For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக கூட்டணியில் மீண்டும் பாமக?-கருணாநிதி பேட்டி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: உடல் ஓய்வைத் தேடுகிறது, உள்ளம் உழைப்பைத் தொடரச் சொல்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

5வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளைக் கடந்து நேற்று 5வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள அவர் இதையொட்டி அளித்துள்ள சிறப்புப் பேட்டிகளில் கூறியுள்ளதாவது:

கேள்வி: 5 முறை ஆட்சியில் இருந்து நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் உங்களை மிகவும் பெருமிதம் கொள்ள வைத்த திட்டங்கள் எவை?

பதில்: பேருந்துகளை நாட்டுடைமையாக்கியது, கிராமங்களுக்கு மின் இணைப்புத் திட்டம் கொண்டு வந்துத, குடிசை மாற்று வாரியம் அமைத்தது, குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது. கண்ணொளி வழங்கும் திட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கும் சொத்துரிமை, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி.

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திட்டம், உழவர் சந்தைகள், குடியிருப்பு மனைகள் வழங்கும் திட்டம், நில உச்ச வரம்பு சட்டம், தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் அமைத்தது, மாணவர்களுக்கு சத்துணவோடு முட்டை வழங்கியது, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்.

தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தது, கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம், அரசு அலுவலர் குடும்பப் பாதுகாப்புத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம்,

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தது, அருந்ததியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு,-அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வந்தது,

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, இலவச டிவி, இலவச கேஸ் இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கும் திட்டம், தமிழை கட்டாயப் பாடமாக்கியது என எழுதிக் கொண்டே போகலாம்.

உடல் ஓய்வைத் தேடுகிறது...

கேள்வி: நீங்கள் பதவியில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறேன் என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று அல்லவா?

பதில்: உடல் ஓய்வைத் தேடுகிறது, உள்ளம் உழைப்பைத் தொடரச் சொல்கிறது. பார்ப்போம், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே தான் போட்டி!

கேள்வி: மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் தந்தையாக, கட்சித் தலைவராக, முதல்வராக உங்களைக் கவர்ந்தது எது?

பதில்: அவர்கள் மூவரும், தந்தையாக என்னிடம் காட்டும் அபரிமிதமான பாசம், கழகத் தலைவராக அவர்கள் கட்சி வளர்ச்சிக்காக உழைக்கும் உழைப்பு, முதல்வராக மக்களின் நல்வாழ்வுக்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறை..இவையேளே என்னைக் கவர்ந்த அம்சங்கள்.

மீ்ண்டும் கூட்டணியில் பாமக?:

கேள்வி: ராஜ்யசபா தேர்தலில் திமுக மட்டும் தனியாக 3 இடங்களில் வெற்றி பெற முடியும். இந் நிலையில் உங்களை விட்டுப் பிரிந்து போன பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் உங்களோடு சேரப் போகிறது என்றும், டாக்டர் ராமதாசும், காடுவெட்டி குருவும் உங்களைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள் என்றும், டாக்டர் அன்புமணிக்கு ஒரு சீட் கேட்கப் போகிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.இந்தச் செய்திகள் எல்லாம் உண்மையா

பதில்: இது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கெல்லாம் விடை காணத் தான் 30-5-2010 அன்று கழகத்தின் உயர் நிலை செயல் திட்டக் குழுவினைக் கூட்டியிருக்கிறோம். எங்கள் கட்சி ஒரு ஜனநாயக அடிப்படையிலான கட்சி என்பது உங்களுக்கே தெரியும். என்ன தான் நான் கட்சித் தலைவர் என்ற போதிலும்- இது போன்ற முக்கியமான பிரச்சனைகளில் கட்சியின் முடிவினை அறிந்து கொண்டு தான் முடிவெடுப்பேன் என்பதுதான் உங்களுக்கே தெரியுமே!

கேள்வி: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்களிடம் என்ன சொல்லி ஓட்டு கேட்பீர்கள்?

பதில்: கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்களுக்காகப் பாடுபட்டிருக்கிறோமா இல்லையா என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, அந்தப் பணி தொடர்வதற்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்போம்.

கேள்வி: பொதுவாக மூப்பை சுமையாகவே பலரும் கருதுவர். ஆனால் 86 வயதில் சக்கர நாற்காலியில் சுற்றி வந்தாலும் உங்கள் சிந்தை புத்துணர்வோடு இருக்கிறது. செயல்பாடும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த பொலிவுக்கும் அயராத உழைப்புக்கும் உந்து சக்தி எது?

பதில்: என்னுடைய சிந்தனை, செயல்பாடு, உழைப்பு அனைத்துக்கும் உந்து சக்தி மக்கள் தரும் ஆதரவும் நிறைவான அன்பும் தான்.

யோகா செய்கிறேன்:

கேள்வி: உடல் நிலையைப் பேணி உற்சாகமாக இருப்பதற்காக ஏதேனும் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்கிறீர்களா ? உணவு கட்டுபாடு ஏதேனும் உண்டா?

