• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனது ஆட்சி முடியலாம், ஆனால் திராவிட சகாப்தம் முடியாது-கருணாநிதி

|

Karunanidhi
சென்னை: ஒரு ஆட்சி முடியலாம். ஆனால் திராவிட சகாப்தம் முடியாது. திராவிட சகாப்தத்தில் இதுபோன்ற ஆட்சிகள் என்னுடைய தலைமையிலே உள்ள ஆட்சியாக இருந்தாலும் இருக்கலாம், அல்லது இந்த இயக்கத்திலே உள்ள மற்றவர்களுடைய தலைமையிலே உள்ள ஆட்சியாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் திராவிட சகாப்தத்திற்கு முடிவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நேற்று மாலை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பின்னர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், நீரேற்று நிலையங்கள், குடிநீர்க் குழாய் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இன்றைக்கு சென்னையிலே நான்கு அல்லது நான்கரை மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து இங்கே வருகின்ற வழியெல்லாம் இரு மருங்கிலும் ஆடவர், பெண்டிர், முதியோர், இளைஞர், தொழிலாளர்கள், மீனவர்கள் என்ற அளவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் எங்களை வாழ்த்தி வழியனுப்பினார்கள்.

1972-ம் ஆண்டு அண்ணாவுடைய ஆட்சி நிறைவுற்று, ஆனால் அண்ணாவுடைய ஆட்சி என்றைக்கும் நிறைவுறாது, தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தி.மு.க. ஆட்சியில், குடிநீர் வசதியை சென்னை மாநகர மக்களுக்கு எப்படிச்செய்வது? அன்றைக்கு திட்டங்கள் தேவைப்பட்ட அந்தக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது, எப்படி இந்த பிரச்சினையை தீர்ப்பது என்று எண்ணிய காரணத்தினாலேதான்-செ.கந்தப்பனை தலைவராக கொண்டு, குடிநீர்வாரியம் என்ற பெயரால் ஒரு வாரியத்தை அமைத்து, அந்த வாரியத்தின் பணிகளால் சென்னையினுடைய குடிநீர் தேவை முழுமையாக அல்ல, ஓரளவு தீர்க்கப்பட்டது என்பது உண்மை.

எம்.ஜி.ஆர். நிறைவேற்றாத தெலுங்கு கங்கை

கிருஷ்ணா தண்ணீர் வேண்டுமென்ற நிலை ஏற்பட்டு ஆந்திரத்தினுடைய முதலமைச்சரோடு கலந்து பேசி - ஏற்கனவே எம்.ஜி.ஆர். காலத்திலே அவர் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டும் கூட அப்போது வராத தெலுங்கு கங்கை திட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்திலே வரக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு என்.டி.ராமாராவ், சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் அதற்கான உதவிகளையெல்லாம் செய்து நாம் அந்தத் திட்டத்தை ஓரளவு வெற்றிகரமாக முடித்து கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு கிடைத்தது. அப்படி கிடைத்தபோதும், சென்னை நகர மக்களினுடைய தாகம் முழுமையாக நிறைவேறவில்லை. காரணம் மக்கள் தொகை அதனுடைய பெருக்கம் தண்ணீர் பற்றாக்குறையினால் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கிருஷ்ணா தண்ணீரும் சரியாகக் கிடைக்கவில்லை.

சில கரைகள் ஒழுங்குப்படுத்தப்படாமல் இருந்ததால் சில பகுதிகளிலே தண்ணீர் ஒழுங்காகச்சென்று குறிப்பிட்ட இடத்தை அடைய முடியாமல் இருந்த காரணத்தாலும் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது நம்முடைய கவலையை உணர்ந்து புட்டபர்த்தி சாய்பாபா அதை கேள்விப்பட்டு அவரே நேரில் என்னுடைய இல்லத்திற்கு வந்து, இந்த கிருஷ்ணா நீர் திட்டத்தில் இருக்கின்ற குறைகளை அகற்றி அதை நான் நிறைவேற்றி தருகின்றேன். அதற்கு நீங்கள் அரசின் சார்பில் அனுமதிக் கொடுங்கள் என்று கேட்டபோது, யாராவது வர மாட்டார்களா என்றுதான் நான் எண்ணியிருந்தேன். சாய்பாபா அவர்களே, நீங்களே நேரில் வந்துவிட்ட காரணத்தால் தாராளமாக செய்யுங்கள் என்று நான் அவரிடத்திலே எடுத்துச் சொல்லி அவரும் சுமார் ஐம்பது கோடி ரூபாய் செலவிலே அந்த திட்டத்தை முழுமைப்படுத்தி தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வளவிற்கும் பிறகு தமிழகத்தினுடைய நகரங்களிலே மாத்திரமல்ல, தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் தேவையை நிறைவு செய்வதற்காக நாம் எடுத்துள்ள முயற்சிகளையெல்லாம் இங்கே துணை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து விளக்கி இருக்கின்றார்.

