For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது-கேபி

By Chakra
Google Oneindia Tamil News

KP
முடிந்து போன போராளி இயக்கத்திற்கு (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிற்பிகளில் ஒருவரான கேபி, அந்த இயக்கத்தைத்தான் இப்படி போராளி இயக்கம் என்று கூறுகிறார்) மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கேபி.

ராணுவப் பிடியில் சிக்கியுள்ள கேபி என்கிற குமரன் பத்மநாதன் இலங்கையின் ஐலன்ட் நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியின் 2ம் பாகம்:

4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?

பிரபாகரன், அவரது முக்கியத் தளபதிகள், புலம் பெயர்ந்த தமிழர்களில் சில பிரிவினர், தமிழ்நாடு நமக்கு உதவும் என நம்பியிருந்தனர். தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவ முன்வரும், பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவார் என அவர்கள் பெரிதும் நம்பினர்.

நாங்களும் கூட சில ஐ.நா. அதிகாரிகளை அணுகினோம், கிழக்கு தைமூர் அதிபரை அணுகினோம். ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றோம். இந்த நேரத்தில்தான் 2009ம் ஆண்டு மே மாதம் 3வது வாரத்தில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த கடைசிப் பகுதியையும் ராணுவம் சுற்றி வளைத்து விட்டது.

தற்போது விடுதைலப் புலிகளின் ராணுவ கட்டமைப்பு இல்லை. இந்த நிலையில், அரசுடன் இணைந்து செயல்பட புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வருவார்கள் என கருதுகிறீர்களா?

புலம் பெயர்ந்த மக்களின் மன நிலையில் மாற்றம் வர வேண்டியது அவசியம். விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்து போய் விட்டது. எனவே புதிய சூழ்நிலை குறித்து பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். தற்போதைய நிலையை புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் சிந்தித்துப் பார்க்க முன்வர வேண்டும். அதற்கேற்ப அவர்கள் செயல்பட வேண்டும்.

முடிந்து போன போராளி இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும். எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம்.

இப்போது ராணுவரீதியான பலம் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்த இடத்தில்தான் நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு திரும்புவது தொடர்பான பணிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள வடக்கு கிழக்கு மறு சீரமைப்பு வளர்ச்சிக் கழகம் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை புலம் பெயர்ந்த தமிழர்கள் விட்டு விடக் கூடாது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமாக நடமாட முடியும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

வெளிநாடுளிலிருந்து ஆயுதங்களைப் பெற்று அனுப்புவதில் நீங்கள் மிகவும் வெற்றிகரமானவர் என்று அறியப்பட்டவர் நீங்கள். அப்படி இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரை உங்களது இடத்தில் அமர்த்தினார் பிரபாகரன். எப்போது அதைச் செய்தார், ஏன் செய்தார்?

2003ம் ஆண்டு நான் நீக்கப்பட்டேன். வெளிநாட்டுக் கட்டமைப்பை காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். உளவுப் பிரிவினரின் தொடர் கண்காணிப்பு காரணமாக நான் மிகவும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். (இலங்கை உளவுப் பிரிவினரின் திறமை காரணமாகத்தான் வெளிநாடுளில் புலிகள் அமைப்பின் செயல்பாடுகள் முழுமையாக செயலிழந்து போனதாக கூறியுள்ளாராம் கேபி)

உங்களது ஆதரவாளரான ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றது ஏன்?

அப்போதைய பிரதமர் உறுதியானவராக இல்லை என்று பிரபாகரன் கருதினார். ஈழப் பிரச்சனையை ரணில் விக்கிரமசிங்கேவால் தீர்த்து வைக்க முடியாது என்பது அவரது எண்ணம். இதன் விளைவாக மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற முடிந்தது. ராஜபக்சேவுக்கு முன்பு இருந்த தலைவர்களை எளிதில் வென்ற பிரபாகரனுக்கு ராஜபக்சேவை வெல்ல முடியவில்லை.

2006 ஆகஸ்ட் மாதம் மீண்டும் சண்டைகளில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆலோசனை நடத்தியதா?

பாதுகாப்பு படையினர் மீது மிகப் பெரிய தாக்குதலை தொடுப்பதற்கு முன் என்னுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்தினார். உடனடியாக பெருமளவிலான ஆயுதங்களை வாங்கி அனுப்புமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.மேலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதேசமயம், ராணுவரீதியாக ஈழத்தை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் பிரபாகரன் உறுதியாக இருந்தவரை அவர் யாருடைய ஆலோசனையையும் கேட்கத் தயாராக இல்லை.

