For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது

Google Oneindia Tamil News

Seeman
சென்னை: வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஏற்பட்ட அமளியில் போலீஸார் நான்கு பத்திரிக்கையாளர்களை தடிகளால் அடித்ததால் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின்போது போது சீமான் பேசிய பேச்சைத் தொடர்ந்து அவர் மீது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வடக்குக் கடற்கரைப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. இதையடுத்து நான்கு தனிப்படைகளை அமைத்து அவரைத் தேடி வந்தனர்.

பிரஸ் கிளப்பை முற்றுகையிட்ட போலீஸ்

இந்த நிலையில், இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன்பாகவே கைது செய்வதற்காக போலீஸார் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் சீமான் வரவில்லை. அவருக்குப் பதில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன், திருச்சி வேலுச்சாமி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சீமான் எங்கும் ஓடி ஒளியவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய பின், சட்டப்படி கைதாவார். இப்போது அவர் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார். கண்டிப்பாக உங்கள் கண் முன் அவர் நிற்பார் என்று தெரிவித்தனர்.

சீமானைக் கைது செய்வதற்காக இன்று காலை 7 மணிக்கே நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். துணை கமிஷனர்கள் சாரங்கன், அறிவுச்செல்வம், பாஸ்கரன், உதவி கமிஷனர்கள் காதர் மொய்தீன், தமிழ்ச்செல்வன், சரவணன், சங்கரலிங்கம், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பத்திரிகையாளர் மன்றம் முன்பு குவிக்கப்பட்டனர்.

பிரஸ் கிளப்புக்குள் வருவதற்கான நான்கு வழிகளிலும் போலீஸார் குவிந்திருந்தனர். அந்த வழியாகசென்ற அனைவரையும் தீவிரமாக சோதனையிட்டனர். பத்திரிக்கையாளர்களையும் சோதனையிட்டனர். ஹெல்மட் போட்டு வந்தவர்களை கழற்ற வைத்து சோதனையிட்டனர்.

சீமான் கைது செய்யப்படும்போது அவரைப் படம் பிடிப்பதற்காக பெருமளவில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ கேமராமேன்கள் குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் முற்பகல் 11.30 மணி அளவில் சீமான் வாலாஜா ரோடு வழியாக சேப்பாக்கத்துக்கு வந்தார். அவரது வருகையை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்க தொண்டர்கள் காத்திருந்தனர். காரில் இருந்து சீமான் இறங்கியதும் போலீசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

தொண்டர்கள் போராட்டம்

சீமானை போலீஸ் வேனில் ஏற்ற விடாமல் காரை சுற்றி சூழ்ந்து கொண்டனர். பத்திரிகையாளர்களும் அவரிடம் பேட்டி எடுப்பதற்காக முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சுமார் 15 நிமிட போராட்டதுக்கு பின் சீமானை போலீசார் வேனில் ஏற்றினர். பின்னர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.

சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது கட்சியினர் வாலாஜா ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். சீமான் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டபோது போலீஸ் வேனை சுற்றி நின்று கொண்டு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். போலீசார் லேசாக கைகளால் அடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

561 தமிழக மீனவர்களைக் கொன்றது சரியா?

கைது செய்யப்பட்ட சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்களை சந்திப்பதற்கு முன்பு நான் கைது செய்யப்பட்டால் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இந்த கடிதத்தை தருகிறேன்.

வன்முறை பிரிவினையை தூண்டியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 561 பேரை சிங்கள ராணுவம் சுட்டு வீழ்த்தியது வன்முறையை தூண்டும் செயல் இல்லையா? எங்கள் மீனவர்கள் சுடப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக கருதி நான் பேசியதால் வன்முறை ஏற்பட்டு விட்டதா?

தி.மு.க. மீனவர் அணியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடினார்களே, இது யாருக்கு எதிராக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரினை வாதம் என்றால் உலகத்தில் சுதந்திரம் என்ற சொல்லே இருந்திருக்காது. இன்று கூட சிங்களர்கள் தமிழக மீனவர்களை தாக்கி இருக்கிறார்கள். இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.

மீனவர்கள் பிரச்சினையை தீர்க்காமல் பிரச்சினையை தீர்க்கச் சொல்லி பேசுகிறவனை கைது செய்வதுதான் தீர்வா? இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தனித் தமிழ் ஈழம்தான். இப்படி சொல்வது எப்படி பிரிவினையாகும். சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய ராணுவம் சுடாதது ஏன்?

