For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

By Chakra
Google Oneindia Tamil News

World classical Tamil conference opens tomorrow in Coimbatore
கோயம்பத்தூர் முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை கோவை மாநகரில் வெகு கோலாகலமாக தொடங்குகிறது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டது. முதல்வர் கருணாநிதி முன் கூட்டியே கோவை சென்று கடைசி நேர பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இதுவரை உலகத் தமிழர்கள் உலகத் தமிழ் மாநாடுகளைத் தான் கண்டு வந்துள்ளனர். முதல் முறையாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் நாளை கொங்கு மண்டலமான கோவை மாநகரில் தொடங்குகிறது.

5 நாட்கள் நடைபெறும் இந்த எழிலார்ந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். விழா முழுவதும் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நடைபெறுகிறது.

காலை 10.30 மணிக்கு தொடக்க விழா

நாளை காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும். பின்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மைய நோக்குப் பாடல் ஒலிபரப்பாகும்.

அதன் பின்னர் முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார். ஆளுநர் பர்னாலா சிறப்பு மலரை வெளியிட, நிதியமைச்சர் அன்பழகன் தகுதியுரையாற்றுவார்.

அதைத் தொடர்ந்து கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சி இடம்பெறும். பின்லாந்து தமிழறிஞர் அஸ்கோபர் போலோவுக்கு விருதினை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கிக்
கெளரவிக்கிறார்.

இதையடுத்து முதல்வர் கருணாநிதியின் தலைமையுரை இடம் பெறுகிறது. தொடர்ந்து ஆளுநர் பர்னாலா சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடக்க உரை நிகழ்த்துகிறார்.

அமெரிக்கத் தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட், ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழகத்தின் வா.சே. குழந்தைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகிறார்கள். தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியின் நன்றி உரையுடன் காலை நிகழ்வு முடிவடைகிறது.

மாலை 4 மணிக்கு இனியவை நாற்பது

பின்னர் நாளை மாலை 4 மணிக்கு இனியவை நாற்பது என்ற தலைப்பிலான பிரமாண்டப் பேரணி தொடங்குகிறது. இதில் தமிழகத்தின் கலை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையிலான 40 அலங்கார வண்டிகள் இடம் பெற்று பேரணியாக கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவுக்கு அணி வகுத்துச் செல்லவுள்ளன.

கோவை வ.உ.சி. பூங்காவில் தொடங்கும் இந்தப் பேரணி, அவினாசி சாலை வழியாக, மாநாட்டு வளாகம் வரை நடக்கிறது.

இந்தப் பேரணியை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் லட்சுமி மில் அருகே போடப்பட்டுள்ள அலங்கார மேடையிலிருந்து கண்டு களிப்பார்கள்.

இதேபோல மேலும் 6 இடங்களில் மேடைகள் போடப்பட்டுள்ளன. அங்கு பன்னாட்டுத் தமிழறிஞர்கள், முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்து காண்பார்கள்.

முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வரங்கங்கள், கவியரங்குகள், கருத்தரங்குகள் என ஐந்து நாட்கள் மாநாடு களை கட்டவுள்ளது.

செம்மொழி மாநாட்டையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளன.

பிரமாண்ட பாதுகாப்பு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கோவை நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அனைத்து முக்கியச் சாலைகளும் புதுப் பொலிவுடன் காட்சி தருகின்றன. சாலை மின் விளக்குகள் அனைத்தும் சீராக்கப்பட்டு இரவைப் பகலாக்கும் வகையில் பளிச்சிடுகின்றன.

பாதுகாப்புக்காக மட்டும் 11 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்ப் படைகள், வெடிகுண்டு நிபுணர்கள் இரவு பகலாக நகரையே தங்களது பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்து கண்காணித்து வருகின்றனர்.

ரயில் நிலையங்கள், விமான நிலையம், பஸ் நிலையங்கள், முக்கிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்கும் வசதி -சாப்பாடு

மாநாட்டுக்காக வரும் முக்கியப் பிரமுகர்களுக்காக, தமிழறிஞர்களுக்காக திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், லாட்ஜுகள் என அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல சாப்பாட்டு வசதியும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தமிழறிஞர்களுக்கு சிறப்பான உணவு வசதி செய்யபப்ட்டுள்ளதோடு, பொதுமக்களுக்காகவும் சிறந்த உணவை அளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்த உணவு குறைந்த விலையில் ஐந்து நாட்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவை சென்னையில் உள்ள அடையார் ஆனந்த பவன், வசந்த பவன் ஹோட்டல்கள் செய்து தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. ரூ. 30க்கு இந்த சைவ உணவை மக்களுக்காக இந்த ஹோட்டல்கள் தயாரித்து தருகின்றன.

பொதுமக்களுக்காக வழங்குவதற்காக நாலரை லட்சம் உணவுப் பொட்டலங்களாக தயாரித்து விற்கவுள்ளனர். முதல் நாளில் ஒன்றரை லட்சம் உணவுப் பொட்டலங்ளும், மற்ற 3 நாட்ளுக்கு தலா 50 ஆயிரம் பொட்டலங்களும், கடைசி நாளில் ஒன்றரை லட்சம் உணவுப் பொட்டலங்களும் தயாரிக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவரும், வசந்த பவன் உரி்மையாளருமான ரவி கூறுகையில்,

செம்மொழி மாநாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் குறைந்த விலையில் மதிய சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.59 மதிப்புள்ள சாப்பாடு ரூ.30-க்கு விற்கப்படுகிறது.

வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், அரை லிட்டர் மினரல் வாட்டர் கேன், இனிப்பு, காரம், ஊறுகாய் பாக்கெட் அனைத்தும் இதில் அடங்கும். இதேபோல ஒவ்வொரு நாளும் சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என வெரைட்டி சாதங்களும் வழங்குகிறோம் என்றார்.

கண்டு களிக்க கலை நிகழ்ச்சிகள், பிரமாண்டப் பேரணிகள், கேட்டு மகிழ தமிழ் கூறும் நல்லுலகின் பிரமாக்களின் பேச்சுக்கள், உண்டு ருசிக்க தமிழகத்தின் தலை சிறந்த ஹோட்டல்களின் உணவு வகைகள் என நாளை தொடங்கி ஐந்து நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X