For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வைரம்' படத்து நாயகியே வாயில் வந்ததையெல்லாம் பேசாதே-கருணாநிதி இறுதி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஜெயலலிதா என்னைக் கேட்பதைப் போல; வேறு யாராவது ஜெயலலிதாவைப் பார்த்து நீ எப்படி இவ்வளவு சொத்துக்களையும் சம்பாதித்தாய், நடிப்பின் மூலமாக மட்டும் இத்தனை சொத்துக்களையும் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டுவிட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?. அவருக்கு இறுதி எச்சரிக்கை; "வைரம்'' படத்து நாயகியே, வாயில் வந்ததையெல்லாம் பேசாதே என்று மிகக் காட்டமாக கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக கூட்டத்தின்போது திமுக அரசு மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் சரமாரியாக புகார்களைக் கூறினார். அதற்கு தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஜெயலலிதாவும் பதில் அறிக்கைகளை விடுத்து வருகிறார். இருவரும் மாறி மாறி வெளியிட்டு வரும் அறிக்கைகளால் அரசியல் களம் படு சூடாக காணப்படுகிறது.

ஜெயலலிதா அவசரக் குடுக்கை

இந்த வரிசையில் நேற்று முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக சாடியுள்ளார். அதன் விவரம்:

ஜெயலலிதா எப்போதுமே ஒரு "அவசரக் குடுக்கை'' என்பார்கள். அது சரியாகத்தான் இருக்கிறது. தான் சொன்ன குற்றச்சாட்டுக்கு பதில் வந்திருக்கிறதா? அப்படி பதில் வந்தால் என்ன பதில் வந்திருக்கிறது? தான் சொன்னது சரிதானா என்றெல்லாம் பார்க்காமல் - என்னுடைய பதில்கள் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில்; விலைவாசி உயர்வு பற்றி அவர் கோவையிலே பேசியதற்கு நீண்ட விளக்கத்தை நான் 16-ம் தேதியே அளித்த பிறகும் - விலைவாசி பற்றி பேசியதற்கு கருணாநிதி வாய் திறக்கவில்லை, ஆகவே நான் கூறியது உண்மையாகி விட்டது என்றெல்லாம் புலம்பித் தள்ளியிருக்கிறார்.

தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என்பதற்கு உதாரணமாக பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருகியிருப்பதை மட்டுமே நான் காட்டிடாமல், எந்த அளவிற்கு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பெருகியிருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறேன். நுனிப்புல் மேயும் ஜெயலலிதாவும், அவரது ஆதரவு ஏடுகளும் அவைகளையெல்லாம் படிக்கவில்லை போலும்! புதிய கல்லூரிகள், பள்ளிகள், மாவட்டங்கள் ஏற்படுத்துவதெல்லாம் சாதனை அல்ல என்று சொல்லுகிறார் ஜெயலலிதா. அவரது ஆட்சிக் காலத்தில் அவர் இவ்வாறு தொடங்கியிருந்தால், அதனைப் புள்ளி விவரத்தோடு குறிப்பிட்டு, கழக ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியிலே அதிகமாகச் செய்தோம் என்று சொல்வதற்கு அவர்களிடம் "மசாலா'' இல்லாதபோது அறிக்கை என்ன கேடு?.

16-ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையின் இறுதிப் பகுதி முழுவதும் உரம் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். ஆனால் உரம் பற்றி நான் வாய் திறக்கவில்லை என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே நேற்று சொல்லியிருக்கிறார் என்றால் அவரைப் பற்றி என்ன நினைப்பது?. ஜெயலலிதா மேலும் தனது கோவை உரையிலே கழக ஆட்சியில் அரிசி பதுக்கல், கடத்தல் என்றெல்லாம் முழங்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சியில் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம், 1955-ன் கீழ், 2001 முதல் 2006 ஏப்ரல் மாதம் வரை ஐந்தாண்டுகளில் மொத்தம் 34,308 வழக்குகளும், 3,313 கைது நடவடிக்கைகளும், 1,492 வாகனக் கைப்பற்றுதலும், 67 நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெ. ஆட்சியிலே பதுக்கல்காரர்களுக்கு மாலை

