For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டிப்பட்டி- வேன் மீது லாரி மோதி 11 பேர் பரிதாப சாவு

Google Oneindia Tamil News

Theni
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆசாரி விலக்கு என்ற இடத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் முருகனின் தந்தை பெரியராக்கன் என்பவர் கடந்த 16 நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

இதையொட்டி அவரது கருமாதி நிகழ்ச்சி நேற்று வீரபாண்டியில் நடைபெற்றது. இதற்காக பெரியராக்கனின் உறவினர்கள் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் 5 வேன்களில் வீரபாண்டிக்கு சென்றனர்.

கருமாதி நிகழ்ச்சி முடிந்து பிற்பகலில் கிராமத்திற்கு அதே வேன்களில் திரும்பினார்கள். முதலில் பெண்கள் சென்ற 4 வேன்கள் ஊர் போய்ச் சேர்ந்து விட்டன.

கடைசியாக வந்த வேனில் 28 ஆண்கள் பயணம் செய்தனர். வேனை அதே ஊரைச் சேர்ந்த மாடசாமி (28) ஓட்டினார். வேன் பிற்பகல் 2.30 மணி அளவில் ஆண்டிப்பட்டி அருகே ஆசாரிப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது முன்னால் ஒரு லாரி சென்றது. அந்த லாரியை வேன் டிரைவர் முந்திச் செல்ல முயன்றார்.

அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரியும், ஓவர் டேக் செய்ய முயன்ற வேனும் மோதிக்கொண்டன. இதில் வேன் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் உருண்டு நொறுங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்தக் கோர விபத்தில், வேன் டிரைவர் மாடசாமி, பெரியராக்கனின் பேரன் சின்னத்துரை (20), நாகராஜன் (50), பலவேசம் (65), வீரபுத்திரன் (60), பொதுவன் (60), தேவிமுத்து (65), சுப்பிரமணி (60), லாரி டிரைவர் சின்னச்சாமி (38) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

படுகாயமடைந்த 19 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பாண்டியராஜ் உயிரிழந்தார்.

உயிர் ஊசலாடிய நிலையில் இருந்த 3 பேரை மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முத்துராஜ் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆனது.

விபத்தின் காரணமாக ஆண்டிப்பட்டி-தேனி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வைகை அணை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

ஜெ. இரங்கல்- நிதியுதவி

இந்த விபத்து குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி டி.பொம்மிநாயக்கன் பட்டியை சேர்ந்தவர்கள் வீரபாண்டி சென்று உறவினர் வீட்டு ஈமக்கிரியை நிகழ்ச்சியை முடித்துவிட்டு வேன் மூலம் திரும்பும்போது கரிசல் பட்டியில் லாரி மோதியதில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த செய்தி கேட்டு என் மனம் பதபதைக்கிறது. என்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய எனதருமை ஆண்டிப்பட்டி தொகுதி மக்களின் உயிரிழப்பு மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X