நில வளம் உண்டு-நீர் வளம் இல்லை

தமிழ்நாடு நீர்வளம், நிலவளம் பொருந்திய நாடு என்று அழகுக்காக சொல்லலாம். ஆனால் நீர்வளம் இல்லாத நாடு. நிலவளம் இருக்கின்ற நாடு தமிழ்நாடுதான். நாம் தண்ணீருக்கு பக்கத்திலே உள்ள மாநிலங்களைத்தான் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த பக்கத்திலே சென்றால் ஆந்திரா, கிருஷ்ணா. இன்னொரு பக்கம் சென்றால் கர்நாடகா. காவிரி நீர் நமக்கு தேவைப்படுகிறது.

இப்படி எந்தப்பக்கம் சென்றாலும், அந்த பக்கத்திலே இருக்கின்ற மாநிலங்கள் நமக்கு உதவினால்தான் நம்முடைய தண்ணீர் தேவை நிரந்தரமாக சரி செய்யப்படும். அதனால் ஏற்படுகின்ற சண்டைகளை, சச்சரவுகளை, கலவரங்களை நீங்கள் அறிவீர்கள். நான் ஏதோ அண்ணாவழியில்; பக்கத்திலே இருக்கின்ற மாநிலங்களுடன் ஒரு நல்லுறவு வைத்திருக்கின்ற காரணத்தால்; நான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் தூஷிக்காமல் இருக்கின்ற காரணத்தால்; நமக்குள்ள பங்கினை நாம் பெறுவதற்கு நியாயமான, சட்ட ரீதியான வழிமுறைகளை கையாண்டதாலும் அண்டை மாநிலங்கள் ஓரளவு நம்மிடத்திலே நட்புணர்வு கொண்டு, நம்முடைய தேவைகளை நிறைவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடகத்திற்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்?

அவர்களுக்கும் கூட, குறிப்பாக மழை இல்லாவிட்டால், மழை பொய்த்து விட்டால், கர்நாடகத்திற்கு தண்ணீர் எப்படி கிடைக்கும்? அவர்களை கேட்டால், மழை பொழிந்தால் தண்ணீர் தருகிறேன் என்பார்கள்.

இப்படி மழையே பொய்த்து விட்டால் அந்த நேரத்தில் ஒரு பெரிய முயற்சியை செய்ய வேண்டும் என்று நினைத்து, அப்படிப்பட்ட முயற்சியிலே நாம் பெற்றிருக்கின்ற வெற்றிகளிலே ஒன்றுதான் இந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு செலவு, எவ்வளவு பேருடைய உழைப்பு, எவ்வளவு பெரிய திட்டம். இங்கே இந்த பகுதி முழுவதும் வளைத்துப்போட்டு கட்டிடங்களை கட்டி, அந்த திட்டத்தை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதைப்போலவேதான், ராமநாதபுரம் மாவட்டத்திலே நரிப்பையூரிலே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி, அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதும் அந்த திட்டத்தால்தான் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீரை வழங்கி கொண்டிருக்கிறோம்.

இங்கே நீங்கள் தண்ணீரை சேமித்து அதை சென்னைக்கு கொடுக்கிறீர்கள். உங்களுடைய தாராள மனதை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தண்ணீர் கொடுப்பதிலே உள்ள புண்ணியம் சாதாரணமானதல்ல என்று சொல்வார்கள். தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டானா என்று? ஏன் என்றால் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காவிட்டால் பெரிய பாவச்செயல். நாம் இப்போது தவிக்காத வாய்க்கு - சென்னையிலே இருக்கிற மக்களுக்கு தண்ணீரை கொடுக்கின்ற பெரிய திட்டத்தை தொடர்ந்து தொடங்கி இன்றைக்கு நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.

