For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அம்மா' ஆட்சியில் விவசாயிகளின் வேதனை கொஞ்சமா நஞ்சமா?-வீரமணி

Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க. ஆட்சிமீது குற்றம் குறைகாண துரும்புகளைத் தேடி அலைந்து ஊதுகிறார்கள்; “அம்மா ஆட்சியில்"" விவசாயிகளின் வேதனை கொஞ்சமா நஞ்சமா? இன்று அதுபோல் ஏதும் உண்டா?

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் முதல்வர் கலைஞர் தலைமையில் கடந்த 4 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி, தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று பொதுவானவர்கள் - விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நடுநிலையாளர்கள்- பாராட்டும் வண்ணம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது!

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.வால் அளிக்கப்பட்ட அத்துணைத் தேர்தல் வாக்குறுதிகளும் ஒன்றுவிடாமல் நான்கு ஆண்டுகாலத்திலேயே நிறைவேற்றப்பட்டு விட்டது!

ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பதுகூட, ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு என்ற அதிசய சாதனைத் திட்டம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்டு, சொல்லாததையும் செய்து முடித்து பீடுநடை போடுகிறது!

குடிசைகளே இல்லாத தமிழ்நாடு என்று இலக்கு நிர்ணயித்து, கான்கிரீட் வீடுகள் சுமார் 3 லட்சத்திற்குரிய திட்டத்தை முதல் கட்டமாக திருச்சியில் அறிவித்து, சென்னையில் கடந்த 15 ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ரூ.75 ஆயிரம் உதவி அவ்வீடுகளுக்கு என்று தொகையை உயர்த்தி அறிவித்துள்ளார்கள்.

இது முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியாகும். (மத்திய அரசு தரும் நிதி என்பதேகூட மாநிலங்களின் வருவாயிலிருந்து கிடைப்பதுதான்) வளர்ச்சிப் பாதையை நோக்கி நாளும் மூன்று தொழிற்சாலைகள், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் போன்ற அறிவியல் தொழில்நுட்பத் திட்டங்கள், இலவச நிலப்பட்டா, மனைப்பட்டா - விவசாயிகளின் கடன் - வட்டி தள்ளுபடி திட்டங்களால் - விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழும் நிலை.

சிற்சில மாநிலங்களில் உள்ளதுபோல விவசாயிகள் தற்கொலை என்பதே இல்லாத மாநிலமாக உள்ளது; இன்று ஏதோ விவசாயிகள் வாடுவதாக நீலிக் கண்ணீர் விடும் எதிர்க்கட்சித் தலைவர், முதல்வராக இருந்தபோது, மன்னார்குடியில் பட்டினியால் இறந்துபோன விவசாயிபற்றி இன்று அவரோடு கூட்டணியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சட்டமன்றத்திலும், உள்ளேயும், வெளியேயும் 'முழங்கியதை" மக்கள் மறந்துவிடவில்லை!

தி.மு.க. ஆட்சிமீது குற்றம் குறைகாண துரும்புகளைத் தேடி அலைந்து ஊதுகிறார்கள்; “அம்மா ஆட்சியில்"" விவசாயிகளின் வேதனை கொஞ்சமா நஞ்சமா? இன்று அதுபோல் ஏதும் உண்டா?

கட்சிக்காரர்களைக் கூட்டி அவர்களுக்கு உற்சாகமூட்டி தொடர வைக்கும் உரிமை கட்சித் தலைமைக்கு - எதிர்க்கட்சிக்கு உண்டு. ஆனால், அதில் மிகவும் முதல்வரை, முதல்வர் குடும்பத்தினரை தரந்தாழ்ந்து நாக்கில் நரம்பின்றி விமர்சிப்பது ஒரு முன்னாள் முதல்வருக்கு அழகாகுமா?

இவரது தலைவராலேயே 'தலைவர்" என்று அழைக்கப்பட்டவர் என்ற அரசியல் வரலாறு கூட அறியாது கொச்சைப்படுத்தினால், அது நடுநிலையான வாக்காளர்களிடம் அவர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். தி.மு.க. வயலுக்குப் போடப்படும் உரங்களாகவே அவைகள் பயன்படும் என்ற பாலபாடம்கூட அறியாத அன்றாட போராட்ட அரசியல் நடத்துகிறார்!

மற்றொரு தலைவரான பா.ம.க. நிறுவனர், தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு ஆட்சியாளருக்கு எதிரான 'போர்-ஆட்டம்" நடத்துவதாகக் கூறி, மிரட்டி தனது தொடர் தோல்விகளை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்!

