For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இணையத்தின் மூலம் தமிழை நோக்கி திரும்பிய இளைய சமுதாயம்: இராம.வீரப்பன்

By Chakra
Google Oneindia Tamil News

Veerappan
கோவை: கணினியின் மூலம், இணையத்தின் மூலமும் இளைய சமுதாயம் தமிழை நோக்கித் திரும்பியிருக்கிறது என்று எம்ஜிஆர் கழக தலைவர் இராம.வீரப்பன் கூறினார்.

கோவை செம்மொழி மாநாட்டில் நடந்த 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற கருத்தரங்கில் வீரப்பன் பேசுகையில்,

இன்றைக்கு இந்த மாநாடு தேவையா என்று சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில், இப்போதுதான் இந்த மாநாடு தேவை.

15 ஆண்டுகள் கழித்து தமிழுக்கு மாநாடு நடைபெறுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகளுக்கும் இப்போது நடைபெறும் மாநாட்டுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு, தற்போது நடைபெறுவது செம்மொழி மாநாடு.

விழுந்து விழுந்து, எழுந்து எழுந்து, எதிர்ப்புகளைச் சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி தமிழ். அதை செம்மொழியாக்கி அழகு பார்க்க நூறு ஆண்டுகள் போராட வேண்டியிருந்திருக்கிறது.

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்று தமிழத்தில் ஆக்க வேண்டும். இதுவே இக் கருத்தரங்கின் நோக்கம். தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும், பரப்பவும் இணையதளத்தால் மட்டுமே முடியும்.

கணினியின் மூலம், இணையதளத்தின் மூலம் இளைய சமுதாயம் தமிழை நோக்கித் திரும்பியிருக்கிறது.

சில கருத்துகளைக் கூறி விவாதத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. சிலர் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்கின்றனர். தமிழகத்தில் தற்போது தமிழ்தான் ஆட்சி மொழி. சில விஷயங்களில் முதல்வர் கருணாநிதி பொறுமையாகத்தான் இருப்பார். ஆனால் முடிவில் பலன் கிடைத்ததா என்பதுதான் முக்கியம் என்றார்.

தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும்-ஜி.கே.மணி:

பாமக தலைவர் ஜி.கே. மணி பேசுகையி்ல், ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்பதை அரசு மட்டும் செய்தால் போதாது, ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டும்.

வெளிநாட்டினர் தூய தமிழில் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலையோ எதிர்மாறாக உள்ளது.

பள்ளிகளில் பிரெஞ்சு படிக்கலாம், இந்தி படிக்கலாம், ஆனால், தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை பயின்று பட்டம் பெற்றுவிடலாம் என்ற நிலை இருந்தது. அதை அரசு இப்போது மாற்றியுள்ளது. அதற்குத் தீர்வு கண்டவர் முதல்வர் கருணாநிதி.

தமிழ் வாழ்வதற்கு முதலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அண்டை நாட்டில் அல்லலுறும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க, அரசும், தாயக தமிழர்களும் பாடுபட வேண்டும் என்றார்.

எழுத்துச் சீர்திருத்தம் அவசியம்: கி. வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில், பழம்பெருமை பேசிக் கொண்டே இருந்துவிடாமல், 21ம் நூற்றாண்டுக்கு தமிழைக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை அரசு துணிச்சலாக மேற்கொள்ள வேண்டும்.

கணினித் தமிழை மேம்படுத்த எழுத்துச் சீர்திருத்தம் மிக அவசியம். எழுத்துச் சீர்திருத்தத்தை இப்போது எதிர்ப்பவர்களும் பின்னாளில் ஏற்றுக் கொள்வார்கள்.

எங்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், அதை தாயகத் தமிழர்கள் தட்டிக் கேட்பார்கள் என்ற நம்பிக்கை, உலகத் தமிழர்களுக்கு ஏற்படும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார் வீரமணி.

மக்கள் மொழியிலேயே மக்களாட்சி-யெச்சூரி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி பேசுகையி்ல், மொழியின் தோற்றம் குறித்து 'ஜெர்மானிய தத்துவம்' என்ற நூலில் ''அது சிந்தனையின் உடனடி வெளிப்பாடு'' என்றார் காரல் மார்க்ஸ்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தியாகராஜர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவருமே வெவ்வேறு தாய் மொழிகளைக் கொண்டவர்கள். ஆனால், மூவரும் தெலுங்கில் பாடினர். ஆயினும் அந்த இசை கர்நாடக சங்கீதம் என்று அழைக்கப்பட்டது. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை.

மக்களின் மொழியில் ஆட்சி நடைபெறாவிட்டால் மக்களாட்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை.

மொழி சமூகத்தின் அடையாளம். அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்வியல் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் கருவி என்றார் யெச்சூரி.

தமிழ் தெரியவில்லை என்றால் தற்குறி-இல.கணேசன்:

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் பேசுகையில், நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், தமிழால் இங்கே ஒன்றுபட்டிருக்கிறோம்.

''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்ற முழக்கம் ஒன்றும் புதிதல்ல. ம.பொ.சி. தொடங்கிய முழக்கத்தை இப்போது முதல்வர் கருணாநிதி காலம் வரை சொல்லிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்திலும் இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்காமல் அதை அமலாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அரசு செய்ய வேண்டும் என்றாலும்கூட, மக்களாகச் செயய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

மொழி என்பது வெறும் கருவிதான் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது பண்பாட்டின் அடையாளம். தமிழ்நாட்டில் பிறந்தவன் ஆயிரம் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தமிழ் தெரியவில்லை என்றால் அவனை தற்குறி என்றுதான் கூறுவேன் என்றார் இல. கணேசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X