For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் வருவதால் பி.இ. கட்டணம் உயராது: பொன்முடி 'வெளிப்படையான' பேச்சு!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 2010-11 கல்வியாண்டில் பி.இ. கல்வித் கட்டணம் உயர்த்தப்படாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியியல் கல்லூரிகளின் தலைவர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில பேசிய அவர்,

கடந்த 2006ம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரி நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு நடத்தியது.

அதன் அடிப்படையில், சிறுபான்மை அல்லாத பொறியியல் கல்லூரிகள் தங்களின் மொத்த பி.இ. இடங்களில் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மைக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் சில பிரச்சனைகள் எழுப்பப்பட்டாலும் இதுவரை அந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

எல்லா பொறியியல் கல்லூரிகளும் நன்கொடை வசூலிப்பது கிடையாது. எனினும் எல்லா கல்லூரிகளிலும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்று கடந்த ஆண்டுகளில் சட்டப் பேரவையிலும், ஊடகங்களிலும் அதிக விமர்சனம் செய்யப்பட்டது. எனவே, அதைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவது நிகழாத காரியம். எனவே, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வழக்கமான கோரிக்கையை கல்லூரி நிர்வாகங்கள் வைக்கக் கூடாது.

எந்தக் கல்லூரியும் மாணவர்களிடம் நன்கொடையோ, அதிக கட்டணமோ வசூலிக்கக் கூடாது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ரூ.32,500ம், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ரூ.62,500ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்காதபட்சத்தில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளையும், கல்வியின் தரத்தையும் மேம்படுத்தவும், கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனி குறியீட்டு எண் வழங்கவும்,

பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பொறியியல் படிப்பை கட்டாயமாக்கவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

தரமுள்ள கல்வியை என்ஜினீயரிங் கல்லூரிகள் கொடுத்தால் தான் கல்லூரிகள் நீடித்து இருக்க முடியும். அப்போதுதான் அந்த கல்லூரிகளில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெறும். கடந்த சில வருடங்களாக தகவல் தொழில்நுட்ப பிரிவு எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் இல்லாததால் பல கல்லூரிகளில் அந்த பிரிவை மூடி உள்ளனர். கடந்த வருடங்களை விட இப்போது சிவில் மற்றும் மெக்கானிக் பிரிவுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பி.இ. படிப்பில் சேர பிளஸ்-2 தேர்வில் பாஸ் செய்தால் போதும் என்ற தகுதியைக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கலந்தாலோசித்து முதல்வரிடம் எடுத்துச் சொல்லி மாணவர்கள் நலன் கருதி, இறுதி முடிவு எடுக்கப்படும். இப்போது சட்டசபை நடப்பதால் எதையும் அறிவிக்க இயலாது.

இந்த வருகிற கல்வி ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக 15 கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக் பிரிவுகளில் தமிழ் வழியில் புத்தகங்கள் எழுதப்பட்டு தமிழ் வழியில் பாடம் நடத்தப்படவுள்ளது. தேர்வும் தமிழில் எழுதலாம்.

இவர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள சிவில் மற்றும் மெக்கானிக் மாணவர்கள் ஆங்கில வழியில் படித்தாலும் தமிழிலும் எழுதலாம். ஆங்கிலத்திலும் எழுதலாம். ஆங்கிலமும் தமிழும் கலந்தும் எழுதலாம். எழுதுவது மாணவர்கள் விருப்பம். கேள்வித் தாள்களும் தமிழிலும் இருக்கும் ஆங்கிலத்திலும் இருக்கும்.

அதேப்போல விரும்பும் கல்லூரிகளில் தமிழ் வழியில் சிவில் மற்றும் மெக்கானிக் பிரிவை ஏற்படுத்தலாம்.

குடும்பத்தில் முதலாவது பொறியியல் பட்டதாரியாக சேர்பவர்களுக்கு டியூசன் கட்டணத்தை அரசு ஏற்கிறது. அதாவது ரூ.21,000த்தை கல்லூரிகளுக்கு அரசு செலுத்திவிடும்.

பொறியியல் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர் சேர்க்கை கால தாமதமாக நடைபெறுகிறது என்று பெரும்பாலான கல்லூரிகள் கருத்து தெரிவித்தன. எனவே, பொறியியல் கல்லூரிகளில் முதலாண்டு படிப்புக்கு மட்டும் நவம்பர் பருவத் தேர்வை ரத்து செய்துவிட்டு, கல்வி ஆண்டின் இறுதியில் அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் இறுதி தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றார் பொன்முடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X