For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர்.

Google Oneindia Tamil News

சென்னை: அன்று நெஞ்சு பொறுக்குதில்லை, பொறுக்குதில்லை என்று பாடினான் தமிழ்க் கவிஞன் பாரதி. ஐயகோ இன்று ஆகி விட்டதே தமிழன் நிலை அதோ கதி. இதயம் வெடிக்கிறது, இலங்கைத் தமிழன் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறது என்று கூறியுள்ளார் லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

அன்று நெஞ்சு பொறுக்குதில்லை.. பொறுக்குதில்லை.. என்று பாடினான் தமிழ்க்கவிஞன் பாரதி. ஐயகோ இன்று ஆகி விட்டதே தமிழன் நிலை அதோ கதி..

இதயம் வெடிக்கிறது.. இலங்கைத் தமிழன் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறது.

இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் இலங்கைத் தமிழர் பற்றி வரும் செய்தியைப் படிக்கும்போது உண்மைத் தமிழ் உணர்வுள்ளோர் வயிறு பற்றி எரிகிறது.. இங்கே தன்னிலை மறந்த தமிழனுக்கு எங்கே அது புரிகிறது..

இலங்கையிலே புனரமைப்புச் பணிகள் செய்வதற்காக இந்திய அரசு இலங்கை அரசுக்குக் கொடுத்திருக்கிறது ஆயிரம் கோடி.. அந்தக் கோடியை எடுத்து இலங்கை அரசு சீன அரசிடம் கொடுத்திருக்கிறது நாடி.. சீன அரசு இலங்கையிலே அந்தப் புனரமைப்புப் பணியைச் செய்வதற்காக 25 ஆயிரம் சிறைக்கைதிகளைப் பிடித்திருக்கிறது தேடி..

அந்தச் சிறைக் கைதிகளோடு சேர்ந்து சீன நாட்டு உளவாளிகளும் இலங்கைக்குள்ளே செய்திருக்கிறார்கள் ஊடுருவல். அந்தச் சீனத்து உளவாளிகள் சிங்களத்து விருந்தாளிகளோடு கைகோர்த்து தமிழினத்தைச் சுட்டு சுண்ணாம்பாக்கி ஆக்கப் போகிறார்கள் வறுவல். இதைப் பார்த்து இந்திய அரசு புரியப் போகிறதோ புன்முறுவல். இல்லையேல் இந்திய அரசுக்கு எடுக்கப் போகிறதோ உதறல். இப்பொழுதாவது புரியட்டும் இலங்கைத் தமிழனது கதறல். ஆனால் தென்னிந்தியனாய் எங்களுக்கு எடுத்து விட்டது பதறல்...

ஆம்.. 1962-ல் சீனா அத்து மீறி நுழைந்து இந்தியாவுக்கு கொடுத்தது நெருக்கடி.. சர்வதேச அளவில் சிலர் செய்த சதியால் இந்தியாவுக்கு அப்போது கிடைத்தது பலத்த அடி.. இப்படி உண்மை இருக்க தமிழ் நாட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இலங்கையிலே பதித்திருக்கிறார்கள் சீனர்கள் அடி.. அந்தப் பணியைப் புரிவதற்கு இந்திய அரசே ஆயிரங்கோடி அளந்திருக்கிறது படி... அட தமிழா.. இந்தச் செய்தியையாவது நீ படி.. ஆபத்து புரிந்தால் உள்ளம் துடி.. இல்லை கண்ணீர் வடி..

காரணம்? இத்தனை நாள் சிங்களவன் இலங்கைத் தமிழன் தலையில்தான் போட்டுக் கொண்டிருந்தான் வெடி.. இனி, சீனாக்காரன் நினைத்தால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழன் தலையில்கூடப் போட முடியும் வெடி..