2004-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் இருந்து 251 நபர்கள் கைது செய்யப்பட்டதில் ஒருவர் மீது மட்டும் கள்ளச்சந்தை தடுப்புக் காவலின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஜெயலலிதா ஆட்சியிலே பதுக்கல்காரர்கள் மீதும், கடத்தல்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது கழக ஆட்சியில் 2006 முதல் 2010 ஜுன் மாதம் முடிய மொத்தம் 58,807 வழக்குகளும், 13,311 கைது நடவடிக்கைகளும், 4,728 வாகனக் கைப்பற்றுதலும், அதில் 453 வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும், 270 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை கூட தெரியாத ஜெ.

ஆன்-லைன் வர்த்தகம் பற்றி பேசியுள்ள ஜெயலலிதா அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருள்களை விற்பனை செய்வதாகவும், அந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த கழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்களைப் பாதுகாப்பதற்கு பல காரணங்கள் உண்டு என்றும் பேசியிருக்கிறார். ஆன்-லைன் வர்த்தகத்தின் மூலமாக எந்தெந்தப் பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை கூட அவருக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள இந்த மூன்று பொருள்களுமே ஆன்-லைன் வர்த்தகம் மூலமாக தற்போது விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

அதுமாத்திரமல்ல, அந்த வர்த்தகர்களை நான் ஏதோ பாதுகாப்பதாகவும், அதற்கு ஏதோ காரணம் இருப்பதாகவும் ஜெயலலிதா புளுகியிருக்கிறார். உண்மை என்னவென்றால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ஆன்-லைன் வணிகத்திற்கு ஆட்சேபணை தெரிவித்து பிரதமருக்கு 14-3-2007-ல் நான் அதிகார பூர்வமாகவே அறிவித்திருக்கிறேன்.

எழுதிக் கொடுத்தவன் ஏட்டைக் கெடுத்தான்

அதற்குப் பிறகுதான் பாசுமதி அரிசி தவிர பிற அரிசி வகைகளும், கோதுமையும், துவரம் பருப்பும், உளுத்தம் பருப்பும் 2007 முதல் ஊக வணிகத்தின் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற பாணியில் எழுதிக் கொடுத்தவன் ஏட்டைக் கெடுத்தான் என்று அம்மணியார் கோவையில் புளுகியிருக்கிறார்.

காலாவதி மருந்து பற்றியும் ஜெயலலிதா கோவையிலே பேசியிருக்கிறார். காலாவதி மருந்து பற்றி சட்டப் பேரவையிலேயே விளக்கமாகப் பதில்கள் சொல்லப்பட்டு - அது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டு - குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த காலத்தில் இருந்து காலாவதியான மருந்துகளின் முகப்புச் சீட்டுகளை மாற்றி மீண்டும் விற்பனைக்கு அனுப்பும் செயலில் ஈடுபட்டுவந்த ஒரு கும்பலை இந்த கழக அரசுதான் கண்டுபிடித்து அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தது. இந்தச் செயலில் ஈடுபட்ட 40 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் 19 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை மேலும் விசாரிக்க குற்றப்பிரிவு புலனாய்வுத்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்த 8 மொத்த மருந்து நிறுவனங்களின் மருந்து உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சில நிறுவனங்களின் மருந்து உரிமங்களை ரத்து செய்ய மருந்துக் கட்டுப்பாடு இயக்குநர் நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்த நிலையில் போலி மருந்து மற்றும் காலாவதி மருந்துகளின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்ததாக ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா தனது பேச்சில், தமிழகத்தில் 42 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன என்றும், அவைகளைச் சோதனை செய்ய அரசு சார்பில் 52 மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளதாகச் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எத்தனை மருந்து ஆய்வாளர்கள் இருந்தார்கள்? தற்போது அவர்களின் எண்ணிக்கையை இந்த அரசு குறைத்து விட்டதா என்பதை ஜெயலலிதா சொல்லத் தயாரா?

