For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உமாசங்கர் சஸ்பெண்ட் ஆக போலி சாதி சான்றிதழ் காரணம்?

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: போலி சாதி சான்றிதழ் தந்ததன் அடிப்படையில் தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1990ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தவர் உமா சங்கர். தற்போது சிறுசேமிப்பு துறையின் இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

கடந்த 1995ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மதுரையில் சுடுகாட்டு கொட்டகை அமைக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதை வெளிக்கொண்டு வந்தவர் அப்போது மதுரை கூடுதல் கலெக்டராக இருந்த உமா சங்கர்.

இதைத் தொடர்ந்து, 1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மற்றும் அவரிடம் அமைச்சராக இருந்த செல்வகணபதி ஆகியோர் மீது சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் உமா சங்கர் இணை கண்காணிப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் கலெக்டராக்கப்பட்டார்.

2006ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார் உமா சங்கர்.

இந்த நிறுவனத்தின் பணிகளில் முக்கியமான ஒன்று இலவச கலர் டி.வி. வழங்குவது. இந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்தார் உமா சங்கர்.

இந் நிலையில் 2008ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, தமிழகத்தின் ஒரு தனியார் கேபிள் டி.வியை தேசியமயமாக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.

இந் நிலையில் சமீபத்தில் உமா சங்கர் சிறு சேமிப்புத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டது.

இந் நிலையில் நேற்று முன்தினம், உமா சங்கரை தமிழக அரசு திடீரென சஸ்பெண்ட் செய்தது. இதற்கான உத்தரவு, அவரது வீட்டில் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

உமா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அவர் அளித்த போலி சாதிச் சான்றிதழே காரணம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஐஏஎஸ் சேர யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்காக உமா சங்கர் சமர்ப்பித்த சாதி சான்றிதழில், சலுகை பெறுவதற்காக, தலித் கிறிஸ்தவரான அவர், தலித் (இந்து) என்று மாற்றி குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலி சான்றிதழ் தந்தமை பற்றியும், சஸ்பெண்டு செய்யப்பட்டது பற்றியும் யு.பி.எஸ்.சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.

உமா சங்கர் வழக்கு:

இந் நிலையில் தமிழக அரசுக்கு எதிராக உமா சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், நான் 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். 95ம் ஆண்டு மதுரையில் கூடுதல் கலெக்டராக பணியாற்றினேன். அப்போது ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுடுகாட்டு கொட்டகை தொடர்பான ஊழலை அம்பலப்படுத்தினேன்.

பின்னர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இணை கமிஷனராக நான் பணியாற்றிய போது, பல்வேறு அமைச்சர்கள், மற்றும் ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தேன்.

பின்னர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் பதவிக்கு மாற்றப்பட்டு இந்தியாவில் முதல் கணினி நிர்வாக மாவட்டமாக மாற்றினேன்.

இதையடுத்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டேன். அப்போது அரசு கேபிள் டி.வியை பலப்படுத்தும் நடவடிக்கையின் போது பிரபல கேபிள் நிறுவனம் இடையூறு செய்தது. எனவே அதன் உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டேன்.

இதையடுத்து என்னை அரசு கேபிள் டி.வி. பதவியில் இருந்து சிறு சேமிப்புத்துறை கமிஷனர் பதவிக்கு மாற்றி விட்டனர். தற்போது எந்த அடிப்படை காரணங்களும் இன்றி என் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில் (1992) 5ம் பிரிவில் ஐ.ஏ. எஸ்- ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு அனுமதி கொடுத்தால் மட்டும் ஊழல் விசாரணை நடத்தவோ, வழக்கு பதிவு செய்ய முடியும்.

இந்த விதி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மாற்றி விடுகிறது.

மேலும் தங்களுக்கு வேண்டியவர்கள் மீது விசாரணைக்கு தடை விதிக்கவும், வேண்டாதவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடவும், அரசுக்கு தன்னிச்சையாக அதிகாரம் கொடுக்க வழிவகை செய்கிறது. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நியாயமான விசாரணையில் அரசு தலையிடவோ, தடுக்கவோ முடியும்.

எனவே இந்த விதியை உடனடியாக நீக்கவும், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் உமா சங்கர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X