For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாத்தா, பாட்டி படிக்காதவர்களா?: சர்டிபிகேட் கேட்கும் அண்ணா பல்கலை.-மாணவர்கள் குழப்பம்

By Chakra
Google Oneindia Tamil News

Anna University
சென்னை: முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சலுகையைப் பெற வேண்டுமானால் பெற்றோர் மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களும் அதாவது தாத்தா, பாட்டிகளும் கூட படிக்காதவர்களாக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்தால்தான் சலுகையைப் பெற முடியும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறுவதால் மாணவ, மாணவியர் குழப்பமடைந்துள்ளனர்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, பொறியியல் படிப்பில் சேர தமிழக அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால் இதில் குழப்பம் இருப்பதாக மாணவ, மாணவியர் கூறுகிறார்கள்.

இதுகுறித்து நேற்று கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட சில முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கூறுகையில், பெற்றோர்கள் படிக்காதவர்கள் என்பதற்கு தாசில்தார் வழங்கிய சான்றிதழை நாங்கள் கவுன்சிலிங்கில் சமர்ப்பித்தோம்.

ஆனால் அது போதாது, பெற்றோரின் பெற்றோர் அதாவது தாத்தா, பாட்டிகளும் படிக்காதவர்கள் என்பதற்கு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் முதல் தலைமுறை பட்டதாரிகள் என கருதமுடியும் என கூறி விட்டனர்.

அந்த சான்றிதழை சமர்ப்பித்தால்தான் சலுகை கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர். தாத்தா, பாட்டி படிக்கவில்லை என்பதை எப்படி நிரூபித்து சான்றிதழ் பெற முடியும் என்றுதெரியவில்லை என்றனர்.

சான்றிதழ் பெறுவது பிரச்சினை இல்லை-அமைச்சர் பொன்முடி

இந்த நிலையில், கவுன்சிலிங் நடப்பதை பார்வையிட உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

என்ஜினீயரிங் கவுன்சிலிங் நல்லபடியாக நடைபெற்று வருகிறது. எந்தவித சிரமமும் இன்றி பெற்றோர்களும், மாணவர்களும் வந்து அவர்களின் கட் ஆப் மார்க்குக்கு ஏற்ப கல்லூரியையும், பிரிவையும் தேர்ந்து எடுக்கிறார்கள்.

இதுவரை நடந்த கவுன்சிலிங் மூலம் 5 ஆயிரத்து 558 பேர் இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். அவர்களில் 1,762 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இது 35 சதவீதம். இவர்களுக்கு டியூசன் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த வருடம் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

முதல் தலைமுறை பட்டதாரி என்ற சான்றிதழ்களை தாசில்தார் அலுவலகத்தில் பெறுவதில் எந்தவித சிரமமும் ஏற்படாது. அப்பா, அம்மா மற்றும் தாத்தா, பாட்டி பெயர்களை தெரிவித்தால் அதை அவர்கள் விசாரித்துவிட்டு சான்றிதழ் தருவார்கள்.

என்ஜினீயரிங்கில் தமிழ் வழியில் சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பிரிவுகள் இந்த வருடம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இதுவரை 15 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

இந்த தமிழ் வழிக்கல்விக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன். நல்ல வரவேற்பு இருந்தால் அடுத்த வருடம் முதல் மற்ற படிப்புகளில் சிலவற்றை தமிழில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அடிக்கடி தகராறு நடக்கிறது. இப்போது சென்னையில் கொலை வரை வந்துவிட்டது. நிகர்நிலை பல்கலைக்கழகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசிடம் இல்லை. அது ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் மத்திய அரசின் பிரச்சினை என்றார்.

சென்னை கல்லூரியா? அஞ்சும் கிராமப்புற மாணவர்கள்

இந்த நிலையில் சென்னை புறநகர்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. சமீபத்தில் வட மாநில மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.

இதையடுத்து சென்னை கல்லூரிகளில் சேர பிற பகுதி மாணவர்களிடையே தயக்கமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்படிப்பட்ட கல்லூரிகளில் நமது பிள்ளைகள் படிக்க வேண்டாம் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கும் வந்துள்ளது.

முன்பெல்லாம் சென்னை கல்லூரிகளில் படித்தால் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளலாம், நிறைய தொடர்புகள் கிடைக்கும், நமது அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும், வேலைவாய்ப்புக்கும் எளிதாக இருக்கும் என்று மாணவர்கள் பெருமளவில் சென்னை கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் ராகிங், ஆங்கில மீடியம் படித்த மாணவர்களின் கேலி கிண்டல், ஆங்கிலம் பேச முடியாததால் ஏற்படும் மன வேதனை என சென்னை கல்லூரிகள் பீதியை ஏற்படுத்தும் மையங்களாக மாறியுள்ளன.

இதன் காரணமாக, தத்தமது பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் சேர மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கருத ஆரம்பித்துள்ளனர்.

தலைநகருக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கடமையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X