அதற்குள் அவசரப்படுகிறாரே அம்மா..

ஸ்டாலினின் மருமகன் பற்றி அவர் கூறிய குற்றச்சாட்டிற்கு நான் பதில் அளிக்கவில்லையாம், அதனால் அதை நான் ஒப்புக்கொண்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா. அதற்குள் அவசரப்படுகிறார் அம்மா! ஸ்டாலினின் மருமகன் மீது ஜெயலலிதா கூறிய புகாருக்கு அவரே அந்த அம்மையாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

மின்சாரப் பிரச்சினை குறித்தும் நான் பதில் சொல்லவில்லை என்கிறார் ஜெயலலிதா. அவர் தான் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், எத்தனை முறை தான் நாம் பதில் சொல்வது? இந்த அரசின் சார்பில் மின்சாரப் பிரச்சினை குறித்து விளக்கமளிக்கப்பட்டு விட்டது. அவரது ஆட்சியில் மின்சாரம் உபரியாக இருந்தது என்றும், தற்போது பற்றாக்குறையாக உள்ளது என்றும் முக்கியமாக சொல்லியிருக்கிறார்.

அதற்குக் காரணம், தற்போது கழக ஆட்சியிலே புதிது புதிதாக தொழிற்சாலைகளை ஏற்படுத்தியதன் காரணமாக தொழில் வளம் பெருகி, மின்சாரத் தேவை அதிகமாகியுள்ள காரணத்தால், அந்தப் பற்றாக்குறையையும் ஈடுகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமிகள் கப்பம் கட்டினார்களே...

ஜெயலலிதா தனது பேச்சில் மணல் கொள்ளை நடைபெறுவதாக நீண்ட நேரம் பேசியிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேதான் தமிழக அரசே மணல் குவாரிகளை எடுத்து நடத்தும் என்று 2003-ம் ஆண்டில் அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. மணல் வியாபாரம் மூலமாக தனது ஆட்சியிலே ஆறுமுகசாமிகள் கப்பம் கட்டியதை மறந்து விட்டு, ஆதாரம் எதுவுமில்லாமல் தற்போதும் அப்படி நடக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் கோவையிலே பேசியிருக்கிறார்.

அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்குப் போடுவதற்கான நல்ல தருணம் இது தான் என்றும், இந்த அரசின் சாதனைகள் என்று சொல்லக் கூடியவை மிகக்குறைவு என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இந்த நான்காண்டு காலத்தில் செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை மட்டுமே இங்கே பட்டியலிடுவோம். அதற்குப் பிறகும் இந்தச் சாதனைகள் எல்லாம் "மாயத் தோற்றங்கள்'' என்று ஜெயலலிதா கூறுகிறாரா?.

பூதத்தை கொடநாடு குகைக்குள் அடைத்தது சாதனையில்லையா?

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு குறைந்த பயிர்க் கடன் வட்டி -பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - 31 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் - நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் - இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் - மாணவ-மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்; வாழைப்பழங்கள் - பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு - திருமணத் திட்ட நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு - ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் - "உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' - 108 சேவைத் திட்டம் - இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 சதவீதம் தனி உள் ஒதுக்கீடு - அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 சதவீதம் தனி உள் ஒதுக்கீடு - சமத்துவபுரத் திட்டம் - மெட்ரோ ரெயில் திட்டம் - ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் - ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - மதுரவாயல், சென்னைத் துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் - "கலைஞர் வீட்டுவசதித் திட்டம்'' என்பன போன்ற திட்டங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் அகராதியில் சாதனைகள் இல்லையா? கொள்ளையடித்த பூதத்தை கொஞ்ச நாள் அனுமதித்து விட்டு, இந்தப் பூதம் கூண்டோடும், கூட்டோடும் கொடநாடு குகைக்குள்ளே அடைபட்டுக்கிடக்கச் செய்ததும் சாதனைகளில் ஒன்றுதானே?.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றியும் ஜெயலலிதா கோவையிலே பேசியிருக்கிறார். அந்த மாநாடு வசூல் செய்வதற்காகத்தான் நடத்தப்பட்டது என்றும், அந்த மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் கோடி ரூபாய் தி.மு.க.வினரால் வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருக்கிறார். கோவையில் நடைபெற்ற மாநாட்டிற்காக எந்தத் தனியாரிடமோ, நிறுவனங்களிடமோ நிதி வசூலிக்கக் கூடாதென்று முடிவெடுத்து, முழுச் செலவையும் அரசாங்கத்தின் மூலம்தான் செய்யப்பட்டது.

