For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது ஒரு சாதனையா?-ஜெ. கேள்வி

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதும், புதிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உருவாக்கப்படுவதும் வழக்கமாக எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைமுறையில் இருந்து வரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் சாதனைகள் என்று திமுக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கண்டனப் பொதுக்கூட்டத்தைக் கண்டு கலங்கிய கருணாநிதி, என்னுடைய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக “ஆதாரமற்ற குற்றச்சாட்டும், ஆணித்தரமான பதிலும்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

தி.மு.க. அரசை, மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று நான் வர்ணிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், மொத்தம் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களை பெற்றுள்ள கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாததன் காரணமாக, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது.

தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே தி.மு.க-விற்கு ஆதரவு அளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. ஆட்சி அமைத்திருந்தால் அதைக் கூட்டணி ஆட்சி என்று சொல்லலாம். அதைக் கருணாநிதி செய்யவில்லை. வெறும் 100 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தும் தி.மு.க-வை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தபடியாக, எனது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டதையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதை குறிப்பிட முனைந்திருக்கிறார். ஆனால், இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வைத்து தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துவிட்டது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

உதாரணமாக, 1986 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற 110 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்திற்கு 1,929 கோடி ரூபாய் செலவாகும் என தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு முக்கியக்காரணம் விலைவாசி உயர்வு தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அரசின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருவதும், அதனால், வருவாய்க்கு ஏற்ப ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதும் நடை முறையில் கடை பிடிக்கப்படும் முறைதான். எனவே, இதை ஒரு சாதனையாக கருணாநிதி குறிப்பிடுவது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். தன்னுடைய இந்த அறிக்கையின் மூலம் விலைவாசி அபரிமிதமாக உயர்ந்துவிட்டது என்பதை கருணாநிதி ஒப்புக்கொண்டிருப்பது தெளிவாகிறது.

காவல் துறைக்கு எனது ஆட்சிக்காலத்தில் 1,346 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது 2,855 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கும் கருணாநிதி, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது மாறிவிட்டதை பற்றி மறுக்கவில்லை.

வேளாண் உற்பத்தி குறித்து மிகப்பெரிய புள்ளி விவரத்தை அளித்து இருக்கும் கருணாநிதி, சாதாரணமாக 3 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடக்கும் குறுவை சாகுபடி இந்த ஆண்டு வெறும் 53,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளில் வெறும் 14,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் வந்திருக்கும் புள்ளி விவரத்தை வசதியாக மறைத்து விட்டார்.

நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதும், புதிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உருவாக்கப்படுவதும் வழக்கமாக எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைமுறையில் இருந்து வரும் ஒன்று தான். இதையெல்லாம் தனது சாதனையாக கருணாநிதி குறிப்பிடுவது நகைப் புக்குரியதாக உள்ளது.

காவிரி நீர்ப் பங்கீடு குறித்து நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பினை 25.6.1991 அன்று வழங்கியது. இந்த இடைக்காலத் தீர்ப்பை மைய அரசு உடனடியாக அரசிதழில் பிரசுரிக்குமாறும், நடுவர் மன்றத்தின் ஆணையைச் செயல்படுத்தும்படியும் கர்நாடக அரசை வலியுறுத்துமாறு மைய அரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் 8.7.1991 அன்று எனது ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது. கர்நாடக அரசின் அவசரச் சட்டத்தை முறியடிக்க எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, அந்தச் சட்டம் செல்லாது என 22.11.1991 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 10.12.1991 அன்று மத்திய அரசிதழில் எனது முயற்சியால் வெளியிடப்பட்டது.

ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இறுதித் தீர்ப்பினை அமல்படுத்த கருணாநிதி எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X