சென்னையின் போக்குவரத்து நெரிசல், மக்கள் தொகைப் பெருக்க விளைவுகள் காரணமாக, (சாட்டிலைட் டவுன்) சுற்றுப்புற நகரம் உருவாகும் திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன்பே அறிவித்தார் முதல்வர் கலைஞர்; அதை எதிர்த்து தடுத்து முட்டுக்கட்டை போட்டதின் விளைவு, பொதுமக்கள் அல்லல்படுகிறார்கள்!

நமது முதல்வரின் அளவுக்கு அதிகமான “ஜனநாயகப் பண்புகளும்"" - பெருந்தன்மை பொங்கும் தாட்சண்யங்களும், வளர்ச்சியை தள்ளிப் போட வைத்துவிட்டதே!

நாட்டு வளர்ச்சியில் போக்குவரத்து, தகவல் தொடர்பு, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி இவைகள் அடிப்படையானவை.

நமது போக்குவரத்தால் உலகம் ஒரு கிராமமாகி சுருங்கிவிட்ட நிலையில், விமானப் போக்குவரத்து மிக அதிகமாகவேண்டும். அப்போதுதான் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி - இறக்குமதி முதலியவற்றிற்குப் பயன்படும்!

மருத்துவத்திற்கே வெளிநாட்டவர்கள் நம் நாட்டிற்கு வருகிறார்களே இந்நிலையில், பெங்களூருவிலும், அய்தராபாத்திலும் முறையே கருநாடகமும், ஆந்திரமும் மிகப் பிரம்மாண்ட விமான நிலையங்களை அமைத்துவிட்டது, மத்திய அரசின் சிறப்பான பணி - மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு!

அம்மாநிலங்களுக்கு முன்பாகவே எப்பொழுதோ முடிந்திருக்கவேண்டிய புதிய விமான நிலையங்கள் - சுற்றுச்சூழலைக் காக்கும் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் - அமையாமல் தடுத்து காலந்தாழ்ந்தமைக்கு எதிர்க்கட்சிகள்தானே காரணம்!

ஏழை விவசாயிகள் மீதோ, நியாயமான அளவு நிலம் உடையவர்கள்மீதோ இந்த அரசுக்கு விரோதமான எண்ணம் கிடையாது; ஆனாலும், அவர்கள் நலத்தைப் பாதுகாத்தும், நேரத்தில் புது விமான நிலையம் வருவதும் முக்கியமல்லவா?

பரஸ்பர நல்லெண்ணத்துடன் அமையவேண்டும் என்பதால்தான், அரசியல் கட்சிகளின் கூட்டத்தை 22.5.2007 இல் நமது முதல்வர் இந்த கிரீன்ஃபீல்டு விமான நிலைய சம்பந்தமான கூட்டத்தைக் கூட்டித்தானே முடிவெடுத்தார்?

மண் பரிசோதனை அதுவும் மூன்று ஆண்டுகள் தாமதத்திற்குப்பின் - நடைபெறும்போது, இதை எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும், பா.ம.க. தலைவர் டாக்டர் இராமதாஸ் அவர்களும் எதிர்த்து கிளர்ச்சி செய்வதாக விவசாயிகளை திசை திருப்பி - தூண்டிவிட்டு ஆட்சிக்கு எதிராக அறிக்கைவிட்டால், அதனால் ஏற்கெனவே காலதாமதம் ஆன அந்தத் திட்டம் மேலும் காலதாமதம் ஆனால், அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஊறு செய்வதாகாதா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான யோசனைகளை ஆளுங்கட்சிக்குத் தருவது முக்கியம். அதைவிடுத்து, தொட்டதெற்கெல்லாம் அப்பாவி மக்களைக் கிளப்பிவிட்டால், அது வளர்ச்சிப் பாதையை முற்றாக அழித்துவிடாதா?

தி.மு.க. ஆட்சியும், மத்திய அரசும் மக்களுக்கு இதை நன்கு விளக்கிவிட்டு, அவர்களது பசுமை சிந்தனை - வாழ்வு - வளம் பாதிக்காவண்ணம் - உடனடியாக திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவேண்டும்.

உண்மைகள் கள பலி ஆகக்கூடாது; பிரச்சாரம்! பிரச்சாரம்! என்பதை முடுக்கிவிட்டு மக்களுக்கு இத்திட்டங்களால் ஏற்படும் தொலைநோக்கு நன்மைகளையும், உடனடியான நட்ட இன்மைகளையும் - மாறான லாபங்களையும் விளக்கிடவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வரவேண்டும் என்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X