For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவபுண்ணியம் எம்.எல்.ஏவை விலைபேசும் சக்தி உலகில் யாருக்கும் இல்லை-தா.பாண்டியன்

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ சிவபுண்ணியத்தை திமுகவுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவரைப்பற்றி எங்களுக்கு தெரியும். அவரை விலை பேசும் சக்தி உள்ளவர் இந்த உலகத்தில் இல்லை என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்.

சென்னையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய தா.பாண்டியன் பேசுகையில்,

தமிழக அரசு 194 ஏக்கர் நிலத்தை திரைப்படக் கலைஞர்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீடு கட்டுவதற்காக 24,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாங்கள், எங்களுக்கு 1000 ஏக்கர், 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்கவில்லை. தங்களது சொந்த மண்ணில், பிறந்த மண்ணில் ஏழை மக்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்குமாறு கேட்கிறோம். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.

சென்னை நகரில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டால், சென்னை நகரில் சென்ட் விலை என்ன என்று கேட்டு ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார், தாசில்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் வீடு இல்லா அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்கவில்லை என்றால் அதற்கான இடங்களை நாங்களே கையகப்படுத்துவோம்.

அதற்கான போராட்டம் தமிழகம் முழுவதும் தற்போது நடந்து வருகிறது. சில இடங்களில் கையகப்படுத்தியும் உள்ளோம். சென்னை நகரில் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும் என்றார்.

பின்னர் பாண்டியனிடம் செய்தியாளர்கள், சிவபுண்ணியம் எம்.எல்.ஏ.வை தி.மு.கவுக்கு இழுக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு,

அவரைப்பற்றி எங்களுக்குத் தெரியும். அவரை விலை பேசும் சக்தி உள்ளவர் இந்த உலகத்தில் இல்லை என்றார்.

அதேபோல ஜீவானந்தம் படத்தை சட்டசபையில் வைக்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளது குறித்து கேட்டபோது, இதற்கு முன்னாலேயே மத்திய அரசு அவருக்கு தபால் தலை வெளியிட்டு விட்டது என்றார் பாண்டியன்.

தடுமாறுவது திமுகதான்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

இந் நிலையில் கொள்கைகளிலிருந்து தடுமாறுவது திமுக தான், கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் போன்ற அடிப்படை கொள்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் மாற்றிக் கொண்டது இல்லை. இனியும் மாற்றிக் கொள்ளப் போவதும் இல்லை.

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு முதல் தொழிற்சங்க உரிமை மறுப்பு வரை திமுகதான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு, பல்வேறு விஷயங்களில் மாநில உரிமைகளை அப்பட்டமாக பறிக்க முயல்வதும், மாநில சுயாட்சிக்காக முழங்கிய திமுக மனு அனுப்புவதோடு தன்னை நிறுத்திக் கொள்வதும்தான் இப்போது நடக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சியை பொருத்தவரை மாற்றுக் கொள்கையை முன்வைத்து மக்கள் நலனுக்காக போராடி வருகிறது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் ஆளும் திமுக அரசும் மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தும்போது, அதை எதிர்த்துப் போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த தயக்கமும் இல்லை. அவ்வாறு போராடுவது தன்னுடைய அடிப்படை கடமை என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

மாறாக, தாராளமயமாக்கல் கொள்கைகளை தழுவியுள்ளதால், தடுமாறுவதும், நிலை மாறுவதும் தி.மு.க.தானே தவிர, கம்யூனிஸ்ட்டுகள் அல்ல.

திமுக அரசின் சாதனைகளை மார்க்சிஸ்ட் கட்சி மறைக்கப் பார்க்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கடுமையான விலைவாசி உயர்வு, வரலாறு காணாத மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்றவற்றையெல்லாம் யாரும் மறைக்க முடியாது.

சமூக நீதிக்காகவே தோன்றிய இயக்கம் என்று திமுக கூறிக் கொள்கிறது. ஆனால், திமுக அரசின் நடவடிக்கைகள் சமூக நீதிக்கு எதிராகவே உள்ளன. சமூக நீதிக்காக போராடுவோர் மீது காவல் துறையை ஏவி விடுவதும், பொய் வழக்கு போடுவதும்தான் திமுக அரசின் நடைமுறையாக உள்ளது.

உத்தபுரம் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் விவகாரம் வரை தலித் விரோத அணுகுமுறையையே திமுக அரசு பின்பற்றுகிறது. இவை குறித்த செய்திகள் எல்லாம் யாரும் மறைக்காமல், பத்திரிகைகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

திமுகவுக்கு அலை அலையாக ஆதரவு பெருகவில்லை. மாறாக, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் காரணமாக அதிருப்தி அலைதான் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X