For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமயமலை ஏறும் மாணவிகள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்தி நிதியுதவி

Google Oneindia Tamil News

சென்னை: இமயமலையில் ஏறும் சாகச பயணம் மேற்கொள்ளவுள்ள கோவையைச்சேர்ந்த மாணவிகளுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து நிதியுதவியும் அளித்தார்.

இமயமலைத் தொடரில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அனுமன் டிப்பா என்ற மலைச் சிகரத்தில் ஏறுவதற்கு, கோவை பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவியர் 21 பேர் திட்டமிட்டுள்ளனர். மாஸ் என்ற பெயரிலான இந்தக் குழுவைச் சேர்ந்த மாணவிகளில் ஒருவரான ஸ்வாதிகா இதுகுறித்து ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார். இவர் அக் கல்லூரியில் பி.ஏ. பொருளியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

கடல் மட்டத்தில் இருந்து 19,457 அடி உயரத்தில் உள்ள இந்தச் சிகரத்தை இத்தனை மாணவிகள் ஒரே நேரத்தில் அடைவது சாதனையாகக் கருதப்படும். பிரடெரிக் தலைமையில் மாணவிகள் இதற்குப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்கள் ஏற்கெனவே நீலகிரி, கொடைக்கானல், திருமூர்த்தி மலைகளில் ஏறியுள்ளனர் என்றும், இப்போதைய சாதனை முயற்சிக்கு உதவ வேண்டும் என்றும் ஸ்வாதிகா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மாணவிகள் உள்ளிட்ட 29 பேருக்கு 23 நாள்களுக்குத் தேவையான உணவுச் செலவு, பயணச் செலவு ஆகியவற்றுக்கு ரூ.3.77 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர திமுக மூலமாக இந்த மாணவிகளுக்கு உதவி அளிக்க ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்தத் தொகையை புதன்கிழமை சென்னையில் மாணவிகளிடம் ஸ்டாலின் வழங்கினார்.

துணை முதல்வரின் வாழ்த்து தங்களுக்கு மனரீதியாக கூடுதல் பலத்தை கொடுத்திருப்பதாகத் தெரிவித்த மாணவிகள், முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அனுமன் டிப்பா மலை சிகரத்தில் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது கோவை மாநகர திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X