For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, என்னை விழுப்புரத்திற்கு அழைத்துச்சென்று தனியாக நாற்காலி ஒன்றையே போட்டு, கலைஞர் முதல்-அமைச்சராக வந்தால் தான் சமூகநீதியை காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட டாக்டர் ராமதாஸ், தற்போது சமூகநீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா என்று கேட்கிறார் என்றால் எல்லாம் காலத்தின் கோலம்தான் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றத்திலே 1994-ம் ஆண்டு தனியார் ஒருவரால் வழக்கு தொடுக்கப்பட்டு - ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப்பிறகு 13-7-2010 அன்று தான் உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கியது.

அந்த இடைக்கால தீர்ப்பில், ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமானால், அதனை நியாயப்படுத்துவதற்கு தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிகழ்வில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள அளவுகோலை மனதிலே கொண்டு, மாநில அரசு தேவையான புள்ளிவிவரங்களை சேகரித்து, தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், சாதிவாரியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அந்த ஆணையம் இடஒதுக்கீடு எவ்வளவு என்ற அளவை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடுகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்களை தமிழக அரசின் சார்பில் தனியாக சேகரிக்க வேண்டுமென்றால், அதற்கு நமக்கு சாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் அதற்கு சுமார் ரூ.400 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறலாம் என்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் கருத்து தெரிவித்திருக்கிறது. இதுபற்றி தமிழக அரசு ஆலோசித்து கொண்டிருக்கும் நிலையில்தான் அகில இந்திய அளவிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி மத்திய அரசில் பரிசீலிக்கப்பட்டு, அதை ஏற்கலாம் என்ற அளவிற்கு முடிவுகள் வந்துள்ளன.

அவ்வாறு மத்திய அரசின் சார்பிலேயே ஒரு கணக்கெடுப்பு சாதிவாரியாக எடுக்கும்போது, தமிழ்நாடு அளவில் தானாக ஒரு கணக்கெடுப்பை நடத்த வேண்டுமா, அல்லது மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பில் தமிழகத்தின் கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டு விடாதா என்றும் யோசிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பை பயோ-மெட்ரிக் சென்சஸ் அடிப்படையிலே எடுப்பதா அல்லது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடப்பதா என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இதிலே கூட "பயோ-மெட்ரிக் சென்சஸ் முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கலாம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்'' என்று பா.ம.க. நிறுவனர் ஒரு விழாவில் பேசி இன்றைய நாளிதழில் வெளிவந்துள்ளது. எந்த அடிப்படையில் அவர் அந்த கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று தெரியவில்லை.

ஆனால் நம்மை பொறுத்தவரையில், இந்த பிரச்சினை எழுந்ததும் 14-8-2010 அன்றே பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில் "மாநில அரசும், மத்திய அரசும் நிறைவேற்றி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் பலன்கள் கடைக்கோடி பிரிவினருக்கும் முழுமையாக சென்றடைய வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானதென்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து மேற்கொள்வதும் பயோ-மெட்ரிக் கணக்கெடுப்பு என்று சொல்லி சாதிவாரி கணக்கெடுப்பை ஒத்திப்போடாமல் இருப்பதும் தற்போது அவசிய தேவையாகும்.

தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான படிவத்திலேயே ஒருசில மாறுதல்களை செய்து சாதிவாரி கணக்கெடுப்புக்கான விவரங்களை சேகரித்திட முடியும் என நான் அறிகிறேன்'' என்று யாரும் என்னைக் கேட்டுக்கொள்ளாத நேரத்திலேயே-சமூகநீதிக்காக எனக்கு முன்பே குரல் கொடுத்ததாக கூறிக்கொள்வோர்-ஆர்ப்பாட்டம் செய்வோம், போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் அறிவிக்காத நிலையிலேயே நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவராக உள்ள நீதிபதி எம்.என்.ராவ் கூட, "சாதிகளால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் மட்டுமே போக்க முடியும். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தினால் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆன பிறகும் பல சமூகங்கள் முன்னேறவில்லை என்பது புள்ளிவிவரங்களுடன் தெரியவரும். அவ்வாறு தெரியவந்தால் அந்த சமூகத்தினர் மேலும் சலுகைகளை கோருவார்கள் என்பதாலேயே சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது'' என்று சொல்லியிருப்பதையும் நாம் மனதிலே கொள்ளலாம்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை சென்சஸ் அமைப்பிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதையும், பயோ மெட்ரிக் நடைமுறையுடன் இணைத்து மேற்கொள்ளக்கூடாது என்பதையும் வலியுறுத்தி அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அறிஞர்கள் விளக்கங்கள் வழங்கியுள்ளனர். அந்த விளக்கங்களின் அடிப்படையில் அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பயோ மெட்ரிக் நடைமுறையில் வெளி அமைப்புகள் பங்கேற்று ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அந்த அமைப்புகள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் சமரசம் செய்துகொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படக்கூடும்.

