For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட சென்னைக்கு ஜூலை 31 முதல் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் விநியோகம்-ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி வருகிற 31ம் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல் வட சென்னை மக்கள் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீரைப் பெறுவார்கள் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் ரூ.24 கோடி செலவில் புதிய பூங்காக்கள், நீச்சல் குளங்கள், மாநகராட்சி மருத்துவ மனைகள், பள்ளிக்கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள் என 75 வளர்ச்சி பணிகள் திறப்பு விழா சென்னை அண்ணாநகர் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியாதவது:

ஒரே நேரத்தில் 73 பணிகள் திறக்கப்படுகின்ற நிகழ்ச்சி சென்னை மாநகரத்தில் பல்வேறு வார்டுகளின் பணிகளையும் ஒரே இடத்தில் இன்று திறந்து வைத்து இருக்கின்றோம்.

எங்கள் தொகுதிகளில் முடிக்கப்பட்ட பணிகளையும் அண்ணாநகரில் திறப்பதில் எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் எங்களை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள அண்ணாநகரில் இந்த விழா நடப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இன்று திறக்கப்பட்டதில் புதிய பூங்காக்கள், நீச்சல் குளங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பள்ளிக்கட்டிடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், மாநகராட்சி அலுவலக கட்டிடங்கள், பல்நோக்கு கட்டிடங்கள், சத்துணவுக்கூடங்கள், சமையற்கூடங்கள், கலையரங்கம், இரவு பாடசாலை என அனைத்து வளர்ச்சிப்பணிகளும் மக்கள் பயன்பெறும் வகையில் திறந்து வைக்கப்பட்டு உள்ளன.

டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்கா, 138 அடி உயரம் உடையதாகும். இதன் மேல் தளம் வரை பார்வையாளர்கள் செல்வதற்கு வசதியாக சாய்வுதள நடைபாதை, கோபுர உச்சியில் பார்வையாளர் மாடம், தரையில் நீரூற்றுடன் கூடிய வளாகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

350 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கலையரங்கம், சறுக்கு விளையாடுமிடம், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, தியானக்கூடம், கடைபாறை இருக்கை சிற்ப கலைக்கூடம், 6 கிரிக்கெட் பயிற்சி மைதானங்கள், அழகிய புல்தரைகள், வண்ணப்பூச்செடிகள், 261 புதிய மின்விளக்குகள் என அனைத்து வசதிகளும் கொண்டதாக டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்கா ரூ.5 கோடியே 61 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்று மைலேடிஸ் பூங்கா, தியாகராயநகர் நடசேன் பூங்கா உட்பட, பல்வேறு பணிகள் மக்கள் பயன்பெறும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பெருமை எனக்கு உண்டு. ஒரு முறையல்ல இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பொறுப்பை வகித்திருக்கிறேன். நான் மேயராக சென்னை மாநகரத்தில் இருந்த போது, சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டது.

சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற உறுதியுடன் செயல்பட்டோம். ஆனால், அதனை தொடர்ந்து முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. காரணம் 2001-ம் ஆண்டு ஆட்சி மாற்றம். மீண்டும் 2006-ம் ஆண்டு 5-ம் முறையாக கலைஞர் முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்ற பிறகு, இன்று சென்னை மாநகரத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நிச்சயமாக சென்னை மாநகரம் சிங்கார சென்னையாக விரைவில் உருவெடுக்கும்.

2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் அடையாரில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவை ஏற்படுத்திட 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அடையாறு பூங்கா 358 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. முதற்கட்டமாக 58 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றுவருகிறது. 90 சதவீதப் பணிகள் முடிவுப் பெற்றுள்ளன. இந்த பூங்காவை வருகின்ற தை முதல் நாள் முதல்-அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத அளவில் உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க 1996-ம் ஆண்டே கலைஞர் ஆட்சியில் பல பாலங்கள் கட்டப்பட்டன. அதன்பின் வந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒரு பாலம் கூட கட்டப்படவில்லை. 2006-ம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சி ஏற்பட்ட பிறகு சென்னையில் தொடர்ந்து பல பாலங்கள் கட்டும்பணி நடைபெற்றுவருகின்றது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை முழுமையாக தீர்க்க முடிவெடுத்த கலைஞர் மெட்ரோ ரெயில் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்திருக்கின்றார். ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் உள்ளது போல, சென்னையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மெட்ரோ ரெயில் திட்டம் 2014-ம் ஆண்டு முடிவு பெறும். நமது ஆட்சி 2011-ல் முடிகிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் எல்லாம் கவலைப்படவே வேண்டாம். 2011-ல் நடைபெறும் தேர்தலிலும் கலைஞர் வெற்றி பெற்று தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று மெட்ரோ ரெயில் திட்டத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவார்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடல் நீரிலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது. 2006-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர், ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்ற அரசியல் நோக்கத்தோடு அத்திட்டத்தை கைவிட்டுவிடவில்லை. அது மக்களுக்கு தேவையான திட்டம் குடிநீர் பிரச்சினை எனக்கருதி சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேசி, அதிலிருந்த சட்ட சிக்கல்களை தீர்த்து, அத்திட்டத்திற்கு 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். தற்போது அந்த பணி முழுமையாக முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுவருகிறது. வருகின்ற 31-ந் தேதி அந்த மாபெரும் திட்டத்தை கலைஞர் மக்களுக்கு அர்ப்பணித்து வைக்க உள்ளார்கள். வட சென்னை மக்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படும்.

கலைஞர் அரசிற்கு தமிழகம் முழுவதும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றிவரும் தி.மு.க. அரசிற்கு என்றும் நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருந்து தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

தயாநிதி மாறனுடன் கிரிக்கெட் ஆடினார்

73 வளர்ச்சி பணிகளுக்கான கல்வெட்டுகள் மேடைக்கு எதிரே ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததால் நீளமாக இருந்தது. மு.க.ஸ்டாலின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்ததும், அதன் திரை விலக நீண்டநேரம் ஆனது.

முன்னதாக டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பணிகளை ஒவ்வொன்றாக சுற்றிப்பார்த்தார். அப்போது திறந்தவெளி கலையரங்கில் பெண்கள் நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருந்தனர். இதை மு.க.ஸ்டாலின் ரசித்துப்பார்த்தார். வடகிழக்கு பகுதி வலையுடன் கூடிய கிரிக்கெட் பயிற்சி பிட்ச் மைதானத்தை பார்வையிட்டார். அப்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பந்து வீச, மு.க.ஸ்டாலின் பேட் செய்து சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X