For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதர்சனம் மறைவு எதிரொலி-பூந்தமல்லிக்கு இடைத் தேர்தல் வருமா?

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மரணமடைந்துள்ளதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பூந்தமல்லி சட்டசபைத் தொகுதி காலியாகியுள்ளது. இருப்பினும் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குச் சென்றிருந்த சுதர்சனத்திற்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் நேற்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை நடந்த செம்மொழி மாநாடு நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரவில் சென்னை வந்து சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.க. தலைவர் கி.வீரமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலான குழுவினர் சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் அஞ்சலி:

இந் நிலையில் கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இன்று விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்வர் கருணாநிதி, விமான நிலையத்தில் இருந்து நேராக, அமைந்தகரை ஷெனாய் நகரில் உள்ள சுதர்சனம் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இன்று உடல் தகனம்:

இன்று சுதர்சனத்தின் உடல் தகனம் நடைபெறுகிறது.

இடைத் தேர்தல் வருமா?:

டி.சுதர்சனம் இறந்ததையடுத்து சட்டமன்றத்தில் 36 ஆக இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பிறகு 11 இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக, மார்ச் 27ம் தேதியன்று, பென்னாகரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பூந்தமல்லி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நரேஷ் குப்தா கூறுகையில்,

சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் டி.சுதர்சனத்தின் மறைவு குறித்து பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அவரது தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றி இன்னும் சிந்திக்கவில்லை.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான கால அவகாசம் இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளது. சட்டமன்றத்தில் ஆட்சிக்காலம் முடிவதற்கு 6 மாதத்துக்கு முன்பாகவே ஒரு உறுப்பினர் மறைந்துவிட்டால் இடைத்தேர்தல் நடத்தலாம்.

ஆனால், 5 ஆண்டுகால ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பான ஓராண்டு காலத்துக்கும் குறைவான காலகட்டத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்து விட்டால் பொதுவாகவே இடைத்தேர்தல் நடத்தப்படுவதில்லை. இருப்பினும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்துடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார் குப்தா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X