பயோமெட்ரிக் புள்ளிவிவரங்களை தொகுக்கும் மிகப்பெரிய பணி அந்த அமைப்புகளுக்கு அளிக்கப் பட்டிருப்பதே அதன் காரணம். சாதிவாரியான மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் தொகுக்கப்படும் பணி சமரசம் செய்து கொள்ளப்பட்டால், இந்த புள்ளிவிவரங்கள் தொகுக்கப்படும் நோக்கத்தை நிச்சயமாக தோற்கடித்துவிடும். மார்ச் 2011 உடன் இக்கணக்கெடுப்பின் அனைத்துப் பணிகளும் முடிந்து போய்விடும். ஆனால் பயோ மெட்ரிக் புள்ளிவிவரங்கள் தொகுக்கும் பணி மட்டும் மேலும் சிறிது காலத்திற்கு தொடரும் வாய்ப்பு உள்ளது.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வதற்கான சரியான அமைப்பு தேசிய சென்சஸ் அமைப்புதான் என்றும், 2011 பிப்ரவரி 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை வீடுவீடாக மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கிடும் பணி மேற்கொள்வதற்கான சரியான நேரம். சோதித்து அறியப்பட்ட, நம்பகத்தன்மை உள்ள சென்சஸ் அமைப்பிடமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் ஒப்படைக்க வேண்டும். பயோமெட்ரிக் புள்ளிவிவரங்கள் பெறும் நடைமுறையுடன் அதனை இணைப்பதால் ஏற்படும் பேராபத்துகள் தவிர்க்கப்படவேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளதையும் ஒதுக்கி தள்ளிவிட முடியாது.

மத்திய அரசாங்க பணிகளில் வன்னியர்களுக்கு இரண்டு சதவிகித இடஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கை வைத்த டாக்டர் ராமதாஸ் அவரது மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவை கூட்டத்திலோ அதுகுறித்து எப்போதாவது வாய் திறந்தது உண்டா?

"சமூகநீதியைப்பற்றி கருணாநிதி பேசலாமா?'' என்றும், "சமூகநீதியைப்பற்றி முதல்வர் கருணாநிதியோ, வேறு திராவிட கட்சித்தலைவர்களோ பேசலாமா?'' என்றும், "வன்னியர் சங்கம் தொடங்கி, பெரும் போராட்டங்களை நடத்தி, 30 உயிர்களை பலிகொடுத்த பிறகு தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு 20 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது'' என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாக ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது.

அந்த இருபது சதவிகித ஒதுக்கீடு வேண்டுமென்று அவர் போராடியிருக்கலாம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்திற்கு கழகம் ஆட்சிக்கு வந்ததும் மதிப்பு அளித்து, அவரையும் அழைத்துப்பேசி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று தனியாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டது என்ற வரலாற்றை டாக்டர் ராமதாஸ் மறைத்த போதிலும், அந்த போராட்டத்தில் உயிரிழந்த அந்த 30 உயிர்களுக்கும் குடும்ப நிதிஒதுக்கீடு அளித்து, மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கச்செய்து, அந்த இருபது சதவிகித இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வரும் ஒவ்வொருவரும் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்.

சமூகநீதியைப்பற்றி திராவிட கட்சித்தலைவர்கள் பேசலாமா என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுமானால் கேட்கலாம். ஆனால் சமூக நீதிக்காகவே தோன்றிய கட்சி தான்; நீதிக்கட்சி எனும் திராவிட இயக்கங்களின் வேர்க்கட்சியாகும். நீதிக்கட்சி ஆட்சியிலேதான் முதன்முதலாக 1921-ம் ஆண்டில் முதல் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க இடஒதுக்கீட்டு ஆணையே வழங்கப்பட்டது. சமூக நீதியைப்பற்றி நானோ, அல்லது தமிழர் தலைவர் வீரமணியோ மற்ற திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களோ பேசக்கூடாது என்றால் வேறு யார்தான் பேசுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்பதை டாக்டர் ராமதாசே யோசித்து பேசியிருப்பாரானால் உணர்ந்து கொண்டிருக்க முடியும்.

நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, என்னை விழுப்புரத்திற்கு அழைத்துச்சென்று தனியாக நாற்காலி ஒன்றையே போட்டு, கலைஞர் முதல்-அமைச்சராக வந்தால் தான் சமூகநீதியை காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட டாக்டர் ராமதாஸ், தற்போது சமூகநீதியைப்பற்றி கருணாநிதி பேசலாமா என்று கேட்கிறார் என்றால் எல்லாம் காலத்தின் கோலம்தான் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X