For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'குறுவை சாகுபடி பாதித்துவிட்டதே!'.. ஜெயலலிதா கவலை

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக விவசாயிகள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற, வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், பல நூறு கோடி ரூபாயை செலவழித்து நடத்தும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தேவைதானா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொடநாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இரண்டாவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாத அவல நிலைக்கு தமிழக விவசாயிகள் ஆளாக்கப்பட்டு இருப்பதாகவும், சாதாரணமாக 3 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடக்கும் குறுவை சாகுபடி, இந்த ஆண்டு வெறும் 53,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும்;

சென்ற ஆண்டு 56,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டதாகவும்; குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளில் வெறும் 14,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த அளவுக்கு குறுவை சாகுபடி குறைந்ததற்குக் காரணம் காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாததும், அதை திமுக அரசின் முதல்வர் கருணாநிதி தட்டிக் கேட்காததும்தான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

பிரதமர் தலைமையிலான, சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை உள்ளடக்கிய காவிரி நதிநீர் ஆணையக் கூட்டங்களில் தமிழ்நாடு முதல்வர் என்ற முறையில் நான் கலந்துகொண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்துவேன்.

உடனே கர்நாடகத்தின் சார்பில், ஏன் குறுவை சாகுபடி செய்கிறீர்கள்? சம்பா சாகுபடி மட்டும் செய்யுங்கள் என்ற வாதம் எடுத்து வைக்கப்படும். கர்நாடகத்தின் இது போன்ற விதண்டாவாதத்தை கருணாநிதியும் நன்கு அறிவார்.

அதனால்தான் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கேட்காமல் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும்; அதிலும் குறிப்பாக, குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக, ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி. தண்ணீரையும் திறந்துவிட வேண்டும். இதைக் கர்நாடகா செய்யவில்லை.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அமல்படுத்துவதில் கருணாநிதி கவனம் செலுத்தவில்லை என்பதே இதற்கு முக்கியக் காரணம்.

முதல்வர் கருணாநிதியின் முழு கவனமும் செம்மொழி மாநாட்டில் தான் இருக்கிறது. தனது சொந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை.

மாநாட்டிற்காக சிங்கம், காளை மாடு போன்ற சிலைகள், கண்காட்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை துணை முதல்வர் அடிக்கடிச் சென்று பார்வையிடுகிறார் என்று செய்திகள் வருகின்றன. மாநாட்டிற்கு இவ்வளவு ஆர்வமாக செயல்படும் துணை முதல்வர், கர்நாடக முதலமைச்சரைச் சென்று பார்த்து, தமிழக விவசாயிகளுக்குத் தேவைப்படும் தண்ணீரை கேட்டிருக்கலாமே?. ஏன் அந்த எண்ணம் அவருக்கு வரவில்லை

தமிழகத்தில் குறுவை சாகுபடி குறைந்ததற்கு மற்றுமொரு காரணம் கடுமையான மின்வெட்டு. ஒரு நாளைக்கு 9 மணி நேரம் மட்டுமே மின்சார வினியோகம் இருப்பதால், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் தற்போது சோகத்தில் ஆழ்ந்து போயுள்ளதாகவும்;

குறைந்தபட்சம் 14 மணி நேர மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டால், குறுவை சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் ஆலங்குடி, ஆலடிப்பட்டி, அத்தியத்து உள்ளிட்ட கிராமங்களில் கூட்டுறவு வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளை உடனடியாக கடன் தொகையை திரும்பச் செலுத்துமாறு வங்கிகளின் அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்துள்ளதாகவும்;

கடன் தள்ளுபடிக்கான தமிழக அரசின் சான்றிதழை காண்பித்தால், அது பற்றி எல்லாம் தங்களுக்குத் தெரியாது என்று வங்கி அதிகாரிகள் தெரிவிப்பதாகவும்; கடன் தொகையை செலுத்தத் தவறினால் வீடுகள், டிராக்டர்கள் ஆகியவை ஜப்தி செய்யப்படும் என்று மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தமிழக விவசாயிகள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற, வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், பல நூறு கோடி ரூபாயை செலவழித்து நடத்தும் இந்த மாநாடு தேவைதானா?

இவ்வாறு ஜெயலலிதா தனது கொடநாடு அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X