகவே மட்டும் இந்த ஐந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

சென்னைக்கு அருகே சிறுசேரியில் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் நகரியம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்று முடிவெடுத்து அந்த முடிவை நிறைவேற்றுவதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த லீ கிம் தா ஹோல்டிங் என்னும் நிறுவனத்தோடு 16-9-2003 அன்று அதிமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி 164 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், நகரியத்தை உருவாக்கிட வேண்டும் என்றும், ஏக்கர் ஒன்னுக்கு ரூ. 15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நகரியம் ஏற்படுத்துவது பற்றியோ, இந்த இடத்தை அந்தத் தனியாருக்கு ஒப்படைப்பது பற்றியோ எந்தவிதமான டெண்டரும் கோரப்படவில்லை.

கடந்த கால அதிமுக ஆட்சியிலே எவ்வாறு டெண்டர் இல்லாமல் தன்னிச்சையாக அரசாணை மூலமாகவே நிலங்கள் விரும்பிய நிறுவனங்களுக்கெல்லாம் வழங்கப்பட்டன என்பதற்கும், தற்போது டெண்டர் கோரி, அதிலே அதிகத் தொகை கேட்டவர்களுக்கு முறைப்படி நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கும் உள்ள வேறுபாட்டை இதில் இருந்தே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X