For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மொழி மாநாடு: சொர்ணமால்யா நாட்டியம்!

By Chakra
Google Oneindia Tamil News

Swarnamalya
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் கலை நிகழ்ச்சிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு கட்டியம் கூறும் வகையில் கோவை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 11 இடங்களில் செம்மொழிக் கலை விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) துவங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) வரை நடக்கிறது.

கலை விழா நடைபெறும் இடங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாநாட்டின் ஆய்வரங்க குழுச் செயலர் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "செம் மொழிக் கலைவிழா ஜூன் 20, 21, 22 ம் தேதிகளில் 11 இடங்களில் நடைபெறுகிறது. காந்திபுரம் சிறைத்துறை மைதானத்தில் கலை விழாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைக்கிறார்.

தினமும் மாலை 6 முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஒயிலாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், கரகம், காவடி, சக்கைகுச்சி ஆட்டம், சிக்காட்டம், ஒக்கிலிக்கட்டை ஆட்டம், பம்பை ஆட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், துடும்பு ஆட்டம், தேவராட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 750 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் நடனம், ஆனைக்கட்டி மலைவாழ் மக்களின் நடனம், கோவை பரதாலயம் வழங்கும் பேரூர் திருக்கோயில் வரலாறு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

சொர்ணமால்யா நாட்டியம்!

சிறப்பு நிகழ்ச்சிகளாக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி, அலர்மேல் வள்ளி குழுவினர், முனைவர் சிந்தூரி குழுவினர், நடிகை சொர்ணமால்யா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் உணவுத் திருவிழா நடைபெறும். பொதுமக்களுக்கு நியாயமான விலையில் இங்கு உணவு வகைகள் கிடைக்கும்.

செம்மொழிக் கலைவிழா மட்டுமின்றி, மாநாடு நடைபெறும் நாள்களில் மாநாட்டுப் பந்தல், கொடிசியா அரங்கம் ஆகிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்" என்றார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் இந்த கலை விழாவிலும் பங்கேற்கின்றனர்.

கேரள முதல்வருக்கு மாநாட்டு அழைப்பிதழ்:

இந் நிலையில் கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனை திருவனந்தபுரத்தில், தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் என்.சுரேஷ் ராஜன் ஆகியோர் சந்தித்து, கோவைல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர்.

அதே போல கேரள ஆளுநர் ஆர்.எஸ்.கவாயையும் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

கோவையில் பள்ளிகளுக்கு 1 வாரம் விடுமுறை:

வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ள வசதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று தினங்களுக்கு தமிழக அரசு, விடுமுறை அளித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 21, 22ம் தேதியும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

முதல்வர் நாளை கோவை பயணம்:

இந் நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நாளை மறுநாள் கோவைக்கு செல்கிறார்

இதற்கிடையே, கோவை மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வர இருக்கும் தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரதிநிதிகள் குறித்து தகவல் அறிந்துகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் தகவல் அறிய 044 25673535, 044 25673737, 044 25673738.

கோவையில் தகவல் பெற 0422 2211000, 0422 230916070.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X