For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜெஹான் ஒரு லஷ்கர் உறுப்பினர்-ஹெட்லி திடுக்கிடும் தகவல்

By Chakra
Google Oneindia Tamil News

Ishrath Jahan
டெல்லி: குஜராத்தில் கடந்த 2004ம் ஆண்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம் பெண் இஷ்ரத் ஜெஹான் லஷ்கர் இ தொய்பாவால் தீவிரவாதப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அமெரிக்காவில் கைதாகியுள்ள பாகிஸ்தானிய அமெரிக்க தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய விசாரணைக் குழுவிடம் இஷ்ரத் ஜெஹான் குறித்து ஹெட்லி பல தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தானே நகரின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர் இஷ்ரத். இவரை லஷ்கர் இ தொய்பாவின் இந்தியப் பிரிவு தலைவராக கூறப்படும் முஸ்ஸமில் என்பவர் லஷ்கர் இ தொய்பாவின் தீவிரவாதப் பணிகளுக்காக தேர்வு செய்திருந்தார். முஸ்ஸமில் 2007 வரை இந்தியப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார் என ஹெட்லி தெரிவித்துள்ளார்.

இஷ்கரத் ஜெஹான் உள்ளிட்ட நான்கு பேர் குஜராத்தில் தீவிரவாத செயல் புரிய ஊடுறுவ முயன்றபோது அவர்களை போலீஸார் தடுக்க முயற்சித்ததாகவும், அப்போது நான்கு பேரும் போலீஸாரைத் தாக்க முயன்றதாகவும்,அப்போது நடந்த சண்டையில் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் கொல்லப்பட்டதாகவும் குஜராத் போலீஸ் தரப்பில் முன்பு கூறப்பட்டிருந்தது.

ஆனால் இது போலி என்கவுண்டர் என பின்னர் பெரும் சர்ச்சை எழுந்தது. இஷ்ரத்தின் தாயார் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் ஹெட்லி தெரிவித்துள்ள பல தகவல்கள், குஜராத் போலீஸார் கூறிய தகவல்களுடன் ஒத்துப் போவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி கருதுவதாக செய்திகள் கூறுகின்றன.

முஸ்ஸமில்தான் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரையும் குஜராத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அங்கு முக்கிய விஐபிக்களை கொலைசெய்யும் திட்டத்துடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஹெட்லி கூறியுள்ளார்.

முஸ்ஸமில்தான் லஷ்கர் அமைப்பின் இந்திய நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்து வந்த முக்கியத் தலைவர் என்றும் ஹெட்லி கூறியுள்ளார்.

இஷ்ரத் சுட்டுக்கொல்லப்பட்டவுடனேயே அவர் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர் என்று அந்த அமைப்பின் செய்தித்தாளான காஸ்வா டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இஷ்ரத்தை கொன்றதற்காக குஜராத் போலீஸாரை பழிவாங்குவோம் எனவும் அதில் சூளுரைத்துக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் 2007ல் லஷ்கர் அமைப்பு தனது பெயரை ஜமாத் உத் தவா என்று பெயர் மாற்றிக் கொண்டு செய்பட ஆரம்பித்தபோது இஷ்ரத் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி விட்டது. மேலும் இஷ்ரத்தை தங்களது அமைப்பைச் சேர்ந்தவர் என்று முன்பு கூறியதற்காக அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அது கூறியது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் இஷ்ரத்துடன் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை என்பவரின் தந்தை கோபிநாத் பிள்ளை, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இஷ்ரத் உள்ளிட்டோர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகவும் அப்போது புகார்கள் எழுந்திருந்தன. இதையடுத்தே லஷ்கர் இ தொய்பா திடீர் மன்னிப்பு செய்தியை வெளியிட்டது.

2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இஷ்ரத் தவிர அம்ஜத் அலி, ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி என்கிற 2 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஜாவேத் ஆகியோர் குஜராத் போலீஸாரால் அகமதாபாத் நகருக்கு வெளியே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்காக இவர்கள் வருவதை அறிந்து அவர்கள் வந்த இன்டிகா காரை மறித்து நிறுத்தியபோது அவர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அப்போது நடந்த சண்டையில் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், தனது மகள் ஒரு சேல்ஸ்பெண். ஜாவேத் ஷேக்குக்காக நருமணப் பொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவரை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதேபோல உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார் கோபிநாத் பிள்ளை. ஆனால் கோபிநாத் பிள்ளையின் கூற்றை மத்திய அரசு மறுத்து பதில் மனு தாக்கல்
செய்திருந்தது. ஜாவேத் ஒரு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த நபர் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் ஹெட்லியின் வாக்குமூலம் இந்த வழக்கில் பெரும் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X