For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மொழி மாநாடு: உச்சகட்ட பாதுகாப்பு; 11000 போலீஸ் குவிப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

Shailendra Babu
கோவை: கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பாதுகாப்புப் பணிகள் உச்சகட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 11 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் அனைத்து எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகவல்களை கோவை கமிஷனர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

முதல்வர் கருணாநிதியின் கனவுகளில் ஒன்றான உலகத்தமிழ் செம்மொழி மாநாடு 23-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக கோவை கொடீஸியா அரங்கில் நடக்கிறது.

மாநாடு தொடங்க இன்னும் 3 நாட்களே இருப்பதால் கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மாநாட்டு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன உள் அரங்கம், விழா பந்தல், மேடை, கண்காட்சி அரங்கம், சமையல் கூடங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள், அவர்களுக்கான வாகனங்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இந்திய விமானப்படை விமானம் மூலம் கோவை வருகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவர் வரும் பாதை, தங்கும் இடம், விழாவில் கலந்துகொள்ளும் மேடை ஆகிய இடங்களை மத்திய பாதுகாப்பு படை போலீசார் பார்வையிட்டனர்.

முதல்வர் கருணாநிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதிகள் அனைத்தும் போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் கொடீயியா வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எல்லைகள் அனைத்தும் சீல்!

மாநாடு நடைபெறும் இடம் மற்றும் கோவை நகரின் அனைத்து எல்லைகளும் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கெல்லாம் 100 சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த கேமரா அனைத்தும் செயல்படத் தொடங்கிவிட்டன.

இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கோவை மற்றும் விழா பந்தலில் நடைபெறும் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்கலாம். நகருக்குள் நுழையும் அனைத்து பாதைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு விட்டன.

நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

ஆள் இல்லாத குட்டி விமானம்

நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆள் இல்லாத குட்டிவிமானம் மூலம் கொடிசியா வளாகம் மற்றும் கோவை மாநகரம் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் மேட்டுப்பாளையம் பஸ்நிலையம், காந்திபுரம் பஸ்நிலையம், உக்கடம் பஸ்நிலையம், ரெயில் நிலையம், சிங்காநல்லூர் பஸ்நிலையம் மற்றும் விமான நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை போலீசாரும் தகவல்களைச் சேகரித்து வருகிறார்கள்.

வெடிகுண்டு நிபுணர்கள்...

மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் 740 நிபுணர்கள் கோவை வந்தனர். தரையில் இருந்து 20 அடி ஆழம் வரை ஊடுருவிச்சென்று, வெடிப்பொருள்களைக் கண்டறியும் கருவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிற மாவட்டங்களில் இருந்து 20 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

சைலேந்திர பாபு

வெடிகுண்டை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் நிபுணர்கள், மோப்பநாய் பிரிவை சேர்ந்த போலீசார் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணி இடம் என்பது குறித்து கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

"எந்த ரூபத்தில் சதி நடந்தாலும் அதை முறியடிக்கும் சக்தி போலீசாருக்கு உள்ளது. இப்போது எங்களது முக்கிய பணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதுதான்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெடிகுண்டை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் நிபுணர்கள், கமாண்டோ படையினர், சிறப்பு போலீஸ் படை பிரிவினர், அதிரடி படை பிரிவினர் என 11 ஆயிரம் போலீசார் கோவை வந்துள்ளனர்.

யார் மீதாவது சந்தேகம் வந்தால் அவரை பிடித்து உடனே விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் சாதாரண செயல்பாடு, அசாதாரணமான செயல்பாடுகள் போலீசாருக்கு நன்கு தெரியும். எனவே மாநாட்டு பந்தலுக்குள் நுழையும் ஒவ்வொருவரையும் சோதனை செய்வது அவசியமானது..." என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X