For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பட்ஜெட் போல நிறைய அறிவிப்புகள் வெளியிடுவேன்-கருணாநிதி

Google Oneindia Tamil News

St George Fort
செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பட்ஜெட் போல நிறைய அறிவிப்புகள் வெளியிடுவேன்-கருணாநிதி

கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவின்போது தமிழக மக்களுக்காகவும், தமிழுக்காகவும் நிறைய அறிவிப்புகளை வெளியிடவுள்ளேன். அது இன்னொரு பட்ஜெட் போல சிறப்பு கொண்டதாக அமையும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நேற்று மாலை செம்மொழி மாநாட்டின் 3ம் நாள் முத்தாய்ப்பு விழாவாக முதல்வர் கருணாநிதி தலைமையில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடந்தது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட அரசியல் கருத்தரங்கமாக இது இருந்தது.

இதில் தலைமையேற்று முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

கடந்த நான்கு நாட்களாக கோவை நகரில் எங்கு பார்த்தாலும் தமிழர் கூட்டம் அலை மோதுகிறது. கருத்தரங்கம், ஆய்வரங்கம் மற்றும் கட்டுரைகளில் கேட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், நிறைவு விழாவில் நிறைய பேசவுள்ளேன்.

அரசியல் தலைவர்களும், அறிஞர்களும் தருகின்ற ஆணைகளை எப்படி நிறைவேற்றுவது என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாவில் அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இங்கு வந்துள்ள அரசியல் தலைவர்களை பார்த்து, பழைய கூட்டணி மீண்டும் சேர்ந்துவிட்டதா என்று பலரும் வியந்துள்ளனர்.

கூட்டணி பிரிந்தாலும், சிதைந்தாலும், எல்லா கட்சிகளையும் சேர்க்கும் சக்தி என்னிடம் உள்ளது. அது மாயமோ, மந்திரமோ இல்லை. என்னிடம் இருக்கும் தமிழ் என்ற சக்தி தான் அது. அதை எல்லாரும் உணர்ந்திருக்கிற காரணத்தால் தான், தமிழுக்கு வாழ்வளிக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கருத்தரங்கிற்கு கம்யூ., கட்சியினரை அழைத்தால் வருவார்களோ என்ற சந்தேகத்தால், தமிழகத்திலுள்ள கட்சிகளை மட்டும் அழைக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், ராஜாவும், சீத்தாராம் யெச்சூரியும் கேட்டவுடனே ஒப்புக்கொண்டதோடு, மிகுந்த சிரமத்திற்கு இடையே இங்கு வந்துள்ளனர்.

அவர்களை இங்கு வரவழைத்ததற்காக தமிழ்த்தாய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நாமெல்லாம் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நம் மொழிக்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அறப்போராட்டத்தை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காகவே இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம்.

தமிழக காங்., தலைவராக இருக்கும் தங்கபாலு, மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்காமல், என்னிடம் 10 கோரிக்கைகளை வைத்துள்ளார். எந்த கோரிக்கையை எப்படி வைத்தால் நிறைவேறும் என்ற எண்ணத்தில் அவர் என்னிடம் இக்கோரிக்கைகளை வைத்திருக்கலாம்.

உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்து காட்டியவர்களின் வழியில் வந்தவர்கள் நாம் என்பதோடு, தமிழைக் காப்பதற்கான பல செயல்களையும் செய்து காட்டியிருக்கிறோம். தமிழ் மறுமலர்ச்சி பெறும் வகையில், மாநாட்டில் பெறுகின்ற கருத்துக்களைச் செயல்படுத்த எல்லாரும் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். அதற்குரிய வகையில் எல்லாரும் தமிழைக் காப்பதற்கான பயிற்சிகளை எடுக்க வேண்டும்எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தான், தமிழுக்காக இவ்வளவு முயற்சிகளை எடுப்பதாக பலர் கூறுவதுண்டு.

என்னை விட ஆங்கிலமும், பல்வேறு மொழிகளும் தெரிந்த பல அறிஞர்களும் கூட, தமிழ் வளர்ச்சிக்கு என்று பல வழிமுறைகளை காண்பித்துள்ளனர். தமிழர்கள் எல்லாரும் தமிழில் பேச வேண்டும்; வீட்டிலும் தமிழ் தவழ வேண்டும்; பிற மொழி தெரிந்தாலும் தமிழ் உணர்வோடு இருக்க வேண்டும். சங்க காலத்தில் இருந்து இன்று வரை, தமிழ் பல்வேறு சிக்கல்களை சந்தித்திருக்கிறது.

மூவேந்தர் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்ததால் பல இலக்கியங்கள் தோன்றின. அதன் பின், களப்பிரர் காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் தராததால் அந்த ஆட்சியே இருளடைந்து போனது. ஆறு, ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு காலங்களில், பல்லவர்களின் ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஒன்பதாவது நூற்றாண்டில் தான் சோழ, பாண்டியர்களின் ஆட்சியில் தமிழ் செழிக்கத் துவங்கி, 13ம் நூற்றாண்டு வரை தழைத்தோங்கியது. ஆனால், 14ம் நூற்றாண்டில் இருந்து தமிழ் சீரற்றுப் போனது. அந்த நிலையை மாற்றவே, பரிதிமாற் கலைஞர் போன்றோர் தமிழுக்குச் செம்மொழி தகுதி வேண்டுமென்று தமிழ் உணர்வோடு போராடினர். அதன் பின், புலவர்களும் கவிஞர்களும் தொடர்ந்து போராடி வந்தனர்.

அன்றில் இருந்து இன்று வரை போர்க்குரல் கொடுத்ததால், நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து எடுத்துச் சொல்ல வேண்டிய முறையில் மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி இந்த பெருமையைப் பெற்றிருக்கிறோம். நம்முடைய தொடர் முயற்சியால், மைசூரில் இருந்த செம்மொழி ஆய்வு நிறுவன அலுவலகத்தை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அந்த அலுவலகத்திற்கு இடமில்லாமல் 10 கி.மீ., தூரத்தில் நிலம் வாங்கி கட்டடம் கட்ட தீர்மானித்து, அதுவரையிலும் சிறிய வாடகை கட்டடத்தில் அலுவலகத்தை நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால், இப்போது புதிய சட்டசபை கட்டடம் கட்டப்பட்டு விட்டதால், பழைய சட்டசபை வளாகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்த அலுவலகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு, பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை கொண்டு செல்லும் பணி துரிதமாக நடந்து வருகிறது. முதல்வர் இருந்த அறையில் செம்மொழி அலுவலக தலைவரின் அறை செயல்படும். தமிழ்ச் செம்மொழியை வாழ வைக்கவும், வளர வைக்கவும் அடித்தளத்தை அமைத்து விட்டோம்.

இந்த பெருமை மட்டும் போதாது. உலகமெல்லாம் தமிழ் மொழி செல்வாக்கு பெற்றிடவும், தமிழர்கள் கணினி தமிழைக் கற்று சிறந்து விளங்கவும், தேவையான அறிவுரைகளை ஏற்று பல திட்டங்களை செயல்படுத்துவோம். இந்த மாநாட்டில் நான்கு நாட்களில் நடந்துள்ள கருத்தரங்கம், ஆய்வரங்கம் ஆகியவற்றில் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் பல அறிவிப்புகளை வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.

நிறைவு விழாவில் நான் வெளியிடப்போகும் அறிவிப்புகள், ஏறத்தாழ இன்னொரு பட்ஜெட் தாக்கலைப் போல இருக்கும் என்று உறுதி கூறுகிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X