இதுபோன்ற திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. நாம் மாமல்லபுரம் பாதையிலே உள்ள நெம்மேலி என்கின்ற அந்த பகுதியில் இதுபோன்ற இன்னொரு திட்டத்தை தொடங்கி, ஓராண்டு காலத்திற்குள்ளாக, அல்லது இரண்டாண்டு காலத்திற்குள்ளாக அந்த தண்ணீரும் சென்னைக்கு பயன்படுகின்ற அளவிற்கு நாம் அந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதை கணக்கு போட்டு பார்த்தால், இந்த ஆட்சிக்கே இன்னும் ஓராண்டு காலம்தானே இருக்கிறது? எப்படி இரண்டு ஆண்டு காலத்திலே நிறைவேற்ற முடியும் என்று யாராவது கணக்கு போட்டிருக்கலாம். நீங்கள் போடுகிறீர்களோ இல்லையோ சில வாரப்பத்திரிகைகள் கணக்கிட்டு பார்த்து, 2 ஆண்டு காலத்திலே எப்படி நிறைவேறும்? அதைப்போல ஒகேனக்கல் திட்டம் இரண்டு ஆண்டு காலத்திலே 2011-லே நிறைவேறும் என்று ஸ்டாலின் சொன்னார்.

எப்படி 2011, 2012-ல் நிறைவேற முடியும். இந்த ஆட்சிதான் அதற்குள் முடிந்து விடுமே என்று அவர்களும் சொல்லக்கூடும். ஒரு ஆட்சி முடியலாம். ஆனால் "திராவிட சகாப்தம்'' முடியாது என்பதை நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். திராவிட சகாப்தத்தில் இதுபோன்ற ஆட்சிகள் என்னுடைய தலைமையிலே உள்ள ஆட்சியாக இருந்தாலும் இருக்கலாம், அல்லது இந்த இயக்கத்திலே உள்ள மற்றவர்களுடைய தலைமையிலே உள்ள ஆட்சியாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் திராவிட சகாப்தத்திற்கு முடிவில்லை.

அந்த 'திராவிட' அல்ல!

திராவிட சகாப்தம் என்றதும் "திராவிட'' என்ற அடைமொழியை கொண்டவர்கள் எல்லாம் ஓ! - நம்மையும் சேர்த்துத்தான் சொல்கிறார் என்று கருதி ஏமாந்து விட வேண்டாம். "திராவிட'' என்றால், பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடம் - அண்ணாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிடம் - அந்த திராவிடமே தவிர, நீங்கள் கொண்டாடி கொண்டிருக்கின்ற தீராவிடம்'' அல்ல.

இது திராவிடம். திராவிடம் என்பது ஒரு இனம், ஒரு உணர்வு. அந்த இன உணர்வை கொண்டுதான் இன்றைக்கு இந்த ஆட்சியில் பல திட்டங்கள் அந்த உணர்வின் அடிப்படையிலே நிறைவேற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட நிறைவேற்றப்படுகின்ற திட்டங்களிலே ஒன்றுதான் இந்த தண்ணீர் திட்டம்.

நாம் நடத்துகின்ற ஆட்சியின் நிர்வாக திறமையினால், நாம் உருவாக்கிய முயற்சிகளால், நம்முடைய உள்ளத்திலே ஏற்பட்ட கவலைகளால், நம்முடைய மக்கள் தண்ணீர் இன்றி வாடக்கூடாது, அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நாம் கருதிய அந்த உறுதியால், நம்மால் இப்படிப்பட்ட பல நன்மைகளை, சாதனைகளை செய்ய முடிகிறது.

