For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது உண்மைக்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி-ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: எனக்கும் சிறுதாவூர் நிலத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நீதிபதி கமிஷன் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு்ள்ளது. இது உண்மைக்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறுதாவூர் என்கிற இடத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை நான் அபகரித்து வீடுகட்டிக் கொண்டு விட்டதாக தொடர்ந்து சட்டமன்றப் பேரவையிலும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் பொய்யான தகவலை பரப்பிக் கொண்டு வந்தார் கருணாநிதி

சிறுதாவூர் பகுதியில் உள்ள நிலங்களை வாங்கியவர்கள் யார் என்பதை பத்திரப் பதிவு மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களிலிருந்து கருணாநிதி நிச்சயம் தெரிந்து கொண்டு இருப்பார். அதில் என் பெயர் இல்லை என்பதையும் கருணாநிதி சந்தேகமின்றி தெரிந்து கொண்டிருப்பார்.

உண்மை நிலையை தெரிந்து வைத்திருந்தும், என் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமான உள்நோக்கத்துடன், இதை விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை 27.7.2006 அன்று அமைத்தார் கருணாநிதி. விசாரணை ஆணையமும் இந்த நிலத்தில் தொடர்புடைய உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதே தவிர, எனக்கு அனுப்பவில்லை.

இதிலிருந்தே எனக்கும் அந்த நிலத்திற்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. இதுவும் கருணாநிதிக்கு நன்கு தெரியும். மேற்படி விசாரணை ஆணையமும் தன்னுடைய அறிக்கையை 28.2.2010 அன்று கருணாநிதியிடம் சமர்ப்பித்தது.

இந்த ஆணையத்தின் அறிக்கையின் மூலம் சிறுதாவூர் நிலங்களை வாங்கியவர்கள் யார் என்பதை கருணாநிதி நிச்சயம் தெரிந்து கொண்டு இருப்பார்.

இவ்வளவையும் தெரிந்து வைத்திருந்தும், சிறுதாவூரில் எனக்குச் சொந்தமான எந்த நிலமும் இல்லை என்பது தெரிந்திருந்தும், தமிழக மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள மிகப்பெரிய அரசியல் இயக்கத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவருமான என்னை அரசியல்ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்,

விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பும், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பின்பும், ஆதிதிராவிடர் நிலங்களை நான் அபகரித்துவிட்டேன் என்று என் பெயரைக் குறிப்பிட்டு, என் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

மிக அண்மையில் கூட, அதாவது, சிறுதாவூரில் எனக்கு எந்த நிலமும் இல்லை என்று தெளிவுபடுத்திய விசாரணை கமிஷனின் அறிக்கையை தன்னிடம் வைத்துக் கொண்டே, 14.4.2010 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட விருதினை பெற்றுக் கொண்டு விழாவில் பேசிய கருணாநிதி, ஏற்கெனவே முதலமைச்சராக இருந்த ஒருவர் சிறுதாவூர் என்கின்ற இடத்தில் பஞ்சமர்களுக்கு என்று இருந்த நிலங்களை எல்லாம் அபகரித்து வீடுகட்டிக் கொண்டு, அந்த ஊரிலே இருந்த ஆதி திராவிட மக்களையெல்லாம் வெளியே விரட்டிவிட்டதாக பேசியிருக்கிறார்.

இது மன்னிக்க முடியாத, சட்டவிரோதமான செயல். எனக்கும், என்னுடைய கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற என்மீது அபாண்டமாக பழியை போட்டிருக்கிறார்.

விசாரணை ஆணைய அறிக்கையில், எனக்கும், சிறுதாவூர் நிலத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், என் மீது எந்தவித புகாரும் இல்லை என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது உண்மைக்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி.

ஆதி திராவிட மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டிய அரசு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. ஆதிதிராவிடர்களின் நலனுக்காக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், ஆதி திராவிட மாணவ மாணவியர்க்கு விடுதிகள் கட்டுதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை எனது ஆட்சிக்காலத்தில் நான் நிறைவேற்றியிருக்கிறேன்.

சிறுதாவூர் நிலத்திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு, தலித் மக்களுக்கான நிலங்களை ஜெயலலிதா அபகரித்துவிட்டார் என்று தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டு காலமாக விஷமப் பிரச்சாரம் செய்து வந்த கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த கருணாநிதியின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள பங்களா சித்ரா என்பவரின் பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், அந்த நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் இயக்குனர்களாக உள்ளதாகவும் நீதிபதி சிவசுப்பிரமணியன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெ நடத்தி வைக்கும் திருமணங்கள்:

இந் நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன் திருமணத்தை ஜெயல்லிதா நடத்தி வைக்கவுள்ளார். அப்போது பல முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுவார் என அதிமுக வட்டாரத்தில் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இடையில் திமுகவில் இருந்து பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தவருமான ராஜகண்ணப்பனின் மகன் பிரபுவுக்கும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கவுசல்யா தேவிக்கும் வருகிற 16ம் தேதி சென்னை வானகரம் அருகே உள்ள வேலப்பன் சாவடியில் நடைபெறுகிறது.

இந்தக் கல்யாணத்தின்போது சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. செந்தமிழன் மைத்துனர், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணிமாறனின் மைத்துனி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் மகன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் மொளச்சூர் பெருமாள் மகள் ஆகியோரது திருமணங்களையும் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.

இந்த திருமண வைபவங்கள் மாநாடு போல நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்படுகிறது. 25,000 பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேடை முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.

தொண்டர்கள் வசதிக்காக பந்தலின் பின்புறத்தில் நூற்றுக்கணக்கான கழிவறைகள் மற்றும் குளியலறைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த திருமண விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிமுக தொண்டர்கள் பெரும் திரளாக வரவுள்ளனராம்.

கல்யாணங்களை நடத்தி வைத்து சிறப்புரையாற்றவுள்ள ஜெயல்லிதா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என அதிமுக வட்டாரத்தில் பலமாக பேசப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X