For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் போட்டியிட ஜெ. திட்டம்?

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, குறுகிய காலத்தில் 2வது முறையாக திருச்சி செல்லவுள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் அவர் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 14ம் தேதி திருச்சியில் பிரமாண்ட கண்டனக் கூட்டத்தை அதிமுக நடத்தியது. திருச்சியே திமிலோகப்படும் படியான கூட்டம் அது. இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

இந்தக் கூட்டத்திற்கு வந்தபோதே, அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மதியம் தான் கோவிலுக்க வரவுள்ளதாகவும், தீர்த்த பூஜை செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதாவிடமிருந்து கோவில் நிர்வாகத்திற்குத் தகவல் போயுள்ளது.

ஆனால், தீர்த்த பூஜையை காலை நேரத்தில்தான் செய்வார்கள். மற்ற நேரத்தில் செய்ய மாட்டார்கள் என கோவிலிலிருந்து தகவல் போனது. அப்போது சசிகலா, தனது நாத்தனார் ராஜலட்சுமி அம்மாள் தஞ்சாவூரில் இறந்து ஒருவாரம்தான் ஆகிறது. எனவே 30 நாள் வரை தான் கோவிலுக்கு போகக்கூடாது என்பதை ஜெயலலிதாவிடம் தெரிவித்தாராம்.

இதையடுத்து தனது ஸ்ரீரங்கம் கோவில் திட்டத்தை கைவிட்டார் ஜெயலலிதா. இந் நிலையில் ஆகஸ்ட் 26ம் தேதி தான் ஸ்ரீரங்கம் வரவுள்ளதாவும், பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கோவிலுக்குத் தகவல் கொடுத்துள்ளாராம் ஜெயலலிதா.

திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டத்தின்போது எனது மூதாதையர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான், நான் உங்கள் ஊர்க்காரப் பெண்தான். எனது சொந்த ஊரில் வந்து பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் ஜெயலலிதா. இப்போது ஸ்ரீரங்கத்திற்குப் போவதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஜெயலலிதா மனதில் சில திட்டங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

வருகிற சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கத்திற்கு உட்பட்ட திருச்சி தொகுதியை அதிமுக வென்றது. அதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் அதிமுகவே வென்றது.

பிராமனர்கள் சமூகத்தினர் பெருமளவில் நிறைந்த ஸ்ரீரங்கம் தொகுதியை அதிமுகவின் கோட்டை என்று கூறலாம். சென்னை மாகாணம், தமிழ்நாடு என்ற பெயர் மாறியதற்குப் பின்னர் 1971 முதல் 2006 வரை அங்கு மொத்தம் 9 சட்டசபைத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், 6 முறை அதிமுகவே வென்றுள்ளது.

அதிமுகவுக்கு மிகவுகம் சாதகமாக இருக்கக் கூடிய தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது ஸ்ரீரங்கம். எனவே இங்கு போட்டியிட ஜெயலலிதா திட்டமிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆண்டிப்பட்டி மிகவும் சவுகரியமாக இருந்தாலும் கூட அங்கிருந்து மாற ஜெயலலிதா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த முறை ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை ஜெயிக்க விடாமல் தடுக்க திமுக தரப்பிலிருந்து கடுமையான முயற்சிகள் நடைபெறலாம் எனக் கருதப்படுகிறது.

திமுக தென் மண்டல பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டுக்கு இப்போது தேனி மாவட்டம் வந்துள்ளது. ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிட்டால், அவரைத் தோற்கடிக்க அழகிரி கடும் முயற்சிகளில் இறங்கக் கூடும்.

மேலும் ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி விட்டதாக ஜெயலலிதா கூறிய புகாரும் கூட அழகிரியை கடுமையான சீற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. எனவே ஜெயலலிதாவை வீழ்த்த கடுமையான வியூகங்களை அவர் வகுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக பிரசாரம் செய்து, ஆதரவு திரட்ட வேண்டிய நிலையில், அழகிரி ஒருவருக்காக ஆண்டிப்பட்டி பற்றிக் கவலைப்படுவது சரியாக இருக்காது என்று ஜெயலலிதா நினைப்பதாகத் தெரிகிறது.

எனவே ஸ்ரீரங்கத்தில் போட்டியிட அவர் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ஆண்டிப்பட்டியிலும் அவர் போட்டியிடக் கூடும். இதன் மூலம் முக்குலத்தோரை தான் கைவிட்டு விடவில்லை என்று காட்டிக் கொள்ளலாம் என்று ஜெயலலிதா திட்டமிட்டுவதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X