For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைஞரின் அருமை பெருமை எனக்குத் தெரிகிறது, ஜெ.வுக்குத் தெரியலையே - குஷ்பு பேச்சு

Google Oneindia Tamil News

Kushboo
சென்னை: வடஇந்தியாவில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு தமிழரை திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை பெற்ற இந்த அம்மாவுக்கும், அதாவது எனக்கும் நம்முடைய தலைவரின் அருமை பெருமைகள் தெரிகிறது. ஆனால் இங்கிருக்கிற அம்மாவுக்கு தெரியவில்லையே என்று கூறினார் நடிகை குஷ்பு.

முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளையொட்டி சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பேசினர். குஷ்பு தனது பேச்சில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் சமமான அளவில் ஐஸ் வைத்துப் பேசினார். கூடவே ஜெயலலிதாவையும் வாரிப் பேசினார்.

குஷ்பு திமுகவில் சேர்ந்த பின்னர் கலந்து கொண்ட முதல் பொதுக்கூட்டம் இது. இதனால் தனது பேச்சில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று முன்கூட்டியே கூறி விட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்.

குஷ்புவின் பேச்சு...

ஸ்டாலினை மகனாகப் பெற்றதால்

மு.க.ஸ்டாலினை மகனாக பெற்றதால் தலைவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி இன்றைக்கு துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் வளமான நம்பர் ஒன் மாநிலமாக்கும் தனது தந்தையின் கனவை நனவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

அழகிரி பெயரைச் சொன்னாலே எகிறும்

ரஜினிகாந்த் பெயரைச் சொன்னாலே அதிரும். மு.க.அழகிரியின் பெயரை கேட்டாலே எதிர்க்கட்சிகளுக்கு சும்மா எகிறும். இவர் களம் போனாலேயே கலைஞருக்கு வெற்றிதான். இவர் தி.மு.க.வுக்கு கிடைத்த உரம். அப்படிப்பட்டவர்தான் அஞ்சா நெஞ்சன் அழகிரி. நான் கட்சியில் சேர்ந்த பின்பு பொதுக்கூட்டத்தில் பேசுவது இதுதான் முதல் முறை.

எல்லோரும் நான் பேசுவது கன்னிப்பேச்சு என்று கூறினார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கன்னிப்பருவம் மிக முக்கியமானதாகும். அந்த காலக்கட்டத்தில் ஒரு சிறிய தப்பு நடந்தாலும் அதை பெரிதாக பார்ப்பார்கள்.

எனவே என்னுடைய கன்னிப்பேச்சை ஒரு குழந்தையின் பேச்சாக எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் பேசியதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

நான் தி.மு.க.வில் சேர்ந்ததும் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்டார்கள். நான் பெண்களின் உழைப்புக்காகவும், உரிமைக்காகவும் வந்ததாக தெரிவித்தேன். ஏன் தி.மு.க.வில் சேர்ந்தீர்கள் என்று கேட்டார்கள். பெண்களுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் போராடும் ஒரே கட்சி தி.மு.க.தான். ஆகவே தான் தி.மு.க.வில் சேர்ந்தேன் என்று கூறினேன்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அட்சய திருதியையை கொண்டாடி உள்ளனர். வடஇந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஒரு மூட நம்பிக்கை உள்ளது. அட்சய திருதியை அன்று திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று திருமணங்கள் செய்து வைக்கிறார்கள். இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைக்கும் காட்சியை நான் டி.வி.யில் பார்த்தேன். 5 வயது, 6 வயது, 10 வயது சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்ற கொடுமையை பார்த்தேன். இந்தியாவில் இது போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட மூடநம்பிக்கையான அராஜகத்தை கனவில் கூட பார்க்கமுடியாது. இப்படிப்பட்ட மூட நம்பிக்கையை எதிர்த்து போராடும் கலைஞரின் படை தமிழ்நாட்டில் உள்ளது. பெண்களின் விடுதலைக்காக போராடி வெற்றிபெற்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகமாகும். ஆகவேதான் தமிழ்நாட்டில் எல்லா பெண்களும் சுதந்திரமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் பெண்கள் சாதிக்கிறார்கள்

