For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

World tamil Conference
கோவை: தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் தமிழகத்தை சூழலியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிலப் பகுதிகள், தாவரங்கள், விலங்குகளைக் கொண்டவை.

ஐந்திணை நில வகை பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள்:

இந்த அமைப்பு இயற்கை வளம், உணவு உத்தரவாதம், உடல் நலம் காத்தலுக்கும், சித்த மருத்துவத்துக்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை 2010ம் ஆண்டை உலக உயிரியல் பன்மை (bio diversity) ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசின் சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் அமைப்பாளராக இருப்பார்.

இலங்கை விவகாரம்:

இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.

மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

தமிழை முதலில் ஆட்சி மொழியாக்க வேண்டும்:

மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் செம்மொழியான தமிழை முதல் கட்டமாக ஆட்சி மொழியாக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று தமிழின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்திய கல்வெட்டுகளில் 60% தமிழே:

நாட்டில் இதுவரை அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இதையும் இனி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கல்வெட்டுகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையான திட்டம் வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதை நிறைவேற்ற அரசு அலுவலர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிறந்த தமிழ் மென்பொருளுக்கு பூங்குன்றனார் விருது:

தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும்.

தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X