For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சர்ச்சை-விஸ்வநாதன் ஆனந்த்திடம் மன்னிப்பு கேட்டார் சிபல்

Google Oneindia Tamil News

Viswanathan Anand
டெல்லி/ஹைதராபாத்: குடியுரி்மை தொடர்பான சர்ச்சைக்கு முழுப் பொறுப்பேற்றுள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இதற்காக உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்:

சென்னையைச் சேர்ந்த ஆனந்த், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆவார். உலகப் புகழ் பெற்ற காஸ்பரோவ், கார்போவ் ஆகியோரின் மனம் கவர்ந்த, அவர்களால்வெகுவாக பாராட்டப்பட்ட இந்திய வீரர். இந்தியாவிலிருந்து போய் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை அடுத்தடுத்து வென்று வந்தவர்.

இந்திய செஸ்ஸுக்கு உலக அரங்கில் முகவரியாக திகழ்ந்தவர். இன்றளவும் இந்திய செஸ் என்றால் ஆனந்த்தான் முதலில் நினைவுக்கு வருவார். இந்திய அரசின் பல்வேறு உயரிய பட்டங்களையும், பாராட்டுக்களையும் பெற்றவர்.

3 பத்ம விருதுகளைப் பெற்றவர்:

அவரது 18வது வயதில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்துக் கெளரவித்தது. 2000ம் ஆண்டில் பத்மபூஷன் விருது பெற்றார். 2007ல் பத்மவிபூஷன் விருது பெற்றார். அர்ஜூனா விருதும் வாங்கியுள்ளார்.

இப்படி இந்தியாவால் பாராட்டப்பட்ட கெளரவிக்கப்பட்ட ஆனந்த்தைப் பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேட்டுள்ளது மத்திய மனித வளத்துறை. இந்தியர் என்பதை நிரூபிக்குமாறும் ஆனந்த்துக்கு அது உத்தரவிட்டுள்ளது.

அதை விட மோசமாக, ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆனந்த்துக்கு அளிக்கவிருந்த கெளரவ டாக்டர் பட்டத்தையும் அது நிறுத்தி வைத்து விட்டது. இதனால் ஆனந்த் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த டாக்டர் பட்டமே எனக்கு வேண்டாம் என்றும் அவர் நிராகரித்து விட்டார்.

சர்ச்சை சீக்கியருக்கு விருது கொடுத்த இந்தியா!

ஆனந்த்துக்கு ஸ்பெயினில் ஒரு வீடு உள்ளது. தொழில் நிமித்தமாக அவர் பெரும்பாலான நாட்களை ஐரோப்பிய நாடுகளிலேயே கழிக்க வேண்டியிருப்பதால் ஸ்பெயினில் வீடு வாங்கி தங்கியுள்ளார். அதேசமயம், மனதளவில் அவர் சிறந்த இந்தியராகவே இருக்கிறார் என்பதை அனைவரும் அறிவர். பத்ம விருதுகளைக் கொடுத்த இந்திய அரசுக்கும் இது நன்றாகவே தெரியும். அதனால்தான் அந்த விருதுகளையே கொடுத்தது. இதே மத்திய அரசுதான் குற்ற வழக்கில், தொடர்புடைய இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து சீக்கியர் ஒருவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்து சர்ச்சையில் சிக்கியது.

ஆனால் இந்தியாவுக்கு பெருமையை மட்டுமே தேடித் தந்து கொண்டிருக்கும் ஆனந்த்தைப் பார்த்து இந்தியரா என்று கேட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.

தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆனந்த் வந்துள்ளார். இந்த சர்ச்சை குறித்து அவர் கூறுகையில், பல்வேறு நாட்டு கணிதவியலாளர்களுடன் செஸ் விளையாட வந்துள்ளேன்.