தமிழ் பெயரைச் சொல்லி எனது குடும்ப கஜானாவை நிரப்பி விட்டதாகவும் ஜெயலலிதா சொல்கிறார். அவருக்கு எதை எடுத்தாலும் நிதி வசூல், ஊழல், கஜானாவை நிரப்பிக் கொள்ளுதல் என்ற நினைப்புதான். அமெரிக்காவில் இருந்து வந்த 3 கோடி டாலரை தன் கஜானாவில் நிரப்பிக்கொண்டதைப் போலவும் - யாருக்கோ சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை எப்படியோ கைப்பற்றிக் கொண்டதைப் போலவும் - எண்ணிக்கொள்கிறார். 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதென்றால், ஜெயலலிதா உண்மையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் என்றால், பொறுப்போடு அந்த நிதி யார் யாரிடமிருந்து என்னால் வசூலிக்கப்பட்டது, அதற்கு என்ன ஆதாரம், என்று நிரூபிக்கத் தயாரா?.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அமல்படுத்த ஒரு துரும்பைக் கூட நான் கிள்ளிப் போடவில்லை என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். நடுவர் மன்றம் தன் இறுதி அறிக்கையை 5-2-2007 அன்று அளித்த பிறகு 19-2-2007, 5-4-2007 ஆகிய தேதிகளில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டங்களில் எடுத்த முடிவின்படி, பன்மாநில நதிநீர்த் தாவாச்சட்டம் பிரிவு 5 (3)-ன் கீழ் காவிரி நடுவர் மன்றத்தில் மேல் விளக்கம் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் சிறப்பு முறையீட்டு மனு ஒன்றை 5-5-2007 தேதி அன்று தாக்கல் செய்துள்ளது.

கேரளம் மற்றும் கர்நாடக அரசுகளும் நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. மேலும் நடுவர் மன்றத்திலும் இறுதி ஆணையில் விளக்கங்கள் கோரி பன்மாநில நதிநீர்த் தாவாச்சட்டப் பிரிவு 5(3)-ன்படி எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. காவிரி நடுவர் மன்றம் 10-7-2007 அன்று, தற்போது காவிரி வழக்கு சிறப்பு முறையீட்டு மனுக்கள் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுக்களை அனுமதித்துள்ளதாலும் அவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு, ஆணை பிறப்பித்தபின்தான், அவர்களிடம் மேல் விளக்கங்களைக் கோரி தாக்கல் செய்துள்ள 5 (3) மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறியது.

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள மனுக்கள் விசாரிக்கப்பட்டு ஆணை பிறப்பித்த பின்தான், நடுவர் மன்றம் பன்மாநில நதிநீர்த் தாவாச்சட்டப் பிரிவு 5(3)-ன்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரித்து மேலும் ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பும். மேற்கண்ட நடவடிக்கைகள் எல்லாம் முடிந்த பின்னர்தான் பன்மாநில நதி நீர்த் தாவாச்சட்டப் பிரிவு 6(1)-ன்படி மத்திய அரசு நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை அரசிதழில் பதிப்பிக்கும். அந்த ஆணை படுகை மாநிலங்களை கட்டுப்படுத்தும். இதுவே நடைமுறையில் உள்ள சட்டமாகும். அதுவரை ஏற்கனவே 25-6-1991-ல் பெறப்பட்ட நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்திரவு நடைமுறையில் இருக்கும்.

