For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டுக்கு ரூ. 1 கோடி கேட்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள்

Google Oneindia Tamil News

Tek Lal Mahto
ராஞ்சி: நோட்டுக்கு ஓட்டு என்பது இந்தியாவின் தேசிய கலாச்சாரமாகி விடும் போலிருக்கிறது. இதுவரை மக்களுக்கு மட்டுமே நோட்டுக்களைக் காட்டி வேட்டையாடினார்கள். இப்போது பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் தயாராகி விட்டார்கள்-ஜார்க்கண்ட்டில்.

தமிழகத்தில் மட்டும்தான் ஓட்டுக்கு நோட்டு பிரபலம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் மேலே எப்போதோ போய் விட்டவர்கள் ஜார்க்கண்ட் மக்கள் பிரதிநிதிகள்.

நரசிம்மராவ் தனது ஆட்சியைக் காப்பாற்ற முதன் முதலில் ஓட்டுக்கு நோட்டு 'திட்டத்தை' அறிமுகப்படுத்தினார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்ச்சா எம்.பியான, அக்கட்சியின் தலைவர் சிபு சோரன்தான் முதன் முதலில் ஓட்டுப் போட நோட்டு வாங்கி சோரம் போன முதல் தலைவர் என்று கூறலாம். அவர் அன்று அடித்த பல்டிதான் ராவ் அரசைக் காப்பாற்றியது.

இன்று ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப் போட, ஓட்டுக்கு ரூ. 1 கோடி கேட்கும் அளவுக்கு நிலைமை அங்கு கேவலமாகியுள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று ஸ்டிங் ஆபரேஷனை நடத்தி அவர்களை அம்பலப்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை இக்குழு அணுகி பேரம் பேசி அவர்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த தேக் லால் மஹதோ என்பவரை அணுகி ராஜ்யசபா தேர்தலில் எங்களுக்கு ஆதரவான ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். எவ்வளவு செலவாகும் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் ரூ. 1 கோடி கொடுத்தால் ஓட்டுப் போடத் தயார் என கூறியுள்ளார். கட்சித் தலைவர் சிபு சோரன் பணம் வாங்கி பால் மாறியதில் பிரபலம் என்பதால் அவரை விட ஒரு படி மேலே போயுள்ளார் இந்த தேக் லால் மஹதோ.

எத்தனை எம்.எல்.ஏக்களை கூட்டி வருவீர்கள் என்று கேட்டதற்கு நான்கு பேரைக் கூட்டி வரத் தயார் என்று கூறியுள்ளார் மஹதோ. ஒரு ஓட்டுக்கு ரூ. 1 கோடி வரை பேரமும் பேசியுள்ளார்.

எனக்கு ஒரு கோடி கொடுங்கள். என்னால் முடிந்தவரை ஆட்களை திரட்டி வருகிறேன். அவர்களுக்கும் ஒரு ஓட்டுக்கு ரூ. 1 கோடி வரை செலவாகும் என பச்சையாக பேசியுள்ளார் மஹதோ.

மேலும் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெல்ல தீவிரமாக இருப்பதாகவும், இதற்காக எவ்வளவு செலவு செய்யவும் அவர் தயார் எனவும் கூறியுள்ளார் மஹதோ.

அதேபோல கே.டி.சிங் என்ற வேட்பாளர் பெருமளவில் செலவு செய்து வருவதாகவும், அவர் நிச்சயம் வெல்வார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஜார்க்கண்ட் கட்சியைச் சேர்ந்த சிமோன் மராண்டியும் பணம் வாங்குவதில் கில்லாடி என்றும் ரெஃபர் செய்துள்ளார் மஹதோ. தொலைக்காட்சிக் குழு சிமோன் மராண்டியை அணுகியபோது அவரும் தனது பாக்கெட்டை நிரப்புவதில் தனக்குள்ள அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

மராண்டி தன்னை அணுகிய குழுவிடம், ரூ. 2 கோடி பணத்தை ரெடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆதரவை திரட்டுவது எனது வேலை. எனக்கு மட்டும் ரூ. 2 கோடி செலவாகும். மற்றவர்கள் கேட்கும் தொகையையும் கொடுத்து விடுங்கள் என்று படு பச்சையாக பேசியுள்ளார்.

எத்தனை பேரை திரட்ட முடியும் உங்களால், 4 பேர் முடியுமா என்று கேட்டதற்கு, இன்னும் நான் யாருடனும் பேசவில்லை. அவர்கள் எல்லாம் மனிதர்கள், விலங்குகள் அல்ல. பேசித்தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னால் முடியும் என்று கூறினார் மராண்டி.

ஆனால் தனக்கு கண்டிப்பாக ரூ 2 கோடி தந்து விட வேண்டும் என கறாராக கூறினார் மராண்டி.

தொலைக்காட்சிக் குழுவின் கணிப்புப்படி இந்த இருவருக்கும் ரூ. 3 கோடி கொடுத்தால் கட்சி மாறி வாக்களிக்கத் தயார் என்பது தெரிய வருகிறது.

காங்கிரஸ் நோட்டீஸ்

இவர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கூட இதில் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் ஜார்க்கணட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களுக்கு பக்கத்தில் கூட வர முடியாது. காரணம்,அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை மட்டுமே அவர்கள் ஆசைபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் ரஞ்சன், சவன் லக்டா, யோகேந்தர் சவா ஆகியோர் பேரம் பேசி மாட்டியுள்ளனர்.

இதையடுத்து இவர்களுக்கு ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக கமிட்டி உறுப்பினர் கேசவ் ராவ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிர்ச்சி

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், தேசிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பணத்துக்காக இவ்வளவு கேவலமாக இறங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், இது மிகவும் மோசமானது. சட்டவிரோதமானது. பணத்தைக் கொடுத்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது என்பது நடந்து விட்டால் அது மோசமான பாதைக்கு இட்டுச் சென்று விடும்.

இந்த மோசடி பேரத்தில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர் உமாசங்கர் அகேலா மீது பாஜக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க பெருமளவில் பணம் கேட்டு பேரம் பேசிய ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியும் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X