என் தமிழினமே சுட்டாலும் பரவாயில்லை. எண்ணற்ற கேள்விகளோடு நேரமின்மையால் சிறை செல்கிறேன். வந்து சொல்கிறேன். நன்றியோடு உங்கள் சீமான் என்று கூறியிருந்தார் சீமான்.

பத்திரிக்கையாளர்கள் மீது தடியடி

சீமானை கைது செய்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளின்போது பத்திரிகையாளர்கள் 4 பேர் லத்தியால் தாக்கப்பட்டனர். தாக்கியவர்கள் மப்டியில் இருந்த போலீசார்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கிய போலீசார் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் எதிரில் பத்திரிக்கையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் மத்திய சென்னை இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் சமாதானமாகவில்லை

ஜாமீன் கோரி மனு

கைதான சீமான் தனது வழக்கறிஞர் சதா சந்திரசேகரன் மூலமாக சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தமிழ்நாடு அல்லது இலங்கையா? சீமான் ஆவேசம்!

முன்னதாக சீமான் விடுத்திருந்த அறிக்கை:

தமிழக மீனவர் செல்லப்பன் அவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டது குறித்த சம்பவத்தில் நேற்று நான் பேசிய பேச்சினை வைத்து தமிழகக் காவல்துறை என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. என்னைக் கைது செய்ய முனைப்பு காட்டி வருகின்றது.

600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விலைமதிப்பற்ற வலைகள், படகுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களனால், தினசரி கொல்லப்படும் பொழுதோ, அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் பொழுதோ, அவமானப்படுத்தப்படும் பொழுதோ, மீனவனின் வலை அறுக்கப்படும் பொழுதோ மத்திய மாநில அரசுகள் துளியும் கவலைப்படவில்லை.

மென்மையான முறையில் கடிதம் எழுதினார்கள். குறைந்தபட்சம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. ஆனால் மத்திய,மாநில ஆளும் அரசுகள், நேற்று நான் பேசிய பேச்சுக்கள் சிங்களனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கருதி என்னைக் கைது செய்ய தனிப்படை அமைத்து வலை வீசித் தேடுகின்றன.

600 தமிழ் மீனவர்களின் உயிருக்கு இல்லாத மதிப்பு நம் இனம் அழித்த சிங்களனுக்கு இருப்பதை நினைத்தால் நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா என்னும் எண்ணம் எழுகின்றது.

ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம் என்ணற்ற மீனவனின் உயிருக்கு சிறு அசைவைக் கூட தெரிவிக்க மறுக்கின்றதே?

பாகிஸ்தானி கசாப் மும்பையில் துப்பாக்கியில் சுட்டால் எல்லை கடந்த பயங்கரவாதம் என்று பாகிஸ்தானை எதிர்க்கும் இந்தியா, தினசரி மீனவனை கொலை செய்யும் இலங்கை அரசுடன் விருந்து வைத்து மகிழ்கின்றதே? ஏன்?

பிஜி தீவில் குஜராத்தி தாக்கப்படும் பொழுது துடிக்கும் இந்தியா இங்கு சாகும் மீனவன் பற்றிக் கவலைப்படாமல் கிரிக்கெட் விளையாட வழியனுப்பி வைக்கின்றதே? ஏன்?

செத்தவன் தமிழன் என்பதால் தான் எல்லோரும் பாராமுகம் காட்டுகின்றார்களா?இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?

சென்ற வருடம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு தமிழினம் ஒடுக்கப்பட்ட பொழுது அதற்கு பேருதவியும் பெரும் ஆதரவும் அளித்த மத்திய, மாநில அரசுகள் இன்று நம் எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவன் கொல்லப்படும் பொழுதும் இலங்கைக்கு உறுதுணையாய் இருப்பது தமிழர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றது.

எண்ணற்ற மீனவன் செத்துக் கொண்டிருக்கும் பொழுது உணர்வுள்ள தமிழர்கள் எங்களால் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கடிதம் எழுதவோ,அல்லது பாராட்டு விழாவில் கூச்சமில்லாமல் நனையவோ அல்லது கண் துடைப்புக்காய் ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. இன விடியலுக்கான பணியைச் செய்தே தீருவோம். அடக்குமுறைச் சட்டங்கள் காட்டி என்றும் எங்களை அச்சுறுத்த முடியாது.

சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம். உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்பதைத் தெரிவித்து கொள்கின்றேன் என்று கூறியுள்ளார் சீமான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X