For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-புயலாக மாறும் வாய்ப்பு

Google Oneindia Tamil News

Tenkasi Dam
சென்னை: தமிழகத்தில் இன்று காலை தொடங்கி அடுத்த 48 மணி நேரத்திற்கு பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மெலிந்த குறைந்த காற்றவுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து புயல் சின்னமாக மாறக் கூடிய வாய்ப்புகளும் உள்ளதால் மழை நீடிக்கும் எனத் தெரிகிறது.

ஆந்திராவின் ராயலசீமா, கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்திலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மட்டுமல்லாமல் உட்புறப் பகுதிகளிலும் மழை பெய்யும்.

வங்கக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இது வலுவடைந்து மண்டலமாக மாறினால் மழை வலுக்கும். தற்போது கடலில் சற்று கொந்தளிப்பான நிலை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக கடலோர பகுதிகளில் மேற்கு திசை நோக்கி மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக தலா 7 செமீ மழை பெய்துள்ளது.

தலைநகர் சென்னையில் இன்று காலை முதல் லேசான சாரல் மழை காணப்பட்டது. வானம் மேக மூட்டமாக உள்ளது. கடந்த 3 நாட்களாகவே லேசான மழையும், தூறலுமாக இருப்பதால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் சேறும் சகதியுமாக மாறி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் முறையாக சாலைகள் போடப்படாத பகுதிகளில் மக்கள் அவதி சொல்லி மாள முடியாது.

ஆந்திர கடலோர பகுதியில் இருந்து தமிழக கடலோர பகுதி வரை மேகக் கூட்டங்கள் அதிகம் சூழ்ந்துள்ளதால் ஆங்காங்கே கனமழை பெய்யும்.

சென்னையில் இன்று காலை 10.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. விமான நிலையத்தில், 12.4 மி.மீட்டர் மழை பதிவானது.

இந்த வருடம் மழை அதிகம்...

கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சென்னையில் இந்தக் கால கட்டத்தில் மழை கூடுதலாகவே பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 85.3 மில்லிமீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 151.5 மில்லிமீ்ட்டர் மழை பெய்துள்ளது. இது 78 சதவீதம் கூடுதலாகும்.

வழக்கமாக இந்த காலகட்டத்தில் சென்னையில் இந்த அளவுக்கு மழை இருக்காது. ஆனால் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் வலுத்தும், சில பகுதிகளில் லேசான மழையாகவும் இது உள்ளது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கூட கூடுதலான மழை கிடைத்துள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்பட பல நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம்

சென்னை மாவட்டத்தில் வழக்கத்தை விட 68 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து தற்போது வரையான கணக்கு இது.

தாம்பரத்தில் இக்காலகட்டத்தில், 126 மில்லி மீட்டர் மழை பதிவாகும். ஆனால் 211 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமான வெப்ப நிலை 28.9 டிகிரியாக இருக்கும். ஆனால் தற்போது வெப்ப நிலை 6 டிகிரி ஷெல்சியஸ் குறைந்துள்ளது.

குடிநீரில் கலக்கும் சாக்கடை

பெரிய மழை வருவதற்கு இன்னும் சில மாதங்கள்உள்ள நிலையில் இந்த சிறிய மழைக்கே சென்னை மக்கள் படாதபாடு படுகின்றனர். இயற்கை ஒருபக்கம் என்றால், செயற்கையாக மாநகராட்சியும், குடிநீர் வடிகால் வாரியமும் செய்யும் குழப்பமும்தான் மக்களை பெருமளவில் படுத்துகின்றன.

சென்னையில் பெய்து வரும் மழையால் மழைநீர் கால்வாய் பணிகள், தூர் வாரும் பணிகள், சாலை போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், வேப்பேரி நெடுஞ்சாலை, கொடுங்கையூர், தென் சென்னை பகுதிகளில் தார்சாலை போடுவதற்காக சுரண்டப்பட்டு உள்ளது. திடீரென பெய்து வரும் இந்த மழையால் சாலை பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளன.

பெரம்பூர் பகுதி 32, 35, 37-வது வார்டுகளில் குடிதண்ணீரில் சாக்கடை நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுபோல 45, 48, 100, 59, 35, 32-வது வார்டுகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. 45-வது வார்டில் கே.பி. பார்க்கில் மழைநீர் தேங்கி உள்ளது.

வடசென்னை பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் நிலவுவதாக தெரிகிறது.

வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் சென்னை எப்படி மிதக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்குள் இந்தக் கோளாறுகளை சரி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென்காசியில் பலத்த மழை-அருவியி்ல் வெள்ளம்-அணை நிரம்பியது

இதேபோல, தென்காசி வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தொடர்ந்து 4 முறையாக இன்று வெள்ள பெருக்கு ஏற்பட்டதாலும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சிறு சிறு பாறைகள் விழுந்தன. இதில் மெயின் அருவியில் குளித்து கொண்டிருந்த 3 பேர் காயம் அடைந்தனர்.

குற்றாலம் மெயினருவி மட்டுமின்றி செங்கோட்டை குண்டாறு, மொட்டை நீர்த்தேக்கம் பகுதியிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் குண்டாறு நீர்தேக்கத்தில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குண்டாறு நீர்தேக்கத்தில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா வரும் இளைஞர்கள் சுமார் 25 அடி உயரத்திலிருந்து அணையின் உள் குதித்து மகிழ்கின்றனர். மொத்தத்தில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் முழுமையான குளுமையோடு உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X