For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் பூமியை வேகமாக சிங்கள மயமாக்கி வருகிறார்கள்-தமிழ் தேசிய கூட்டமைப்பு

Google Oneindia Tamil News

Suresh Premachandran
சென்னை: தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலம் நடைபெறுகிறது. இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதைத் தடுக்க இந்தியாவால் மட்டுமே முடியும், இந்தியாவை மட்டுமே நம்பியுள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இக்கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், விநாயகமூர்த்தி ஆகிய எம்.பிக்கள் அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஜூலை 9ம் தேதி இந்தியா வந்தனர். டெல்லி சென்ற இவர்கள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை சந்தித்துப் பேசினர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்தியா வந்த அவர்கள், சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,

இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல், ராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத் தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவல நிலை வடக்குப் பகுதியில் உள்ளது.

தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர்களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 லட்சம் சிங்கள ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பதுதான் இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே, போரின்போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். அவர்கள் அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர்.

இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது.

எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்திரமாக வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இலங்கை இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித் தர முடியும்.

இதைத்தான் எங்கள் பயணத்தின்போது இந்தியத் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இதைத்தான் நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார்.

எனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும்.

ஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது. இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார்.

முன்னதாக சம்பந்தன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இலங்கைக்கு இந்திய அரசு சிறப்பு தூதரை அனுப்ப வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், இந்திரா காந்தி அம்மையார் காலத்திலேயே இதுபோன்ற விசேஷ தூதரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கலைஞர் கேட்டார். இப்போதும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது நல்ல கருத்து என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X