For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமீத் ஷாவை விசாரிக்கப் போகும் தமிழ் சிபிஐ அதிகாரி கந்தசாமி

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் அமீத் ஷாவை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சிபிஐ ஐஜி கந்தசாமி தலைமையிலான குழுவினர் விசாரிக்கவுள்ளனர்.

விசாரணைக்கு வருமாறு 2 முறை அமீத் ஷாவுக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ. ஆனால் இரண்டு முறையும் அவர் வரவில்லை. மாறாக 2வது சம்மன் அனுப்பியவுடன் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் பதவியை விட்டு விலகிய நிலையில் இன்று நேரில் தோன்றினார். இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரை சிபிஐ ஐஜி கந்தசாமி தலைமையிலான குழு தீவிரமாக விசாரிக்கவுள்ளது. விசாரணையின் முடிவில் ஷா கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கறார்' கந்தசாமி

சிபிஐ ஐஜியான கந்தசாமி மிகவும் நேர்மையானவர் என்று அறியப்பட்டவர். மிகவும் கறாரானவரும் கூட என்றும் கூறப்படுகிறது.

இவர்மட்டுமல்லாமல் சிபிஐ டிஐஜியான அமிதாப் தாக்கூரும் பல தலைவர்களை சிபிஐ வலையில் வீழ்த்தியவர் ஆவர். பல முக்கிய வழக்குகளில் இந்த இரு அதிகாரிகள்தான் இடம் பெற்று பலரை சட்டத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்திய பெருமைக்குரியவர்கள்.

46 வயதாகும் கந்தசாமி 1989ம் ஆண்டு பாட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தமிழக பிரிவைச் சேர்ந்த அதிகாரி இவர். புலனாய்வு செய்வதில் புலியாக கருதப்படுபவர். அமீதாப் தாக்கூருக்கு வயது 37 மட்டுமே என்பது ஆச்சரியகரமானது. 1998ம் ஆண்டு ஒரிசா பாட்ச்சைச் சேர்ந்தவர் இவர். ஷாவை இந்த வழக்கில் கொண்டு வந்ததற்கு இந்த இருவரும்தான் முக்கியக் காரணம்.

பெயரைக் கேட்டாலே நடுக்கம் வரும்

கந்தசாமி முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது என்கிறார்கள் காந்தி நகரில் அமைந்துள்ள சிபிஐ முகாம் அலுவலக ஊழியர்கள். எப்போதும் கறாராக இருப்பாராம் இந்த அதிகாரி. எப்போதாவதுதான் அவரது முகத்தில் புன்னகையைப் பார்க்க முடியும் என்கிறார்கள். தமிழகத்திலும், மகாராஷ்டிரா, கேரளாவிலும் பெரும் புகழ் பெற்றவர் கந்தசாமி. குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு இவரது பெயரைக் கேட்டாலே நடுக்கம் வருமாம்.

விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கு இந்த அதிகாரியை முன்மாதிரியாகக் கொண்டுதான் அந்த வேடமும், பெயரும் வைக்கப்பட்டது என்பது ஒன்றே கந்தசாமியின் சிறப்பை குறிக்கப் போதுமானது.

கந்தசாமி இப்படி என்றால் தாக்கூர் பாலிவுட் ஹீரோக்கள் ஸ்டைலில் அதிரடியான அதிகாரியாக இருக்கிறார். படு கேஷுவலாக குற்றவாளிகளைப் பிடிப்பது இவரது பாணி.

இந்த இரு அதிகாரிகளும் ஒரே சமயத்தில் சிபிஐயில் இணைந்தவர்கள். பல புகழ் பெற்ற வழக்குகளில் இவர்களது புலனாய்வுப் பிடி உள்ளது.

2007ம் ஆண்டு கோவாவில் இங்கிலாந்து சிறுமி ஸ்கார்லெட் கீலிங் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை இவர்கள்தான் பிடித்னர். 2006ல் கோவாவில் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கையும் இவர்கள்தான் விசாரித்தனர்.

கேரளாவை உலுக்கிய ரூ. 375 கோடி எஸ்என்சி-லாவலின் ஊழல் வழக்கை உடைத்தவரும் கந்தசாமிதான். இந்த வழக்கில் கேரள மாநில சிபிஎம் செயலாளர் பினரயி விஜயனை குற்றவாளியாக சேர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கந்தசாமி.

அதேபோல கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இன்னொரு வழக்கான சிஸ்டர் அபயா கொலை வழக்கிலும் துப்பு துலக்கியவர் கந்தசாமிதான்.

16 வருடமாக இழுத்தடித்துக் கொண்டிருந்த இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்ததும் கந்தசாமி அதை திறமையாக துப்புதுலக்கி இரண்டு பாதிரியார்களையும், ஒரு கன்னியாஸ்திரியையும் கைது செய்து அதிரடியாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தார். மிகத் திறமையான துப்பு துலக்கலாக இந்த வழக்கு சிபிஐ வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

சோராபுதீன் வழக்கை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் சிபிஐ கையில் எடுத்தது. அதன் பின்னர் துணை கமிஷனர் அபய் சுடாஸ்மா கைது செய்யப்பட்டார். இந்த போலி என்கவுன்டர் வழக்கில் கைதான நான்காவது ஐபிஎஸ் அதிகாரி இவர்.

அதற்கு முன்பு வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், திணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பத்து போலீஸாரும் இதில் கைதாகியிருந்தார்கள்.

தற்போது சிபிஐ வசம் சிக்கியுள்ள அமீத் ஷாவை கந்தசாமி தலைமையிலான குழு தீவிரமாக விசாரிக்கவுள்ள நிலையில் இந்த வழக்கில் பாஜகவுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X