For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிவியல் புதுமைகளுக்கு ஏற்ப தமிழை வளர்ப்போம்: கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
கோவை: அரசர்களும், புலவர்களும், அறிஞர்களும், கவிஞர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், பன்னாட்டு ஆய்வாளர்களும் வளர்த்து வாழ்வித்துள்ள அன்னைத் தமிழ்மொழியை, எதிர்வரும் காலத்தில், நாளும் மலரும் அறிவியல் புதுமைகளுக்கேற்ப, வளர்த்து கட்டிக்காப்போம்; வருங்காலத் தலைமுறைக்கு வற்றாத செல்வமாய் வழங்கிக் களிப்போம்; என இந்த மாநாட்டில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் நேற்று முடிவடைந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...

இந்த மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் எடுத்துரைத்தார். பக்கத்தில் நிதி அமைச்சர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவர் சொன்னதை எல்லாம் செய்வதாக ஒப்புக்கொள்கிறேன்.

இந்த மாநாட்டிலே இரண்டு நாளைக்கு முன் நான் அறிவித்தவாறு ஏறத்தாழ நிதிநிலை அறிக்கைபோல என்னுடைய பேச்சை தயாரித்திருக்கின்றேன். நிதிநிலை அறிக்கை என்றவுடன் பிரணாப் பயந்துவிட வேண்டிய அவசியம் இல்லை.

நான் நம்பிக்கையோடு இருப்பதற்கு காரணம் பிரணாப் என்னிடத்திலே கொண்டுள்ள அன்பு, தமிழ் மக்களிடத்திலே அவர் கொண்டிருக்கிற அன்பு, அக்கறை, தமிழின் பால் உள்ள பற்று ஆகியவை காரணமாக நான் இந்த மாநாட்டிலே விளையவுள்ள பல்வேறு காரணங்களுக்கு நிதியுதவி அதிகம் தேவைப்படுகிறது. அந்த நிதியுதவி மத்திய பேரரசு தான் வழங்க வேண்டும். பக்கத்திலே வலது பக்கம் பிரணாப்பும், இடது பக்கத்தில் ப.சிதம்பரமும் இருக்கின்ற போது நாம் நிதியைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

ஐந்து நாட்களாக கோவை மாநகரில் எழுச்சியும், ஏற்றமும் கொண்டு நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று நிறைவு விழா காண்கிறது.

இந்த நிறைவு விழாவில் எனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்புக்குரியது தமிழ் மொழி. தமிழ்மொழியின் தொன்மையை ஏனைய உலக மொழிகளோடு ஒப்பிட்டு நோக்கினால், அதன் அருமையும், பெருமையும் மேலும் உயர்வதை அனைவரும் உணரமுடியும்.

இன்று உலக மொழியாக திகழும், ஆங்கில மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

அறிவியல் மொழியாகிய ஜெர்மன் மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

பிரெஞ்சு மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 9-ம் நூற்றாண்டில் தான் கிடைத்தது. ரஷ்ய மொழியின் பழமையான எழுத்து வடிவம் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லத்தீன் மொழியில் இருந்து உருவான இத்தாலிய மொழி 10-ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது.

ஆனால் கிறித்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகட்கு முன்பே முதல் எழுத்து ஆவணமாக, தொல்காப்பியம் நூலை பெற்று, இலக்கண வரம்பு கொண்டு வாழ்ந்த தமிழ்மொழி இன்றும் சாமானியர் முதல் ஆன்றோர், சான்றோர் வரை வாழும் மொழியாகவும், வளரும் மொழியாகவும், வரலாற்று மொழியாகவும் திகழ்வதனால்தான், இன்று உலக அளவில் அறிஞர்கள் கூடி விழா எடுக்கும் பெருமையைப் பெற்றுள்ளது.

காதல், வீரம் இரண்டும் தமிழர்களுக்கு எத்தகைய உணர்வுபூர்வமான பெருமை அளித்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக சங்கப்பாடலில் காட்சிகள் உள்ளன.

கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். கிழக்கே சீனா முதலிய பல நாடுகளுடனும் ஜாவா, சுமத்ரா, மலேயா முதலிய தீவுகளுடனும் தமிழ்நாடு வாணிகம் காரணமாக தொடர்பு கொண்டிருந்தது.

