For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமகவுடன் மீண்டும் கூட்டணி: திமுக முடிவு.. ஆனால், இப்போது ராஜ்யசபா சீட் இல்லை

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் பாமகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது என திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் எம்பி சீட் தரப்படாது என்றும் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 2011ம் ஆண்டுக்குப் பின் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, கவிஞர் கனிமொழி எம்.பி., மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, துணைப் பொதுச் செயலாளர்கள் பரிதி இளம்வழுதி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாமக கோரியதால் கூட்டணி:

இதில், பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் திமுக கூட்டணியில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்:

முதல்வர் கருணாநிதியையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் மற்றும் கட்சியின் தலைவர்களையும் பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.சி.மணியும், அந்தக் கட்சியின் கொறடா வேல்முருகனும் பலமுறை சந்தித்து, திமுக-பாமக கூட்டணி மீண்டும் தொடரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததோடு, வரும் 17ம் தேதி நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கி ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையே உறவு முறிவு ஏற்பட வேண்டிய நிலை ஏன் உருவானது என்பதைப் பற்றியும், அதற்கு திமுக காரணம் அல்ல என்பதைப் பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அண்மையில் பென்னாகரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட நிலைமைகளைப் பற்றியும்- "திமுக தான் தன் முதல் எதிரி'' என்று பாமக நிறுவனத் தலைவர் திமுக குறித்து அறிவித்த கடுமையான பிரகடனம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

எனினும் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்ற அடிப்படையில்; டாக்டர் ராமதாஸ் தனது கடிதத்தில் எழுதியுள்ளதைப் போல; மீண்டும் இரு இயக்கங்களும் உறவைப் புதுப்பித்துக் கொண்டு- அடுத்து வரவிருக்கும் 2011 சட்டசபைத் தேர்தலிலும், விரைவில் வரவிருக்கின்ற மேலவைத் தேர்தலிலும், இரண்டு கட்சிகளும் உடன்பாடு கொண்டு போட்டியிடுவது என்பதை திமுகவும் ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுக்கப்படுகிறது.

2011 தேர்தலுக்கு பின் ராஜ்யசபா சீட்:

அடுத்து, பாமகவுக்கு ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடம் வழங்குவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. 2011ல் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அடுத்த நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடத்தை வழங்குவது என்று உறுதிப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான இணக்கமான நிலைமைகளை இவ்விரு இயக்கங்களும் இப்போது முதலே கடைப்பிடிப்பது என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதி பெறுவதற்கான பாதுகாப்பு அரணாக அமையும் என்பதையும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளது.

எனவே, 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடத்தை திமுக அளிக்கும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழுவில் எடுத்துள்ள முடிவினையும், அதன் அடிப்படையில் அளித்துள்ள உறுதியினையும் பாமக ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?

பதில்: அவர்களுக்குள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் ஒரு இடத்தில் அவர்களே நின்று வெற்றி பெறுவார்கள்.

பாமக ஏற்குமா?-எனக்குத் தெரியாது:

கேள்வி: உயர்நிலை செயல்திட்டக் குழுவில் பாமகவுடன் கூட்டணி தொடர்பாக ராஜதந்திரமான ஒரு முடிவை தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதை பாமக ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறீர்களா?

பதில்: எனக்குத் தெரியாது. நாங்கள் நல்ல எண்ணத்தோடு எடுத்த முடிவு இது. இதிலே ராஜதந்திரம் ஒன்றும் கிடையாது.

கேள்வி: தீர்மானத்தைப் பார்க்கும்போது பாமக இந்த கூட்டணியில் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்யும் வகையில் முடிவு செய்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்- ஆமாம்.

பாமக நம்பகத்தன்மைக்கு சோதனையா...:

கேள்வி: பாமகவின் 'லாயல்டியை' சோதனை செய்யவே இந்த முடிவா?

பதில்: உங்களுடைய கற்பனைக்கெல்லாம் நான் ஆள் அல்ல. என்னுடைய கற்பனையாக நிறைய எழுத முடியும், சொல்ல முடியும். ஆனால், உங்களின் இந்தக் கற்பனைக்கெல்லாம் நான் ஆள் அல்ல.

கேள்வி: பாமக உங்கள் கூட்டணியில் சேருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிப்பேன்.

கேள்வி: பாமக சில நாட்களுக்கு முன்பு வரை உங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். திடீரென்று அவர்களுடன் கூட்டணிக்கு என்ன காரணம்?.

பதில்: உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள்? யார், யார் உண்மையாக என்னை வாழ்த்துவார்கள், யார் யார் தரக் குறைவாக பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.

சிண்டு முடியாதீர்கள்...:

கேள்வி: டாக்டர் ராமதாஸ் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரத்தைப் புறக்கணிப்போம் என்று சொல்லியிருந்தாரே. அந்த கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: நான் அவரைப் பற்றியும், அவருடைய தலைமையிலே உள்ள கட்சியைப் பற்றியும் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விளக்கிச் சொல்லியிருக்கிறேன். இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு நான் பதில் சொல்லி, அவரை நீங்கள் பதில் சொல்ல வைத்து ஒரு 'சிண்டு முடிகிற' வேலை தயவு செய்து செய்ய வேண்டாம்.

திமுகவுக்கு முத்துசாமி வருவாரா...:

கேள்வி: முன்னாள் அமைச்சர் முத்துசாமி திமுகவில் சேரப் போவதாக செய்தி வந்து கொண்டிருக்கிறதே?

பதில்: திமுகவில் சேருவதைப் பற்றி முத்துசாமி இன்னும் எங்களிடம் பேசவில்லை.

கேள்வி: முத்துசாமி திமுகவில் இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்: ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா?. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.

திராவிட நாகரிகத்தின் ஆதி சிந்து நாகரிகம்:

கேள்வி: கோவை செம்மொழி மாநாட்டு இலச்சினையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் ஒன்று கூட இடம் பெறவில்லையே?. சிந்து சமவெளி நாகரிகம் தான் அதிலே இடம்பெற்றுள்ளது.

பதில்: திராவிட நாகரிகத்தினுடைய ஆதி சிந்து நாகரிகம்.

கேள்வி: மாநாட்டு இலச்சினையைத் திருத்தி தமிழ் பிராமி எழுத்துக்களை இடம்பெறச் செய்வீர்களா?

பதில்: அந்த இலச்சினையை மீண்டும் வரைய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் திருத்தம் சரியென்றால் ஏற்றுக் கொள்வோம்.

கேள்வி: ஜெயலலிதா வெற்றி பெற்று பழைய சட்ட மன்றத்திலே ஆட்சி அமைப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: (பதில் சொல்லாமல், சிரித்தார் முதல்வர்)

கேள்வி: சிறுதாவூர் நில பிரச்சனைக்காக திமுக எப்போது ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறது?

பதில்: காஞ்சீபுரம் மாவட்ட திமுக சார்பில் அந்த போராட்டத்தை நடத்துவதற்கு எங்களிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். நாங்கள் அதற்கு அனுமதி
கொடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X