ஒரு இந்தியனாகத்தான் நான் இதுவரை ஆடியுள்ளேன். இந்தியக் கொடியைத்தான் உயர்த்திப் பிடித்துள்ளேன். இந்திய பாஸ்போர்ட்தான் வைத்துள்ளேன் என்றார் ஆனந்த்.

ஆனந்த்துக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது தொடர்பான திட்டத்தை கடந்த ஆண்டே ஹைதராபாத் பல்கலைக்கழகம் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் அந்த கோப்பு மீது முடிவெடுக்காமல் இழுத்தபடி இருந்தது மனித வளத்துறை. இரண்டு முறை ஆனந்த்தின் குடியுரிமை குறித்து அது கேள்வி எழுப்பியிருந்தது. அவர் இந்தியரா அல்லது ஸ்பெயின் குடியுரிமை பெற்றவரா என்று கேட்டிருந்தது. ஆனந்த் ஸ்பெயின் குடிமகன் என்று மனித வளத்துறைக்கு வந்த தகவலே அதற்குக் காரணமாம். ஆனால் இதுகுறித்து தெரிந்து கொள்ள, உறுதிப்படுத்திக் கொள்ள எத்தனையோ எளிதான வழிகள் இருந்தும் கூட ஏதோ ஒசமா பின் லேடனைப் பிடிக்கும் ரேஞ்சுக்கு மனித வளத்துறை நடந்து கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

எரிச்சலாக உள்ளது-ஆனந்த் மனைவி அருணா:

ஆனந்த் குறித்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவி அருணா கருத்து தெரிவிக்கையில், இந்த விவகாரத்தால் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. மாறாக எரிச்சலடைந்துள்ளோம். பலமுறை ஆனந்த் குடியுரிமை குறித்து நாங்கள் விளக்கி விட்டோம். இப்போது வெளிப்படையாக பிரச்சினையாக்கியுள்ளனர்.

ஏன் இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்பது புரியவில்லை. ஆனந்த் எப்போதுமே பெருமைக்குரிய இந்திய குடிமகன்தான். இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

மன்னிப்பு கேட்ட சிபல்:

ஆனந்த் அவமானப்படுத்தப்பட்ட விவகாகரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், ஆனந்த்தைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் டாக்டர் பட்டத்தைப் பெறப் போவதில்லை என்று ஆனந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர் இதுகுறித்து சிபல் கூறுகையில், நடந்த அனைத்துக்கும் நான் மன்னிப்பும், வருத்தமும் கேட்டுக் கொள்கிறேன். ஆனந்த்துக்கு இன்றே கெளரவ டாக்டர் பட்டத்தைத் தர விரும்புகிறோம். இருப்பினும் இன்று அந்த நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக ஆனந்த் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு வசதிப்பட்ட இன்னொரு நாளில் கெளரவ டாக்டர் பட்டத்தைத தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

டாக்டர் பட்டத்தை தருவதில் எந்த சிக்கலும் இல்லை. அதைப் பெற்றுக் கொள்ள ஆனந்த் விருப்பம் தெரிவித்து விட்டார். அவருடைய வசதிக்கேற்ற நாளில் அது வழங்கப்படும்.

சில நிர்வாக காரணங்களால் பட்டத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. இனி ஒரு நிமிடம் கூட பட்டத்தை வழங்க தாமதம் செய்ய மாட்டோம் என்றார் சிபல்.

சற்றும் கவலைப்படாத ஆனந்த்:

செஸ் விளையாட்டில் எதிரிகளை எந்த அளவுக்கு ரிலாக்ஸ்டாக சந்திப்பாரோ அதேபோலத்தான் இன்று ஹைதராபாத் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டின்போது ஆனந்த் காணப்பட்டார்.

தனது குடியுரிமை குறித்து எழுந்துள்ள சர்ச்சையால் அவர் சலனப்பட்டதாக தெரியவில்லை.

ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தின் ஹாலில் இன்று 40 கணித மேதைகளுடன் செஸ் ஆடுகிறார் ஆனந்த். அந்தப் போட்டியில் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X