For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 மணி நேரம் இருந்த மின் வெட்டு 2 மணி நேரமாக குறைப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Dark Night
சென்னை: தமிழ்நாட்டில் தினமும் 3 மணி நேரமாக உள்ள மின் வெட்டு 2 மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 28.3.2010 முதல் மின்சாரத் தேவை மிகவும் அதிகமாகி விட்டதாலும், காற்றாலை மூலம் கிடைத்து வந்த மின் உற்பத்தி, தட்பவெப்ப நிலை காரணமாக முழுமையாக நின்று விட்டதாலும், சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேரம் மின்சாரமும், மாநிலத்தின் மற்ற இடங்களில் 21 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல உயர் அழுத்த மின்சாரத்தை உபயோகப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு 20 சதவீதம் என்று இருந்த மின்வெட்டு 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களில் காற்றாலை மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி, தற்சமயம் அதிகரித்து வந்ததைக் கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டதைப்போல 24 மணி நேர மின்சாரமும், தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் 3 மணி நேரம் இருந்த மின்தடை 2 மணி நேரமாக இன்று முதல் குறைத்து 22 மணி நேர மின்சாரம் வழங்கவும், உயர் அழுத்த மின்சாரத்தை உபயோகிக்கும் தொழிற்சாலைகளுக்கு 30 சதவீதம் என்றிருந்த மின்தடை, இன்றிலிருந்து 20 சதவீதமாகக் குறைத்து அதிக மின்சாரத்தை வழங்கவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக இந்த ஆணையைச் செயல்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

வட சென்னை மின் திட்டத்துக்கு ரூ.2,475 கோடி:

இதற்கிடையே வட சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் நிலைய திட்டப் பணிக்காக மத்திய ஊரக மின்வசதிக் கழகம் ரூ.2,475 கோடி கடனுதவி அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின், ஊரக மின்வசதிக் கழகத்துடன், தமிழக மின்சார வாரியம் ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

வட சென்னை அனல் மின்நிலையத்தில் நடைபெற்று வரும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்துக்காக இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இந்த ஒப்பந்தத்தில், தமிழக மின்வாரிய தலைவர் சி.பி.சிங், ஊரக மின்வசதி கழகத்தின் திட்ட இயக்குனர் ஏ.வேலுச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாரத மிகுமின் நிறுவனத்தால் இந்த மின் உற்பத்தி திட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக மின்வாரிய தலைவர் சி.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கு மொத்த நிதி ரூ.3,095 கோடி தேவை. இதில், ரூ.2,475 கோடியை ஊரக மின் வசதிக் கழகம் தமிழக மின் வாரியத்துக்கு மேற்கண்ட ஒப்பந்தத்தின் வாயிலாக கடனாக அளிக்கும்.

தமிழகத்தில் பெருகி வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு புதிய மின் உற்பத்தித் திட்டங்களை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிங் கூறினார்.

ஊரக மின்வசதிக் கழகத்தின் ரூ.17,000 கோடி கடனுதவியுடன், தமிழகத்தில் ரூ.5,300 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்கள் முடிவடைந்ததும், தமிழகம் மின் உற்பத்தியில் சுயசார்பு பெற்றுவிடுவது மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்கவும் முடியும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X