For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசை கேள்வி கேட்கும் உரிமை தமிழனுக்கு உண்டு-கி.வீரமணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் மத்திய ஆட்சி அமைந்துள்ளது. எனவே தமிழர்கள் உரிமையுடன் கேள்விகளைக் கேட்கக் கடமைப்பட்டவர்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..

இலங்கையில் நிரந்தரமான அமைதி ஏற்படவும், அந்த நாடு செழிக்கவும் வழிவகைகளைச் செய்ய காலம் கனிந்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மூன்று முக்கியப் பணிகளை இலங்கை அரசு செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தி, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

(1) போர்க்குற்றப் புகார்கள் குறித்த ஐ.நா. விசாரணை நடக்கவேண்டும்.

(2) போரினால் இடம் பெயர்ந்துள்ள மக்கள் கூடிய விரைவில் அவரவர் இடங்களில் குடி அமர்த்தப்பட வேண்டும். (அதாவது ஈழத்தமிழர்கள் வைக்கப்பட்டுள்ள முள்வேலிகள் அறவே அகற்றப்பட்டு, அவர்கள் தங்களது மண்ணில், சொந்த இல்லங்களில் முன்பு போல நிம்மதியாக வாழும் உரிமையை நடைமுறைப்படுத்தவேண்டும்).

(3) ஜனநாயகமும், மனித உரிமைகளும் மேம்படுத்தப் பட வேண்டும். (அதாவது அங்கே தற்போது சிங்கள ஹிட்லர் ராஜபக்சேவின் ஆட்சியில் ஜனநாயகமும் இல்லை; மனித உரிமைகளும் இல்லை என்பது அப்பட்டமான உண்மை என்கிறது அமெரிக்கா).

சிங்களக் கொடுங்கோல் ஆட்சிபற்றி உலகம் அறியவேண்டும். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசி, குழந்தை களைக் கூட அழித்து, தமிழச்சிகளின் கற்பைச் சூறையாடி, கோரத் தாண்டவம் நடத்திய கொடுமைக்காரரான சிங்கள இராஜபக்சேயின் வெறித்தனம், வரலாற்றில் தண்டிக்கப்பட முடியாமல் போகக் கூடாது.

போர்க் காலங்களில் சிறைப் பிடிக்கப்பட்ட யுத்தக் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், சமாதான வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை எப்படி மனித உரிமைகளை மதித்து நடத்தவேண்டும் என்ற சர்வதேச விதிமுறைகள் எவ்வாறெல்லாம் மீறப்பட்டு இடி அமீன்கள் கூட வெட்கப்பட்டு ஓடி விடும் அளவுக்குக் கொடுங்கோல் ஆட்சி அங்கே நடந்ததை உலகம் அறியவேண்டும்.

தமிழினம் எப்படி திட்டமிட்டு அழிக்கப்பட்டு, இனப் படுகொலை கேள்வி கேட்பாரற்று நடந்தது என்ற புதைபட்ட உண்மைகள், தோண்டித் துருவி எடுக்கப் பட்டு, உலகின் வரலாற்றுப் பக்கங்களில் படிந்த கறைகளை விளக்கிக் காட்டும் வகையில் அமைதல் வேண்டும்.

இப்போது இவ்வளவு மனித உரிமை பேசும் அமெரிக்காவின் அரசு, அந்தக் கொடுமைகள் நடந்த போது, இப்படித் தலையிட்டு எச்சரிக்கையைத் தந்திருந்தால், ஈழத் தமிழர்கள் பல்லாயிரம் பேர் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும்!

இலங்கையை, அமெரிக்கா இவ்வளவு வெளிப்படையாகக் கண்டிக்கும் நிலையில், தொப்புள்கொடி உறவுள்ள நாடான இந்தியா அதன் மத்திய அரசு எவ்வளவு வன்மையாகக் கண்டித்து ஈழத் தமிழருக்குப் புதுவாழ்வு, வாழ்வுரிமை பெறுவதில் முதல் நாடாகத் திகழ வேண்டும்! ஆனால் இந்திய அரசின் செயல்பாடு ஏமாற்றமே! இதில் மிஞ்சியது ஏமாற்றம்தானே!

இந்த லட்சணத்தில் 500 கோடி ரூபாய்களைக் கொட்டி அழுது, அது சிங்கள ராணுவத்திற்கும் அரசுக்கும் பயன்படும்படிச் செய்து இரட்டைத் தாழ்ப்பாள் போட்ட நிலைதானே ஏற்பட்டது?

தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்கள் எத்தனை முறை கடிதம் எழுதி, நேரில் வலியுறுத்தி, தனது எம்.பி.க்களை அனுப்பி, வற்புறுத்திப் பாடுபடமுடியுமோ அவ்வளவும் செய்துவிட்டார்.

ஈழத்தந்தை செல்வாவிடம் தந்தை பெரியார் கூறிய வாசகம்தான் கல்லில் எழுத்தாக நம் முன்னே நிற்கிறது.

பாம்புக்கும் நோகாமல், பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் இலங்கை அரசிடம் இந்திய அரசு நடந்து கொள்வது தமிழின அழிப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றத் தவறுவது மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை அல்லவா?

தமிழக மீனவர்களும் கொல்லப்படும் நிலை! தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வது, தடுப்பது, அடுத்த தொடர் கொடுமை! இவைகளுக்கு எல்லாம் தீர்வு எப்படி, எப்போது காணப்போகிறது டில்லி அரசு?

தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் ஆட்சி அமைத்துள்ளதால், தமிழர்கள் உரிமையுடன் இக் கேள்விகளைக் கேட்கக் கடமைப்பட்டவர்கள். தமிழர்களின் குமுறல், அலட்சியப்படுத்தப்படக் கூடிய தல்ல!

எனவே, மேற்காட்டிய இரண்டு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண, தேவையான கடும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X