For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் மீதான வரிக் குறைப்பு: பாஜக, இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் என்ன செய்தார்கள்? - கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மாநில அரசுகள் தங்கள் வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லும் போது- தற்போது பெட்ரோலிய விலை உயர்வுக்காக போராட்டம் நடத்தப் போகின்ற பா.ஜ.க., இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களிலே எந்த அளவுக்கு தாங்கள் வசூலிக்கும் வரியைக் குறைத்துக் கொண்டார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: பெட்ரோல், டீசல் விலையினை மத்திய அரசு உயர்த்தியதின் காரணமாக பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று நீங்கள் அறிவித்திருப்பது ஒன்றும் பெரிய சாதனையல்ல என்று ஒருவர் அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: அது சாதனையா அல்லவா என்பதை பேருந்துகளில் பயணம் செய்யும் சாதாரண, சாமான்ய மக்களைக் கேட்டால் சொல்வார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்றும் அதன் காரணமாக அரசுக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் நான் அறிவித்திருப்பது அறிக்கை விடுத்தவருக்கு பெரிய சலுகையாகத் தோன்றாது!

கேள்வி: பெட்ரோலிய பொருள்களின் மீது மாநில அரசால் விதிக்கப்படும் வரி விகிதத்தைக் குறைக்கப் போவதாக ஆந்திர மாநில முதல்வர் அறிவித்திருக்கிறாரே?

பதில்: இன்னும் அறிவிக்கவில்லை. அதுபற்றி அமைச்சரவையிலே விவாதித்து முடிவெடுக்கப் போவதாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் தற்போது ஆந்திரா யோசித்துக் கொண்டிருக்கும் இந்த முடிவினை தமிழக அரசின் சார்பாக 2006-ம் ஆண்டிலேயே மத்திய அரசு பெட்ரோலிய பொருள் களின் விலையை உயர்த்திய போது- தமிழகத்திலே டீசலின் மீதான விற்பனை வரியை 25 சதவீத்தில் இருந்து 23.43 சதவிகிதமாகக் குறைத்துக் கொண்டோம்.

அதுபோலவே 2008-ம் ஆண்டு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது தமிழக அரசு 23.43 சதவீதத்தில் இருந்து 21.43 சதவீதமாகக் குறைத்துக் கொண்டது. அப்போது வேறு எந்த மாநிலங்களும் தங்கள் மாநிலத்துக்கு கிடைக்கும் வரியைக் குறைத்துக் கொள்ள வில்லை என்பதுதான் உண்மை.

அது மாத்திரமல்ல; தற்போது மாநிலங்களுக்குள்ள வருவாய் ஆதாரங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில், இதையும் மேலும் மேலும் குறைத்துக் கொண்டே சென்றால், அது மாநில அரசுகளின் நிதி நிலைமைகளை மிகவும் பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மாநில அரசுகள் தங்கள் வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லும் போது- தற்போது பெட்ரோலிய விலை உயர்வுக்காக போராட்டம் நடத்தப் போகின்ற பா.ஜ.க., இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களிலே எந்த அளவுக்கு தாங்கள் வசூலிக்கும் வரியைக் குறைத்துக் கொண்டார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கேள்வி: இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருள்களின் மீது அதிகப்பட்சம் வரிவிதிக்கும் மாநில அரசு தமிழ்நாடுதான் என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா?

பதில்: ஆந்திராவில் பெட்ரோலுக்கு 33 சதவீதமும், டீசலுக்கு 22.25 சதவீகிதமும் உள்ளது. கர்நாடகாவிலும் பெட்ரோலுக்கு நுழைவு வரி உட்பட 30 சதவீதமும், டீசலுக்கு 23 சதவீதமும் உள்ளது. கேரளாவில் செஸ் உட்பட பெட்ரோலுக்கு 30 சதவீதமும், டீசலுக்கு 25.69 சதவீதமும், வசூலிக்கப்படு கிறது. பஞ்சாப்பில் கூடுதல் வரியோடு சேர்த்து பெட்ரோலுக்கு 37.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

டீசலுக்கு மகாராஷ்டிராவில் 23 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் நுழைவு வரியோடு சேர்த்து 24 சதவீதமும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீதமும், அந்தந்த மாநில அரசுகளால் வரி வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு 30 சதவீதம் வரியும், டீசலுக்கு 21.43 சதவீதம் வரியும் இப்போது உள்ளது. எனவே இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேதான் அதிக வரி வசூலிக்கப்படுவதாகச் ல்லப்படுவது சரியான தகவல் அல்ல என்பது எல்லோருக்கும் விளங்கும்.