பதில்: சிறப்பு பயிற்சி என்று எதையும் எப்போதும் மேற்கொள்வது கிடையாது. முன்பெல்லாம் தொடர்ந்து காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வேன். தற்போது நேரமும் உடம்பும் ஒத்துழைத்தால் நடை பயிற்சி செல்கிறேன். யோகா செய்கிறேன். தியானப் பயிற்சி என்று எப்போதும் கிடையாது.என்னுடைய உணவுப் பிரச்சனைக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. உடல் நிலை, அறுவை சிகிச்சை ஆகியவற்றை மனதில் கொண்டு டாக்டர்கள் சில கட்டுபாட்டை சொல்லியிருக்கிறார்கள். அதை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

சென்னையில் துணை நகரம்:

கேள்வி: சென்னையில் துணை நகரம் அமைக்க திட்டம் தீட்டினீர்கள். அந்த திட்டம் வருமா?

பதில்: சென்னையைப்போல் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களுக்கு துணை நகரம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இரண்டாண்டுகளுக்கு முன்பு துணை நகரம் ஒன்றினை உருவாக்கிடத் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: புதிய சட்டசபை கட்டுமான பணிகளை தொடர்ந்து கண்காணித்தது பற்றி சொல்லுங்கள்?

பதில்: தலைமைச் செயலகம் செல்லும்போதும், திரும்பும்போதும் தொடர்ந்து அன்றாடம் புதிய தலைமைச் செயலகப் பணிகளை நேரில் கண்டு பணி செய்பவர்களை ஊக்கப்படுத்தினேன். இன்னும் சொல்லப்போனால், இரவு நேரங்களிலே கூட, உதாரணமாக விழுப்புரத்தில் இரவு நிகழ்ச்சிகளை முடித்து இரவு 2 மணி அளவில் சென்னை திரும்பிய அந்த நள்ளிரவிலே கூட நேராக வீட்டிற்குத் தூங்கச் செல்லாமல் நேராக புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்திற்கு வந்து பார்வையிட்டுத்தான் திரும்பினேன். மேலும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாள் விடியற்காலை 5 மணி அளவிலே கூட பொழுது விடிந்ததும், தொழிலாளர்கள் எல்லாம் பணியைத் தொடங்காத அந்த நேரத்திலே கூட நான் புதிய தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளேன்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு:

கேள்வி: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இதுபற்றி?

பதில்: கோவை மாநகரத்திலே நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழக வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை. முன்னர் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளுக்கு ஆய்வு அறிஞர்களிடமிருந்து வந்த வரவேற்பை விட பன்மடங்கு தற்போது நடைபெறவுள்ள மாநாட்டிற்குக் கிடைத்திருக்கின்றது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் பல்லாயிரக்கணக்கில் வந்து மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள ஆய்வரங்குகளின் மூலமாக தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான அம்சங்கள் இறுதி செய்யப்பட்டு -நடைமுறைப்படுத் தப்படவுள்ளன.

கோவை செம்மொழி மாநாட்டினையொட்டி, கோவை மாநகரரையும், அதன் சுற்றுப்புறங்களையும் மேம்படுத்திட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கோவை மாநகர வரலாற்றிலும் இது ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்திடும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்த மாநாட்டினை தமிழ் மக்களின் மாநாடாக நடத்த வேண்டுமென்பதுதான் எனது விருப்பம். அந்த எனது விருப்பம் நிறைவேறுமென்று நம்புகிறேன்.

கிராமப் புறங்களில் வறுமை:

கேள்வி: தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் வறட்சியும் வறுமையும் தொடர்கின்றனவே? வேலையில்லாத் திண்டாட்டமும், வேலை தேடி நகரங்களுக்குப் படையெடுக்கும் சூழலும் நீடிக்கின்றனவே?

பதில்: தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதற்காக நன்றி. கிராமப்புறங்களிலே வறட்சியும் வறுமையும் தொடர்வதாகக் கேட்டிருக்கிறீர்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்துவதாலும்; ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தினாலும் - கிராமப்புறங்களில் பெருமளவுக்கு வறுமையும் வறட்சியும் குறைந்து வருகிற தென்பதைக் கண்கூடாகக் காணலாம். கிராமப்புறங்களிலும் வளமையைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்காகத் தான் புதிதாக தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களை எல்லாம் கிராமப் புறங்களிலே தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென்றும், அந்தத் தொழிற்சாலை அமைகின்ற பகுதிகளிலே உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அத்தகைய தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கு மேயானால, நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் தானாகவே குறைந்து விடும்.

சினிமா துறையினருக்கு அதிகமான சலுகைகள் ஏன்?:

கேள்வி: சினிமா துறையினருக்கு நீங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதாக ஒரு விமர்சனம் உள்ளது. தமிழ் மக்களிடத்தில் சினிமா நடிகர்களுக்கு உள்ள செல்வாக்கை உங்களுக்கான ஆதரவாக மாற்றும் முயற்சியா இது?

பதில்: அரசியல் துறையிலே இருப்பதைப் போலவே, இலக்கியத் துறையிலே இருப்பதைப் போலவே சினிமா துறையிலும் எனக்கு ஏராளமான நண்பர்கள் அந்தக் காலத்திலிருந்தே உண்டு. அந்தத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் அடிக்கடி என்னைச் சந்திப்பார்கள். அது தானே தவிர அந்தத் துறைக்கென்று அபரிமிதமான முக்கியத்துவம் எதையும் நான் தரவில்லை. அந்தத் துறையிலே உள்ள தொழிலாளர்கள் மீது அந்தக் காலத்திலிருந்தே எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதன் காரணமாக அவர்களுக்கென்று சில பல சலுகைளை நான் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், செய்கின்ற காரணத்தினால், அந்தத் துறைக்கு நான் அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்று உங்களைப் போன்ற சிலர் கருதுகிறார்கள் போலும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X