For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மொழி மாநாடு.. 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து பார்த்த மக்கள்!

By Chakra
Google Oneindia Tamil News

கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் 2-வது நாளான நேற்று, மாநாட்டைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அரங்குக்கு வெளியே 2 மணிநேரம் காத்திருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.

மாநாட்டின் முதல் நாளை விட இரண்டாம் நாள் கூட்டம் திமிலோகப்பட்டது. காலை முதலே பிரமாண்ட பந்தலில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

குறிப்பாக மத்திய அமைச்சர் முக அழகிரி திறந்து வைத்த கண்காட்சியைக் காண கூட்டம் அலைமோதியது.

கோவை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, துடியலூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர்.

மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்கில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. அவினாசி சாலையில் மக்கள் சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ரோட்டின் இருபுறமும் போலீசார் அரண்போல் நின்று பொது மக்களை கொடிசியா வளாகத்திற்கு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தினர்.

பிற்பகலில் இருந்து நள்ளிரவு வரை மாநாடு பந்தல், கண்காட்சி அரங்கில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கியூவில் நின்று 2 மணி நேரம் வரை காத்திருந்து கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

ஏராளமானோர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். கண்காட்சியை வாண்டுகளும் மிகவும் ரசித்து பார்த்தனர். கண்காட்சியை பார்க்க வருபவர்களின் கூட்டம் திருப்பதியை மிஞ்சி விட்டது போல் உள்ளது.

இரவு 7 மணிக்கு மேலும் கூட்டம் அலைமோதியது கண்காட்சி அரங்கம் இரவு 9மணிக்கு மூடப்பட்டது. இதனால் பலர் கண்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் இன்று சீக்கிரமே வந்து கண்காட்சியை கண்டிப்பாக பார்த்து விடுவோம் என்றனர் ஆர்வம் குன்றாமல்.

கடந்த இரு தினங்களும் மாநாட்டில் புத்தக ஸ்டால்கள் போட்டிருக்கும் பதிப்பாளர்கள் காட்டில் பணமழை. புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் பார்வையாளர்கள். சிறப்புத் தள்ளுபடி ஏதுமில்லாமலே, அனைத்து வகைப் புத்தகங்களும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புத்தகக் கண்காட்சியில் கூட இப்படி ஒரு விற்பனையைப் பார்க்க முடியாது என்றார் ஒரு விற்பனையாளர்.

3 மணிநேரம் ரசித்த முதல்வர்

கலை நிகழ்ச்சிகளை பார்வையிட முதல்வர் கருணாநிதி மாலை 5.30 மணிக்கு மாநாட்டு பந்தலுக்கு வந்தார். அப்போது 'சமயம் வளர்த்த தமிழ்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வரைப் பார்த்ததும் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்தவர் மக்கள் உற்சாகமடைந்தனர். கருணாநிதியைப் பார்த்து கை அசைத்தனர். அவரும் பதிலுக்கு கை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.

இதில் பேராயர் சின்னப்பா, சாரதா நம்பி ஆரூரான், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீபால், பேராசிரியர் ஞானசம்பந்தன், அமுதன் அடிகள், பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் சொற்பொழி வாற்றினார்கள். அதனை முதல்வர் கருணாநிதி உற்றுக் கவனித்து ரசித்தார்.

அதைத் தொடர்ந்து கருணாநிதியின் பேத்தி எழிலரசி ஜோதிமணியின் வீணை இசைக் கச்சேரி நடைபெற்றது.

இதனை முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருக்கும் முன் வரிசையில் அமர்ந்து முதல்வர் கருணாநிதி ரசித்து பார்த்தார். வீணை இசைக் கச்சேரி முடிவடைந்ததும் பத்மா சுப்பிரமணியம் நிருத்யோதயா குழுவினர் வழங்கிய, கலைஞரின் 'போர்வாளும் பூவிதழும் என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியின் மரபு நடன நிகழ்ச்சி அரங்கேறியது. இவை அனைத்தையும் 3 மணி நேரத்துக்கும் மேலாக மாநாட்டு பந்தலில் அமர்ந்து ரசித்துப் பார்த்தார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X