For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: 4 மத்திய அரசு மருத்துவமனைகளிலும் காலாவதி மருந்து வினியோகம்-சிபிஐ தகவல்

Google Oneindia Tamil News

Drugs
சென்னை: சென்னையில் உள்ள நான்கு மத்திய அரசு மருத்துவமனைகளில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில், காலாவதி மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்து வந்தது தெரிய வந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காலாவதி மற்றும் போலி மருந்துகள் புழக்கத்தால் தமிழக மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். நலமாக இருக்க சாப்பிடும் மருந்துகளே நஞ்சாக இருப்பதால் அவர்கள் பீதியடைந்துள்ளனர்.

தனியார் மருந்துக் கடைகளில் பெருமளவில் விற்பனையாகி வந்த இந்த போலி மற்றும் காலாவதி மருந்து சர்ச்சையைத் தொடர்ந்து நடந்த ரெய்டுகளில் பலர் கைதானார்கள், ரூ.20 கோடி மதிப்பிலான போலி மற்றும் காலாவதி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் இதுவரை 34 பேர் கைதாகியுள்ளனர். இவர்களில் 11 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.

சென்னை அரசு பொதுமருத்துவமனையிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினார்கள். 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கடந்த 15ம் தேதியும், 18ம் தேதியும் நடந்த இந்த ரெய்டின்போது காலாவதி மருந்துகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தென்மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காலாவதி மற்றும் போலி மருந்துகளை கண்டுபிடிக்கும் முகமாக சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் கடந்த 15-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 7 மத்திய அரசு மருத்துவமனைகளின் மருந்தகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. தகுந்த மருந்து ஆய்வாளர்களின் முன்னிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் 4 மத்திய அரசு மருத்துவமனைகள் உள்பட 5 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது மருத்துவமனைளில் பயன்படுத்தப்பட்ட சில மருந்துகள் காலாவதியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த மருந்துகளின் சேம்பிள்கள் எடுக்கப்பட்டு உரிய பரிசோதனைக்காக மத்திய அரசின் மருந்து சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் கண்டுபிடித்துள்ள காலாவதி மருந்து வகைகளை நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடாது என்று டாக்டர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

இந்த காலாவதி மருந்து சப்ளை விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்று விசாரணை நடந்து வருகிறது. சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள மருந்துகள் பற்றிய அறிக்கை வந்தவுடன் இதில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விசாரணை முடிவில், டாக்டர்கள் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதி மருந்து வகைகளை பயன்படுத்தக்கூடாது என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். டாக்டர்களும் அதை பயன்படுத்தமாட்டார்கள்.

எனவே, மத்திய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பயப்பட தேவையில்லை. மருந்து பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான், நாங்கள் எந்தெந்த மத்திய அரசு மருத்துவமனைகளில் சோதனை போட்டோம் என்ற விவரத்தை வெளியிட முடியும். அதற்கு பிறகுதான் யார், யார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சொல்ல முடியும்.

சில ரகசிய தகவல்கள் அடிப்படையில் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள 5 மருந்து கம்பெனிகளிலும், ஒரு மருந்து விநியோகிக்கும் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் அனுமதி வாங்காத சில மருந்துகளையும், தரம் இல்லாத சில மருந்துகளையும் தயாரிப்பதும், விநியோகிப்பதும் கண்டறியப்பட்டது. உரிய பாதுகாப்பான நவீன வசதிகள் எதுவும் இல்லாமல் மேற்கண்ட மருந்து கம்பெனிகளில் மருந்துகள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. இந்த மருந்து கம்பெனிகளில் முறையான ஆவணங்களும் இல்லை.

கடந்த 14-ந் தேதி அன்று இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது 16 வகையான தரம் இல்லாத மருந்து வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சேம்பிள்களும் உரிய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதிலும் சோதனை முடிவு வந்தபிறகுதான் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் மிகவும் ஆழமான விசாரணை நடந்து வருகிறது.