கேள்வி: மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை தற்போது உயர்த்தியதை விட மேலும் அதிக அளவில் உயர்த்துவதாக முடிவெடுத்திருந்ததாகவும், தி.மு.க. போன்ற தோழமைக் கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக உத்தேசித்திருந்த உயர்வைக் குறைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுவது உண்மைதானா?

பதில்: உண்மைதான்.

கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அளித்த பேட்டியில், செம்மொழி மாநாட்டுக்கு ஜனாதிபதி வரக்கூடாது என்று தாங்கள் சொல்லவில்லை என்றும், தங்கள் கட்சிக்குள் "கத்திரி'' போட முடியாது என்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: வையில் என்னைப் பேட்டி கண்ட செய்தியாளர்களில் ஒருவர் "இந்த மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா, வைகோ, பாண்டியன் ஆகியோர் மனு கொடுத்திருந்தார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று என்னைக் கேட்ட போது - "மனு கொடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன். கொடுத்திருந்தால் அதையும் மீறித்தான், அதனை அலட்சியப்படுத்திவிட்டுத்தான் இங்குள்ள தமிழர்களையும், வெளிநாட்டிலுள்ள தமிழர்களையும் மதிக்கின்ற வகையில் ஜனாதிபதி வருகை தந்துள்ளார். அதற்காக அவருக்கு மேலும் நன்றியினைத் தெரி விக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வரக்கூடாது என்ற எண்ணத்தோடு தரப்பட்ட மனுவில் சி.பி.ஐ.யைச் சேர்ந்த தா.பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா மாநாட்டில் கலந்து கொண்டதையும், அவர் நீண்ட நேரம் பேசியதையும் நீங்கள் அறிவீர்கள். சி.பி.ஐ. சட்டமன்றக் கட்சித் தலைவர் சிவபுண்ணியம் அவர்களும் மாநாட்டிலே கலந்து கொண்டார்'' என்று நான் கூறினேன்.

அந்தக் கட்சியின் சார்பில் மாநாட்டிலே கலந்து கொண்டார்கள் என்பதைத் தெரிவிக்கத்தான் நான் இதனைக் கூறினேனே தவிர, அவர்கள் கட்சிக்குள் நான் "கத்திரி'' போட வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதைச் சொல்லும் அவர்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கட்சிக்குள் தனக்குத்தானே "கத்திரி'' போட்டுக்கொண்டு வெளியேறி பிறகு மீண்டும் அதிலே சேர்ந்து 'ஒட்டு'ப் போட்டுக் கொண்டார். அந்தக் கட்சியில் பிளவு ஏற்படுத்த வேறு யாரும் வெளியிலிருந்து வரத் தேவையில்லை, இவர் ஒருவரே போதும்!

கேள்வி: அகதியின் மகனாகப் பிறந்த ஒரு மாணவர் கூடுதல் மதிப் பெண்களைப் பெற்ற நிலையிலும் பொறியியல் கல்வி பயில வாய்ப்பு தரப்படவில்லை என்பது போல வார இதழ் ஒன்றில் கட்டுரை இடம் பெற்றிருக்கிறதே?

பதில்: அந்த வார இதழில் இடம் பெற்ற மாணவரே உயர் கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து தனது குறையைத் தெரிவித்தவுடன் அவரது குறை களையப்பட்டு, அவர் தொழில் கல்வி பயில வாய்ப்பு தரப்பட்டு விட்டது. அது மாத்திரமல்ல; பொதுவாகவே தமிழகப் பள்ளிக் கூடங்களில் படித்த இலங்கை அகதிகளுடைய குழந்தைகளைப் பொதுப்பட்டியலில், தர வரிசையின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.

கேள்வி: பன்றிக் காய்ச்சல் பற்றி ஏடுகளில் செய்தி வருகிறதே?

பதில்: பன்றிக் காய்ச்சல் குறித்து கவனமாக இருக்க வேண்டுமென்று அந்தத் துறைக்குச் சொல்லப்பட்டுள்ளது. அதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மருத்துவக் குழு ஒன்று கன்னியாகுமரி செல்லவுள்ளது. பன்றிக் காய்ச்சல் கேரளத்தில் பரவுகிறது என்று தெரிந்தவுடனே இங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X