For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கும் ஜெ.-கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

Stalin
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கை தாமதப்படுத்தும் வகையில், தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் நடத்த 'தீம்கள்' காலியாகிவிட்டதால் இப்போது எதற்கெடுத்தாலும் போராட்டங்களை அறிவித்து வருகிறார் ஜெயலலிதா. இதில் பல போராட்டங்களுக்கு அவர் சொல்லும் காரணம் மக்களிடையே நகைப்பை உருவாக்கி வருகிறது.

இந் நிலையில் ஜெயலலிதா பாணியிலேயே ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது திமுக.

திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பையும் வைத்துள்ள ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுக்கும் அறிக்கைகளில் தன்னை 'ஊழலற்ற உத்தமி' போல தொடர்ந்து சொல்லி வருகிறார். அவர் மீது எந்தெந்த வழக்குகளில் எத்தகைய தீர்ப்புகள் கூறப்படுகின்றன என்று கழக தலைவர் கருணாநிதி பல முறை சுட்டிகாட்டியும், அதற்கு பதில் சொல்ல வழியில்லாமல், தான் ஏதோ நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு பொய்யை சொல்லி வருகிறார்.

ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குவதாக சொல்லிக்கொண்டு 1.7.1991 முதல் 30.4.1996 வரை ஆட்சி செய்த காலத்தில் சுமார் 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்களை குவித்ததாக 5.7.1997ல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு தொடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் வழக்கு ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு ஏற்படவில்லை. தீர்ப்பு வழங்கப்பட இயலாத அளவிற்கு ஜெயலலிதா தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்தை கூறி வாய்தா கேட்பதும், நீதிபதிகள் அதனை மறுப்பதும், அதன் மீது மேல் முறையீடு செய்கிறேன் என்று ஜெயலலிதா வழக்கறிஞர்கள் வாதாடுவதும் எப்படியோ ஆண்டுகள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறன.

இந்த சொத்து வழக்கில் ஜெயலலிதா எந்த அளவிற்கு காலதாமதத்தை வலிந்து உருவாக்குகிறார் என்பதை நாடறியும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா கவலைப்படுவதே இல்லை.

வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பலமுறை இவ்வாறு வாய்தா கேட்கும் முறையை கண்டித்தபோதிலும், அந்த நீதிமன்றத்திலேயே ஜெயலலிதா மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்.

அந்த அடிப்படையில்தான் தற்போது வாய்தா கேட்டபோது, ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2005ம் ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டு, தரப்பட்ட வாக்குமூலங்களில், மொழி பெயர்ப்பு சரியில்லை என்பதாக ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறார்.

வாய்தா கேட்ட மனுவினை நீதிபதி தள்ளுபடி செய்த பிறகு, அதையும் மதிக்காமல் அதையும் எதிர்த்து மேல் கோர்ட்டில் முறையீடு செய்யப் போகிறேன் என்கிறார். அவர்களுடைய குறிக்கோள் எல்லாம் எப்படியாவது காலத்தை நீடித்து, தண்டனைக்கு தப்ப வேண்டும் என்பது தானே தவிர வேறல்ல.

இவ்வாறு ஜெயலலிதா தொடர்ந்து வாய்தா கேட்டு தமிழ்நாட்டு மக்களையே அவமதித்துக் கொண்டிருக்கும் போக்கினைக் கண்டிக்கும் வகையிலும்- நீதிமன்றத்தின் கவனத்திற்கு இதனை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலும் திமுக இளைஞர் அணியின் சார்பில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் முன்னரே தேதி அறிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அந்தந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடத்திட திமுகவின் தலைமையிடம் விரைவில் அனுமதி பெற்று, அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X