For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரிய நாகரீகம் அழியாமல் காத்ததும் தமிழ்தான்-கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சங்ககாலம் கி.மு-4ம் நூற்றாண்டின் தொடக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது.

“மத்திய தரைக்கடல், குமரிக்கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கணும் பரவியது தமிழர் நாகரிகமே" என்று இராமச்சந்திர தீட்சிதர் “தமிழர் தோற்றமும் பரவியதும்" என்ற நூலில் கூறியுள்ளார்.

தமிழ்மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை தொல்காப்பியம் போன்றதோர் பழைமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை. அகம், புறம் என்னும் பொருண்மைப் பகுப்பும், திணை, துறை வகுப்பும், சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாதவாறும் கூற்றுநிலையில் அமைந்திடுமாறும் உள்ள அகப் பாடல்களும்; பொய்யும் வழுவும் விரவா மெய்யான தூய காதலைப் போற்றும் மரபும்; மகேசனை மையப்படுத்தாது மனிதனை மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த மொழியிலும் இல்லை.

திருக்குறள்போல உலகப் பொதுமையான அற இலக்கியமும் எந்த மொழியிலும் இல்லை. கடவுளை விடுத்துக் குடிமக்களைத் தலைமக்களாகக் கொண்ட சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பௌத்த சமயத்திற்கு மணிமேகலை போல ஒரு காப்பியம் பாலிமொழியிலும் இல்லை. எல்லாச் சமயங்களையும்- சைவ, வைணவ சமயங்களையும்- சமண, பௌத்த சமயங்களையும் - கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும் இதயத்திலே
ஏந்திக்கொண்ட மொழி தமிழ்.

சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப் பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்துத் தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி. அது மட்டுமல்ல, எல்லா மெய்ப்பொருள் தத்துவங்களையும் விளக்கும் மொழி இது.

தமிழ்நாட்டு எல்லை கடந்து இந்தியாவின் வடபுலம் வரை மட்டும் அல்ல, கடல் கடந்து அயல்நாடுகளுக்கும் சென்று - திரைகடலோடித் திரவியம் தேடியது மட்டுமன்றித் திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழ் இனம்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையினரால் முதலாம் இராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி 1053ம் ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலமாகும். தஞ்சையை விசயாலயச் சோழன் பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக் குறிப்பு இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது. இச்செப்பேடு இந்த மாநாட்டை ஒட்டிய கண்காட்சியில் உங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர்க் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இப்படி காலந்தோறும் தமிழ், தமிழர்கள் கொண்டுள்ள எண்ணற்ற சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்; அவற்றையெல்லாம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள்தான் வெளிநாட்டவர்க்கு எடுத்துரைத்திட வேண்டும். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர் அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து
நிகழ்ந்து வருகிறது.

தமிழன் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை முதலில் தமிழன் உணர வேண்டும், பிறருக்கும் உணர்த்த வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், தமிழ், தமிழ் இனம், தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள முத்திரைகள், சாதித்துள்ள சாதனைகள், இவையெல்லாம் ஒவ்வொரு தமிழனுக்கும் பூரிப்பையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தக் கூடியவை என்றாலும்,

அந்தப் பூரிப்போடும் பெருமிதத்தோடும் நிறைவு அடைந்துவிடக் கூடாது; தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் ஆற்றவேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன என்பதை உணர வேண்டும்.

இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்க மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும், ஜெர்மன் மொழியிலும், பிற மொழிகளிலும் தமிழியல் குறித்தும் தமிழினம் குறித்தும் எழுதப் பெற்றுள்ளவை அனைத்தும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப்பெற்று உலகில் எந்த ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும்.

வகை வகையாய் அகராதிகளும், தொகைதொகையாய்க் கலைக் களஞ்சியங்களும் வரவேண்டும். இன்னும் என்னென்ன வேண்டும் தமிழுக்கு என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற பாவேந்தர் கருத்துப்படி, பாட்டையை அமைத்துக் கொண்டு, உயிர் உள்ளவரை தமிழுக்காகப் பாடுபட- நம்மைத் தமிழுக்கு முழுமையாக ஒப்படைத்திட- நமது தமிழ்த் தொண்டுப் பயணத்தை மேலும் வேகமாகத் தொடர்ந்திட- உரிய ஊக்கத்தையும், உறுதியையும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நமக்கு அளித்துள்ளது.

இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் ஆய்வரங்கின் பல்வேறு அமர்வுகளில் வழங்கப்பெறும் கட்டுரைகளிலும், முகப்பரங்கம், கலந்தாய்வரங்கம், பொழிவரங்கம், கலந்துரையரங்கம் ஆகியவற்றிலும் முன் வைக்கப்படும் கருத்துகளும், அவை மீதான ஆரோக்கியமான விவாதங்களும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும் என்று கூறி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கை மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் தொடங்கி வைக்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

 <strong>முதல் பக்கம்.... </strong> முதல் பக்கம்....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X