For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியப் பெருங்கடலின் அமைதியை சீர்குலைக்கும் இலங்கை!-ருத்ரகுமாரன்

By Chakra
Google Oneindia Tamil News

Rudrakumaran
சென்னை: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத் தமிழர்களிடமிருந்து பறித்த இலங்கை அரசு, தற்போது இந்திய மீனவர்களையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுத்து சீன நிறுவனங்களுக்கு அந்த உரிமையை வழங்கி வருகிறது.

இது இந்துமகா சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் விசுவநாதன் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

இந்திய ஆட்சியாளர்களும் தமிழக அரசு தலைவர்களும் இந்த விஷயத்தில் நீண்ட மௌனம் சாதிப்பது இந்தியாவுக்கும் தமிழக மற்றும் தமிழீழ மக்களுக்கும் ஆபத்தான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கும், என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக பாக் நீர்சந்திப்பிலும் அதனையொட்டிய கடற் பகுதிகளிலும் இலங்கையின் ஆயுதப் படைகளினால் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அவர்களது கடல்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுக் கடலில் வீசப்படுவதும் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழரின் ஆழ்ந்த கவலைக்கும் அக்கறைக்கும் உரிய விஷயமாகியுள்ளது என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்துகிறது.

இலங்கைத் தீவில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையையும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலும், சிங்களம் தமிழின மக்கள் மீது கொண்டுள்ள இனவஞ்சம் இலங்கைத் தீவின் எல்லைகளையும் தாண்டி தமிழக மக்களையும் நோக்கி நீண்டிருப்பதைக் காட்டுகிறது. இது இலங்கையின் எல்லைதாண்டிய ஒடுக்கு முறையின் கொடூர முகத்தினையும், அது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வினையுமே நிதர்சனமாக வெளிப்படுத்துகிறது.

வரலாற்றுக் காலந்தொட்டே தமிழக மீனவர்கள் இந்துமகா சமுத்திரத்தின் பாக் நீரிணைத் தொடரிலும் மன்னார் வளைகுடாவிலும் அதனையொட்டிய கடற்பரப்பிலும் மீன்பிடிப்பதிலும் ஏனைய கடல் வளங்களினை ஈழத் தமிழ் மீனவர்களுடன் இணைந்து பகிர்வதிலும் வலுவான நல்லுறவினையும் வாழ்வாதார உரிமையினையும் கொண்டிருப்பவர்கள்.

இலங்கையின் கடற்படை கடலில் நிகழ்த்தும் வன்முறை தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையினை மறுப்பதோடு அதனைப் பாதுகாக்க வேண்டிய இந்தியாவின் இறையாண்மையினையும் தமிழக அரசின் ஆட்சி வலுவினையும் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது. இதனையிட்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத் தமிழர்கள் மிகுந்த விசனம் கொண்டுள்ளார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைத் தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத் தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த இலங்கை, தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற் பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீன நிறுவனங்களுக்கு அக்கடற் பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்பட அனுமதிப்பதும் இந்துமகா சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆழமாக பதிவு செய்ய விரும்புகின்றது.

இந்த விஷயத்தில் இந்திய ஆட்சியாளர்களும் தமிழக தலைவர்களும் கொண்டிருக்கக்கூடிய நீண்ட மௌனம் இந்தியாவுக்கும் தமிழக மற்றும் தமிழீழ மக்களுக்கும் ஆபத்தான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கும்.

சீமான் கைதுக்கு கண்டனம்:

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தி வரும் இனப் படுகொலையினையும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் வன்முறைகளினையும் எதிர்த்து பாதிக்கப்படும் மக்களின் அடிப்படை உரிமைக்காக குரல்கொடுத்து வரும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையினை மிகவும் கவலைக்கும் கண்டனத்துக்குரிய விஷயமாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நோக்குகிறது.

சீமான், தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மக்களுக்குமாக எழுப்பும் ஆதரவுக் குரல் ஒடுக்கப்படும் மக்களுக்கு நியாயம் கோரும் வகையிலானது. எல்லை தாண்டும் இலங்கையை அச்சுறுத்தக் கூடியது. சீமான் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறியீட்டு வடிவில் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழினத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்படுவதற்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்து விடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.

எனவே தமிழக அரசு இவ்விஷயத்தினைக் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த சீமானை விடுதலை செய்வதற்கான ஆவன செய்ய வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X