மருந்து வகைகள் பற்றி ரகசிய தகவல் கிடைத்ததுபோல, பெட்ரோலிய பொருட்களும் சட்டவிரோதமாக திருடப்பட்டு கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவது பற்றி ஏராளமான புகார்கள் வந்தன. இதில் மிகப்பெரிய சட்டவிரோத கும்பலினர் ஈடுபடுவதாகவும் சொல்லப்பட்டது. இந்த தகவல் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் போலீஸ் சரகம் பொன்னேரிகுப்பம் கிராமத்தில் சி.பி.ஐ. தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு பெட்ரோலிய கலப்பட ஆலையே செயல்பட்டது தெரிய வந்தது.

ஆயில் நிறுவனங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் ஏற்றி செல்லும் பெட்ரோல் மற்றும் ஆயிலை அங்கு வைத்து திருடுவது கண்டறியப்பட்டது. ஆயில் டேங்கரை திறப்பதற்கு கள்ள சாவிகளை அவர்கள் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. அங்கு நடத்தி சோதனையில் 45 கள்ள சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி டேங்கரில் இருந்து 300 லிட்டர் பெட்ரோலை திருடி அதில் கலப்பட ஆயிலை கலந்து விற்கிறார்கள். திருடிய டேங்கரிலும் 300 லிட்டர் கலப்பட ஆயிலை நிரப்பி விடுகிறார்கள்.

ஒரு டேங்கரில் திருடுவதில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.98 ஆயிரம் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. அப்படியென்றால் மாதந்தோறும் அவர்கள் எவ்வளவு கோடி பணம் சம்பாதிப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். அங்கு 65 லிட்டர் கலப்பட ஆயிலும், 55 லிட்டர் பெட்ரோலும், 300 கிராம் கலப்பட ரோஸ் பவுடரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பெட்ரோல் திருட்டு கலப்பட தொழிலை இவர்கள் காலம் காலமாக செய்து வந்துள்ளனர். இதனால் ஆயில் கம்பெனிகளுக்கும், மத்திய அரசுக்கும் கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது. இதில் தொடர்புள்ள 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம். அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் டேங்கர்களை திறக்க கள்ள சாவிகளை தயாரிக்க முடியாது. ஏனென்றால் டேங்கர்களை திறக்கும் உண்மையான சாவிகளில் ஒன்று சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்திடமும், இன்னொரு உண்மையான சாவி சம்பந்தப்பட்ட ஆயில் விநியோகஸ்தரிடமும்தான் இருக்கும். உண்மையான சாவிகளை வைத்துத்தான் கள்ள சாவிகளை தயாரித்து இருக்க முடியும். இதுதொடர்பாகவும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.

சென்னையை அடுத்த மீஞ்சூரிலும் கலப்பட பெட்ரோல், டீசல் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. இதுபோல, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தி பொது விநியோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய மண்எண்ணையை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளோம். சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்ததையும் கண்டுபிடித்துள்ளோம். தொடர்ந்து சோதனைகளும், விசாரணையும் நடந்து வருகின்றன என்றார்.

அசோக்குமார் - செய்தியாளர்ள் கடும் வாதம்

காலாவதி மருந்து விற்பனை தொடர்பாக சோதனை நடத்தப்பட்ட மத்திய அரசு மருத்துவமனைகளின் பெயர்களை பொதுமக்கள் நலன் கருதி வெளியிட வேண்டும் என நிருபர்கள் அசோக்குமாரிடம் கேட்டனர். ஆனால் அவர் வெளியிட மறுத்து விட்டார். இதையடுத்து அவருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

எங்கு சோதனை நடந்தது, மருத்துவமனைகளின் பெயர்கள், எந்த மருந்து என்பது போன்ற விவரங்களை வெளியிட்டால் பொதுமக்களுக்கு பயன் ஏற்படும் என்பதால் அவற்றை வெளியிட வேண்டும் என நிருபர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

ஆனால், ஆய்வு அறிக்கை வந்த பிறகுதான் மேல் விவரம் சொல்ல முடியும் என்று அசோக்குமார் உறுதியாக கூறிவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X