For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு மருத்துவமனையின் அலங்கோலத்தைக் கண்டித்து சாத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சாத்தூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்தும், பஸ் வசதி செய்து தரக் கோரியும், பஸ் கட்டணத்தை மறைமுகமாக ஏற்றியதைக் கண்டித்தும் சாத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகரம் அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்-7 கடந்த ஆண்டு நான்கு வழிச் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்படுவதற்கு முன்பே, படந்தால் சந்திப்பு அருகே ஒரு மேம்பாலமோ அல்லது சுரங்கப்பாதையோ கட்ட வேண்டும் என்று படந்தால், குருலிங்காபுரம், அண்ணா நகர், பெரியார் நகர் உட்பட 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், மக்களின் கோரிக்கையை அரசு கண்டு கொள்ளவில்லை.

இதன் விளைவாக, மேற்படி நான்கு வழிச் சாலையைக் கடந்து பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், மருத்துவமனை ஆகியவற்றிற்கு மக்கள் செல்லும் போது விபத்துகள் நடைபெறுகின்றன.

இது குறித்து தொடர்ந்து முறையீடுகள் செய்ததில், தற்காலிக ஏற்பாடாக படந்தால் சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்ற உறுதிமொழி அரசு அதிகாரிகளால் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் மாவட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய கோயிலாக விளங்குகிறது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் சாத்தூர் - இருக்கன்குடி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கவனிப்பாரற்று இருக்கும் மேற்படி சாலையை செப்பனிட வலியுறுத்தி கோரிக்கை விடப்பட்டும், அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதே போன்று, சாத்தூர் அரசு பொது மருத்துவமனை இட வசதி, மின் வசதி, படுக்கை வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நிர்மூலமாக காட்சி அளிக்கிறது.

ஒரு புறம் சாலை வசதியின்மை, மருத்துவ வசதியின்மை என்றால், மறுபுறம் மறைமுக பேருந்து கட்டண உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டாலும், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று அறிவித்தார் முதலமைச்சர் கருணாநிதி.

இருப்பினும், 'எக்ஸ்பிரஸ் பஸ்", 'பி.பி. பஸ்", என பல்வேறு பெயர்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி பேருந்து கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டு விட்டன. மக்களை ஏமாற்றுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி.

எனவே, விருதுநகர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண்-7-ல் படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அமைக்காத, சாத்தூர் - இருக்கன்குடி சாலையை செப்பனிடாத, சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தராத, பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசைக் கண்டித்தும், படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும், சாத்தூர் - இருக்கன்குடி சாலையை செப்பனிடவும், சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தரவும், பேருந்துக் கட்டணத்தை குறைத்திடவும் வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில், 3.8.2010 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.கே. சிவசாமி மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி மு. சந்திரா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X