நீங்கள் தற்போது கொழும்பில் இருப்பதால், உங்களுக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்படும், அதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என சில தமிழ் அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். அப்படி ஏதேனும் உள்ளதா?

நான் கொழும்பில் இருப்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை. தற்போதைய தேவை போருக்குப் பிந்தைய பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான அரசியல் அணுகுமுறை மட்டுமே. போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவவும், வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான ஒருங்கிணைந்த திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இதைத் எந்த அரசியல் தலைவருடனும், கட்சியுடனும் மோதும் எண்ணம் எனக்கு இல்லை.

தமிழ் சமுதாயத்தின் நன்மைக்காக, புலம் பெயர்ந்த தமிழ் சமூகமும், அரசியல் கட்சிகளும், பிரிவுகளும், இலங்கையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும். மற்றபடி எனக்கு வேறு எந்த அரசியல் அபிலாஷைகளும் இல்லை.

இலங்கை அரசை தவிர்த்து விட்டு எதையும் செய்யலாம் என்று நான் நினைக்கவில்லை. அதுசாத்தியமில்லை. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

புலிகளுக்கு உங்களது நிதி சேகரிப்பு எப்படி இருந்தது?

மிகப் பெரிய அளவில் அப்போது எங்களுக்கு நிதி சேர்ந்தது. நிதிக்குப் பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு வந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் பணம் வந்தது. சுனாமியின்போதும் கூட எங்களுக்கு பெருமளவில் பணம் வந்தது. இருப்பினும் அதுகுறித்து என்னால் விரிவாகச் சொல்ல முடியாது. காரணம், அவற்றையெல்லாம் அப்போது பராமரித்தது காஸ்ட்ரோதான். அவர் ஒருபோதும் என்னுடன் ஒத்து வந்ததே இல்லை.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், இந்த நிதி குறித்து புலம் பெயர் தமிழ்ச் சமுதாயத்தினர் விவாதித்தனர். அவர்களில் சிலர் வசம் நிதிப் பொறுப்பு இருந்தது. அவர்கள் உடன்பட்டு வர மறுத்து விட்டனர். இதனால்தான் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பானது.

பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவை எப்போது சந்தித்தீர்கள்?

நான் பிடிபட்டு கட்டுநாயகே விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, மிகவும் மனம் உடைந்திருந்தேன். மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். எனது முடிவு நெருங்கி விட்டதாக கருதினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியும், என்னை அவர்கள் கைது செய்ததும் எனது இதயத்தை நொறுங்கச் செய்தது.

கட்டுநாயகே விமான நிலையத்திலிருந்து நேராக என்னை கோத்தபயா வீட்டுக்குக் கொண்டு சென்றனர். மிகச் சிறந்த நிர்வாகியாக, திறமையாளராக அறியப்பட்ட கோத்தபயா ராஜபக்சேவை அப்போது எனக்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்த அடுத்த சில நிமிடங்களிலேயே எனது அனைத்துப் பயத்தையும் அவர் போக்கி விட்டார். எனக்கு டீ, கேக் தரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

கோத்தபயா வீட்டுக்குள் நான் நுழைந்ததும் அங்கு ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது. இங்கு எனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியம் கிடைத்தது.

பின்னர் கோத்தபயாவின் ஆசிர்வாதங்களுடன், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 9 தமிழர்களை நான் கொழும்புக்கு அழைத்து வந்து அவரை சந்திக்க வைத்தேன். மறு வாழ்வு நடவடிக்கைகளில் அவர்களது உதவியைப் பெறுவது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான விரிசலை குறைக்க நிறைய செய்ய வேண்டியுள்ளது. இதற்காக நான் பல நாட்கள் இரவு கூட தூங்காமல் விழித்திருந்து பாடுபட்டேன். எங்களது நடவடிக்கையை சிலர் எதிர்க்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை, அதன் ராணுவ பலம் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட முன்வர வேண்டும்.

அரசின் அனுமதியோடு நாங்கள் படைத் தலைவர்கள் சிலரையும் சந்திக்க முடிந்தது. ராணுவம் எங்களை இதமாக, அன்பாக வரவேற்கும் என நான் கருதவே இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. குறிப்பாக பலாலியில் அப்படி ஒரு வரவேற்பு எங்களுக்குக் கிடைக்கும் என கருதவில்லை. ஆனால் அவர்கள் என்னை அன்போடு வரவேற்றுப் பேசினர்.

(பேட்டியின் இறுதிப் பகுதி நாளை தொடரும்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X