பெண் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக பெரியார் விதையை ஊன்றினார். தலைவர் கலைஞர் அதை வளர்த்து பழமாக்கும் வகைக்கு உருவாக்கி உள்ளார். கலைஞருடைய ஆட்சியில் பெண்கள் ஆண்களுக்கு சமம். இன்னும் பெருமையாக சொல்லவேண்டுமென்றால் பெண்கள் ஆண்களை விட அதிகமாக சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு சிறிய உதாரணத்தை சொல்லவேண்டுமென்றால் திருநெல்வேலியில் வீடு வீடாக துணி விற்பனை செய்யக்கூடிய ஒருவரின் மகள் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் இடத்திற்கு வந்துள்ளார். அதுவும் மாநகராட்சி பள்ளியில் படித்து.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துள்ளது. இப்போதுதான் பாராளுமன்றத்தில் 33 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று பேராடுகிறார்கள். ஆனால் தலைவர் கலைஞர் உள்ளாட்சி அமைப்புகளில் எப்போதோ 33 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கி விட்டார்.

இதுபோல பெண்களுக்காக இலவச திருமணதிட்டம், இலவச கல்வி திட்டம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

படங்களுக்கு பெண்கள் பெயர் வைத்தார்

முதல் அமைச்சர் கருணாநிதி அன்று முதல் பெண்களுக்காக போராடி வருகிறார். அவர் அந்தக்காலத்தில் உள்ள படங்களான ராஜகுமாரி மந்திரிகுமாரி, மணமகள், பராசக்தி எல்லாவற்றுக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படத்திற்கு பெண்களின் பெயர் வைத்துள்ளார்.

இந்த காலத்தில் சிங்கம், புலி என்ற பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் படம் எடுக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய கலைஞர் ஒரு பெண் சிங்கத்தை கொடுத்துள்ளார். தாய்க்குலமே கலைஞரை வாழ்த்தும். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு உலகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து ஒருவர் தெரிவித்த வாழ்த்தை உங்களுக்கு நான் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒருவரை கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்மூலம் ரூ.30 ஆயிரம் செலவு செய்து சிகிச்சை அளித்து அவரது உயிரை பிழைக்க வைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. அ.தி.மு.க.வைச்சேர்ந்த ஒருவர். அவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டு கூறினார். வாழ்நாள் முழுவதும் கலைஞருக்கு எதிராக வேலை செய்து இருக்கிறேன் என்றும், அவருடைய போஸ்டருக்கு சாணி எறிந்திருக்கிறேன் என்றும், இன்றைக்கு கலைஞர் போட்ட கையெழுத்து என்னுடைய தலையெழுத்தை மாற்றி உள்ளது என்று கூறினார்.

இதேபோல மக்களுக்காக கலைஞர் பல நன்மைகளை செய்துள்ளார். கலைஞர் தினம் தினம் சரித்திரத்தை படைத்துக்கொண்டிருக்கிறார். சோனியா காந்தி சென்னையில் தலைமைசெயலகத்தை திறந்து வைக்க வந்தபோது இந்த நாட்டின் நலனுக்கு எந்த முடிவு எடுத்தாலும் அதை கலைஞரிடம் ஆலோசித்து எடுப்பதாக கூறினார். வெளிநாட்டில் பிறந்து, வடஇந்தியாவில் வாழ்க்கைப்பட்டு தான் ஒரு இந்தியப்பெண் மணியாக மாறினார். வடஇந்தியாவில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு தமிழரை திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை பெற்ற இந்த அம்மாவுக்கும், அதாவது எனக்கும் நம்முடைய தலைவரின் அருமை பெருமைகள் தெரிகிறது.

ஆனால் இங்கிருக்கிற அம்மாவுக்கு.......

நம் எல்லோருக்காகவும் உழைக்கிற ஒரே தலைவர் கலைஞர்தான். தான் வாழ்கிற வீட்டைக்கூட தானமாக கொடுத்து இருக்கிறார்.

குனியாத தலைவர்

கலைஞரின் சுறுசுறுப்புக்கு ஒப்பிட்டு பேசுவதற்கு உலகத்தில் எந்த தலைவரும் இல்லை. எல்லா சிறந்த குணங்களும் இருப்பதால்தான் மாபெரும் தலைவராக விளங்குகிறார். குளித்தலையில் பெற்ற வெற்றி இன்று வரை குனியாத தலைவராக தலைநிமிரச் செய்து உள்ளது என்றார் குஷ்பு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X