For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரிய நாகரீகம் அழியாமல் காத்ததும் தமிழ்தான்-கருணாநிதி

Google Oneindia Tamil News

கோவை: தமிழ்நாட்டு எல்லை கடந்து இந்தியாவின் வடபுலம் வரை மட்டும் அல்ல, கடல் கடந்து அயல்நாடுகளுக்கும் சென்று, திரைகடலோடித் திரவியம் தேடியது மட்டுமன்றித் திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழ் இனம். திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் 2வது நாளான இன்று ஆய்வரங்கத் தொடக்க விழா நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆய்வரங்குளைத் தொடங்கி வைத்தார்.

மாநாட்டு அரங்கான தொல்காப்பியர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் அன்பழகன் சிறப்பு விழா மலரை வெளியிட்டார்.அதை முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தலைமை தாங்கதினார். வெளிநாட்டு அறிஞர்களான ஜார்ஜ் ஹார்ட், கிறிஸ்டினா, அஸ்கோ பபலோ, அலெக்சாண்டர் துபியான்ஸ்கி, கிரகோரி ஜேம்ஸ், உல்ரிச் நிக்கோலஸ் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை...

அன்னைத் தமிழுக்கு அரிய பயன்தரும் கட்டம் இது. இன்றிலிருந்து தொடங்கி, நான்கு நாட்களுக்கு நடைபெறப்போகும் ஆய்வரங்கங்களின் மூலம்தான், தமிழ் மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து, 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துரைகளையும் நாம் பெறவிருக்கிறோம்.

தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது எல்லா முனைகளிலும் புதிய ஆர்வத்தையும், எழுச்சியையும் நம்மாலே காண முடிகிறது. ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேலான நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது நமக்குப் புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.

ஆழ்ந்த ஆய்வுகளின் காரணமாக உருவாகிடும் சிந்தனைகளைச் சேகரித்துக் கோவைப்படுத்துவதே ஆய்வரங்குகளின் பணியாகும். இத்தகைய
ஆய்வரங்குகள் நடப்பதிலிருந்து நல்ல பலன்களை எதிர்பார்த்திடும் மக்கள் முன், ஆய்வறிஞர்கள்; எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை வழங்கிட வேண்டும்.

ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும்.

அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு, இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.

கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.

இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி. தமிழ் என்னும் உண்மையை உலகத்திற்கு அவர்கள் உணர்த்தினர்.

1927ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு உலகத்தின் கருத்தைத் தமிழின்பால் ஈர்த்தது.

அதன்பின், உலக நாடுகளின் அறிஞர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலியன குறித்தெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் ஆராய்ந்து தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநலம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சி முதலியவற்றை எல்லாம் வெளிப்படுத்தினார்கள். திராவிட இனத் தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.

ரவீந்திரநாத் தாகூர், திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார்.

சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப் என்பவர் வட இந்திய திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டவர். அவர் தமிழர்கள் தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார்.

காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள் திராவிட மொழிப் பிரிவின் கிளைமொழியைப் பேசுகின்றனர். பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் “குருக்கர்" என்போர் திராவிட மக்களே என்பது அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.

இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் எஸ்.கே.சட்டர்ஜி; “இந்தோ-ஆரியன்- இந்து" என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு திராவிட வழிபாடேயாகும்.

அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது.

திச்சநல்லூரின் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.

சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திரதோவ் என்பார், உலகின் பழமை மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும் உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்று கண்டறிந்து உரைக்கின்றார்.

எழுத்து முறையை எகிப்தியருக்குத் திராவிடர் கொடையாகக் கொடுத்தனர்.

பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில், மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த “ஒனசு" என்பார், தமது குழுவினருடன் வந்தார். நாகரிகம் கற்பித்தார். ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார். அறிவியல் கலை, கட்டடக்கலை, ஆண்டவன் வழிபாடு ஆகியவற்றைக் கற்பித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் பக்கம்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X