இலங்கையிலே சிங்கள அரசை எதிர்த்து நடத்தப்பட்ட இனப்போராட்டத்திலே இலட்சக் கணக்கிலே தமிழன் இறந்து விட்டான்.. கணக்கிலடங்கா தமிழச்சி தாலியை இழந்து விட்டாள்.. இலங்கையிலே எஞ்சியிருக்கும் தமிழ் இளைஞர்களையும் சிங்களவன் தீவிரவாதி என்று சிறை பிடிக்கிறான்..

இந்த நிலையிலே சிங்களவன் சீனத்து சிறைக்கைதிகளைக் கொண்டு வந்து குடி வைக்கிறான்.. தனித்திருக்கும் என் தங்கச்சிகள்.. தன்மானம் குன்றாத் தமிழச்சிகள் நிலை என்ன?

இராஜபக்சே கையிலே எதேச்சதிகாரம்.. இதிலே சீனத்து சிறைக்கைதிகள் வசம் கொடுக்கிறார் அதிகாரம்.. அவர்கள் நம் தமிழச்சிகளைச் செய்யக் கூடுமல்லவா பாலியல் பலாத்காரம்.. இதற்கெல்லாம் யார் காணப்போகிறார்கள் பரிகாரம்..

தமிழர் நலம் காப்போமென்று சிலர் நாடகமாடப் பூசிக்கொண்டிருக்கின்றனர் அரிதாரம்.. பூமாதேவியாய்ப் பொறுத்திருக்கும் தமிழ்த்தாயே..! பொறுக்க முடியாமல் என்று நீ எடுக்கப் போகிறாய் அவதாரம்..

அன்னை சோனியா பிறந்ததென்னவோ இத்தாலி.. அதன்பின் சோனியா காந்தியாய் அணிந்ததென்னவோ இந்திய தேசத்தின் இத்-தாலி.. அன்று நடந்த வன்முறையால் ராஜீவ் காந்தி மறைந்தபோது இழந்ததென்னவோ அத்-தாலி..

விதியின் காரணமாக அன்னை சோனியா இழந்ததென்னவோ ஒரு தாலி.. ஆனால் சிலர் செய்த சதியின் காரணமாக இலங்கையிலே அத்தனை தமிழச்சிகள் இழந்து விட்டார்கள் தாலி.. பழி வாங்கும் படலம் என்ற பெயரில் இலங்கையில் தமிழர்களைச் செய்து விட்டார்கள் காலி.. இதிலே சீனத்து சிறைக் கைதிகளுக்கும் கொடுத்து விட்டார்கள் மேய்வதற்கு வேலி..

இனியும் இலங்கையிலே தழைக்குமா தமிழ் இனமென்னும் பயிர்.. பிழைக்குமா தமிழரது உயிர்..

இந்தியாவின் நிலை சொந்தக் காசைக்கொடுத்து சூனியம் செய்து கொண்ட கதையாகி விட்டது.

தமிழனே! காலம் கடந்த பின்னாவது சிந்தி.. இல்லையேல் இலங்கையிலிருந்து சீனன் கொடுக்கப் போகும் நெருக்கடியைச் சந்தி என்று கூறியுள்ளார் ராஜேந்தர்.

மீண்டும் பெயரை மாற்றினார் டி.ராஜேந்தர்

இதற்கிடையே, விஜய டி.ராஜேந்தர் தனது பெயரை மீண்டும் டி.ராஜேந்தர் என மாற்றி விட்டார்.

அடுக்கு மொழி வசனத்திற்கு புதிய இலக்கண் படைத்தவர் டி.ராஜேந்தர். ரசிகர்கள் இவரை அன்புடன் டி.ஆர் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பெயரை விஜய டி.ராஜேந்தர் என நேமாலஜிப்படி மாற்றிவைத்தார் டி.ராஜேந்தர்.

இந்த நிலையில் தற்போது தனது பெயரை மீண்டும் டி.ராஜேந்தர் என்று பழைய பெயருக்கே மாற்றி விட்டார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டி.ராஜேந்தர் என்றுதான் எழுதியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X