இன்னும் பத்து திட்டத்திற்கும் நாங்கள் தயார்

அப்படி செய்யப்பட்டு வருகின்ற ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான சாதனைகளில் ஒன்றுதான் தண்ணீர் தேவையை - குடிதண்ணீர் தேவையை நிறைவு செய்தது இந்த சாதனையாகும். இந்த சாதனையை ஏற்படுத்தி வருகின்ற நம்முடைய அரசுக்கு இதைப்போன்ற ஆதரவை வழங்கிக் கொண்டிருப்பீர்களேயானால் சென்னை மாநகரத்திற்கு இப்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த இரண்டு குடிநீர் திட்டங்கள் மாத்திரமல்ல இன்னும் பத்து திட்டங்கள் வேண்டுமானாலும், அவைகளை நிறைவேற்றக் கூடிய அந்த வலுவும், வளமான எண்ணமும் கொண்ட அரசு இந்த அரசு என்பதையும், இந்த அரசுக்கு நீங்கள் தொடர்ந்து தருகின்ற ஆதரவு தான் உங்களை வாழ வைக்கும் என்பதையும் எடுத்துச் சொல்லி - நீங்கள் எனக்குத் தந்த வரவேற்புக்கு வழியெங்கும் திரண்டு நின்று நீங்கள் காட்டிய நன்றி விசுவாசத்திற்கு - பாராட்டுக்கு - வாழ்த்துக்கு என்னுடைய அன்பான நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

அதிமுக ஆட்சி அலட்சியப்படுத்தியது

விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,

மத்தியில் 2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி ஏற்பட்டது. அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி. அப்போது ரூ.1000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதை அ.தி.மு.க ஆட்சி முறையாக பயன்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் அலட்சியத்தோடு அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்கள்.

2006-ம் ஆண்டு 5 முறையாக ஆட்சி பொறுப்பிற்கு வந்த கலைஞர் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோரை தொடர்ந்து வலியுறுத்தி நிதியை பெற்று நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் அந்த திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். நிச்சயமாக அந்த திட்டத்தையும் இந்த ஆட்சி சென்னை மக்களுக்காக நிறைவேற்றித்தரும்.

இன்று மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் திறக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியத் திட்டமாகும். சென்னை மக்களுக்கு மட்டும் அல்ல தமிழகம் முழுவதற்கும் தேவையான குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி வருவது, தி.மு.க. ஆட்சி.

வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் ரூ.616 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம், மதுரை மேலூர் பகுதியில் ரூ.880 கோடி செலவில் குடிநீர் திட்டம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.450 கோடி செலவில் தாமரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் திட்டம், வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் ஆகியவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மிகமுக்கியமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சுமார் ரூ.1,900 கோடி செலவில் செயல்படுத்திவருபவரும் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். திட்டங்களை தீட்டுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை இந்த அரசு. அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், மக்களுக்கு பயன் அளிக்கும் பணிகளை முடுக்கி விடும் இந்த ஆட்சிக்கும் நீங்கள் எல்லாம் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

இந்தத் திட்டத்தின் கீழ் வங்கக் கடலிலிருந்து கடல் நீரை எடுத்து அதை ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறை மூலம் சுத்திகரித்து, தூய குடிநீராக சென்னை நகருக்குத் தரவுள்ளனர்.

இதற்காக காட்டுப்பள்ளியில் ரூ. 600 கோடி செலவில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் கடல் நீரைக் குடிநீராக்கும் மையம் இதுதான். 60 ஏக்கர் பரப்பளவில் இந்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி 10 கோடி லிட்டர் கடல் குடிநீர் தயாரிக்கப்பட்டு சென்னை நகரில், 20 லட்சம் பேருக்கு விநியோகிக்கப்படும். ஆனால் சென்னையின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 60 லட்சத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐவிஆர்சிஎல் இன்பிராஸ்டிரக்சர் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த பெபீஸ்ஸா நிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்துடன் இதை செய்கின்றன. இந்த கடல்குடிநீரை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் 1000 லிட்டருக்கு ரூ. 48.74 என்ற விலைக்குப் பெற்று சென்னை மக்களுக்கு சப்ளை செய்யும். 25 ஆண்டுகளுக்கு இந்த நடைமுறை நீடிக்கும். அதன் பின்னர் இந்தத் திட்டம் முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்து சேரும்.

இதேபோன்ற இன்னொரு திட்டம்தான் நெம்மேலியில் உருவாகி வருகிறது. அது 2012ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்.அப்போது மேலும் 20 முதல் 25 லட்சம் வரை மக்களுக்கு கடல் குடிநீரை வழங்க முடியும். எனவே அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சென்னை நகரின் முழு மக்கள் தொகைக்கும் கடல் குடிநீரை விநியோகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X