For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜீவ் சொன்னதைக் கேட்டிருந்தால் முடிசூடா மன்னனாக திகழ்ந்திருப்பார் பிரபாகரன்-ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

P Chidambaram and Prabhakaran
விருதுநகர்: ராஜீவ் காந்தி சொன்னதை மட்டும் கேட்டு நடந்திருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், முடிசூடா மன்னராக திகழ்ந்திருப்பார் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

காமராஜரின் 108-வது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தங்கபாலு தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பிரபகாரன் குறித்துப் பேசினார். அவர் பேசுகையில்,

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன்.

இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன். அவர் ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் 2 மாநிலங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.

ஆனால் நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது.

இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன் துறைமுகத்தையும், பதாதி விமான நிலையத்தையும் சீர்படுத்தித் தர இந்தியா முன் வந்திருக்கிறது. இன்னும் 2 வருட காலத்தில் அங்குள்ள 2 லட்சம் தமிழர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும்.

எனக்கு இப்போது இருக்கும் பயமெல்லாம் தமிழகத்திலும் வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக ஒருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது.

பேச்சிலும், எழுத்திலும் வன்முறை இருந்தால் செயலிலும் வன்முறை வந்து விடும். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தியாவிலும், தமிழகத்திலும் வன்முறை தலைதூக்க காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. காங்கிரஸ் தோழர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்தியாவில் 7 மாநிலங்களில் நக்சலைட்டுகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 500 பேரை நக்சலைட்டுகள் கொன்றுள்ளனர்.

இந்த ஆண்டு 142 பேரை போலீசுக்கு தகவல் சொல்பவர்கள் என்று கூறி அவர்கள் கொன்றுள்ளனர். அங்கு ராணுவத்தை அனுப்பி விடலாம். ராணுவம் சென் றால் விமானம் செல்லும். குண்டு வீசப்படும். பல சகோதரர்கள் பலியாக நேரிடும். அதனை ஏற்க முடியாது. அதனால் தான் துணை ராணுவத்தை பயன்படுத்தி நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகிறோம் என்றார் ப.சிதம்பரம்.

மாதம் 25 கிலோ இலவச அரிசி

இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் நடந்த சமுதாயக் கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசுகையில்,

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கடனுதவி -யை வழங்குவதில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது.,

விவசாயிகளுக்கு மானியத்தில் கடன் வழங்குதல், 108 ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு நிதியுதவி உள்பட பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் மத்திய அரசு முன்னிலை வகிக்கின்றது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் தோறும் 25 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

மத்திய அரசுக்கு, திமுக அரசு ஆதரவாக உள்ளது. இந்த ஆதரவு தொடர்ந்து நீடிக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கு பல சலுகைகளையும், திட்டங்களையும் சிறப்பாக வழங்க முடியும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X