இவ்வழக்கு 29-9-2009 அன்று விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம் கோர்ட்டு இதை டிசம்பர், 2009 முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது. ஆனால், இதுவரை இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் காவிரி தொடர்பான சிறப்பு முறையீட்டு மனுவில் வழக்காட, கர்நாடக மாநிலம் 25 தொகுப்பில் அதன் ஆவணங்களையும், கேரளா 15 தொகுப்பில் ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளன. அவைகளுக்கு தேவையான கூடுதல் ஆவணங்களை வக்கீல்களுடன் ஆலோசித்து தமிழ்நாடு சார்பிலும் 13 தொகுப்புகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புளுகுணி

6-5-2010 அன்று தமிழக வக்கீல்கள் தலைமை நீதிபதி அமர்வின் முன் இவ்வழக்குப் பற்றி கவனத்திற்கு கொண்டுவந்தபோது நீதிமன்றம் இவ்வழக்கை ஆகஸ்டு முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. இதை எல்லாம் மறைத்துவிட்டு நான் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா சொல்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட புளுகுணி என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் எடை போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்பதற்கு இறுதியாக ஒன்றைக் கூறி முடிக்க விரும்புகிறேன். ஐந்து முறை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த என்னை - இன்று வரை ஒரு தெரு வீட்டில் அதாவது பத்து வீடுகளோடு இணைந்த ஒரு வீட்டில், அதுவும் நான் முதல் அமைச்சராக வருவதற்கு முன்பு வாங்கப்பட்ட அதே வீட்டில் - தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற என்னைப் பற்றி - "டிக்கெட் இன்றி, சட்டைப் பாக்கெட்டில் பணம் இன்றி, திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில் ஏறி வந்தவர் என்று தன்னைப்பற்றிதானே கூறிக்கொண்ட ஒரு மனிதர், அரசியல் மூலம் இவ்வளவையும் சம்பாதித்து இருக்கிறார்'' என்று பேசியிருக்கிறார் என்றால் அவரைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும். திருட்டு ரெயில் ஏறி வந்தவன் நான் என்று எப்போதும் நான் கூறிக் கொண்டதில்லை.

எழுதிச் சம்பாதித்தவன் நான்

நான் சென்னைக்கு வருவதற்கு முன்பே ஈரோட்டில் தந்தை பெரியாரின் "குடியரசு'' அலுவலகத்தில் துணை ஆசிரியனாகப் பணியாற்றி, பின்னர் கோவையிலும், சேலத்திலும் திரையுலகிலே சேர்ந்து பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி, சம்பாதித்து அதன் பின்னர்தான் சென்னைக்கே வந்தேன். என்னுடைய பேனாவினால் நான் எழுதிக் குவித்த திரைப்படங்கள் மூலமாக, ஏராளமான நூல்கள் வாயிலாக நான் சம்பாதித்தேன்.

ஜெ. எப்படி சம்பாதித்தார்?

அவற்றில் இருந்து பொது நலன்களுக்காக நிதியும் வழங்கி வருகிறேன். ஆனால் ஜெயலலிதா என்னைக் கேட்பதைப் போல; வேறு யாராவது ஜெயலலிதாவைப் பார்த்து நீ எப்படி இவ்வளவு சொத்துக்களையும் சம்பாதித்தாய், நடிப்பின் மூலமாக மட்டும் இத்தனை சொத்துக்களையும் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டுவிட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?. அவருக்கு இறுதி எச்சரிக்கை; "வைரம்'' படத்து நாயகியே, வாயில் வந்ததையெல்லாம் பேசாதே! என்பது தான்! என்று காட்டமாக கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X