தமிழர்களின் கலைத்திறன்கள் உலக அறிஞர்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இசை, நடன, நாடக கலைச் சிறப்புகளைச் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை புலப்படுத்துகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் கரிகாற் சோழனால் கட்டப்பட்ட கல்லணை தமிழரின் பொறியியல் கலைத் திறனுக்கு தகுதிமிக்க சான்றாகும். கி.பி. 6-ம் நூற்றாண்டு கால மாமல்லபுரச் சிற்பங்கள், தமிழரின் அரிய சிற்பக் கலைச் சின்னங்களாகத் திகழ்கின்றன. அழகோவியமாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் 10-ம் நூற்றாண்டில், கட்டிடக் கலையில் தமிழகம் பெற்றிருந்த ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது.

தமிழ்ச் சமுதாயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் முத்திரைக் குறியீடாக இலங்குவது தமிழ்மொழி, தொன்மையால் இலக்கண இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படும் வாழ்வியல் நெறிகளால், நீதி நிர்வாக, அறநெறி வழிகளால், இன்னபிறவற்றால், மிக உயர்ந்த மாண்புகளைக் கொண்டுள்ளது செம்மொழியாகிய தமிழ்மொழி.

தமிழ்ச் செம்மொழியெனும் தகுதிபெறத்தக்க இலக்கியச் செல்வங்களைப் படைத்தளித்த சங்ககாலப் புலவர் பெருமக்களை - சான்றோர்களை - அவர்கள் அனைவரையும் ஆதரித்து தமிழ் வளர்த்த வேந்தர்களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' கண்ட அறிஞர் டாக்டர் கால்டுவெல்; தமிழ்மொழியின் அருமைகளை அவனிக்கு எடுத்துரைத்த ஜி.யு.போப், வீரமாமுனிவர்; தமிழ் செம்மொழியே என அறிவித்த சூரியநாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர்; சங்க இலக்கியச் செல்வங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மீட்டெடுத்து, அச்சு நூல் வடிவம் பெறச்செய்த டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர்; அவரைப் போலவே, தமிழ் நூல்களை ஆராய்ந்து, அச்சிட்டு அளித்த சி.வை.தாமோதரம் பிள்ளை; இருபதாம் நூற்றாண்டில் தமிழ் புத்துயிர் பெற உழைத்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளார்; தமிழ்த் தென்றல் திரு.வி.க.; நாவலர் வேங்கடசாமி நாட்டார்; மகாகவி பாரதியார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்; ஈழத்து தனிநாயகம் அடிகளார்; வ.அய்.சுப்பிரமணியனார், தமிழ் எழுத்து சீர்திருத்தம் தந்த பெரியார்; தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அண்ணா போன்ற எண்ணற்ற தமிழ்ச் சான்றோர்களையும் இந்த இனியவேளையில் நினைவுகூர்ந்து, வணங்கிப் போற்றுகிறேன்.

அரசர்களும், புலவர்களும், அறிஞர்களும், கவிஞர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், பன்னாட்டு ஆய்வாளர்களும் வளர்த்து வாழ்வித்துள்ள அன்னைத் தமிழ்மொழியை, எதிர்வரும் காலத்தில், நாளும் மலரும் அறிவியல் புதுமைகளுக்கேற்ப, வளர்த்து கட்டிக்காப்போம்; வருங்காலத் தலைமுறைக்கு வற்றாத செல்வமாய் வழங்கிக் களிப்போம்; என இந்த மாநாட்டில் நாம் அனைவரும் உறுதியேற்போம்;

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைகின்ற இந்நாள் வரை, அல்லும், பகலும் அயராமல், ஒல்லும் வகையிலெல்லாம் ஓய்வின்றி உழைத்துப் பாடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்துப் பாராட்ட வேண்டும்; ஆனால், அதற்கு நேரமும், இடமும் பொருந்தாத நிலையில் அனைவரும் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து என்னை அணி செய்கிறீர்கள் என்னும் மகிழ்வோடு, உங்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

தமிழக அரசின் சார்பில் நான் விடுத்த அழைப்பினை ஏற்று, இம்மாநாட்டிற்கு வருகை தந்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து, தமிழ்மொழியின் மேன்மைக்குப் பங்காற்றியுள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தமிழ் அறிஞர்களுக்கும், குறிப்பாக, கோவை மாநகர மக்களுக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டின் சிறப்புக்கு காரணமாக இருந்த மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களையும், அனைத்து கட்சிகளின் தலைவர்களையும், நான் மனமாரப் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நமது அன்பான அழைப்பினையேற்று, இன்று இங்கே வருகை தந்துள்ள மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் எனது நன்றியை உரித்தாக்குக்கிறேன்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து, உரையாற்றிய இந்திய குடியரசு தலைவருக்கும், தொடக்க விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு கவர்னருக்கும், எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X